ஒரே இரவில் கையில் எடுத்ததும்…. அவ்விரவே படித்து முடித்துவிட்டுக் கீழே வைத்ததுமான புத்தகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். ஆம். அப்புத்தகம்தான் : லட்சுமி பாலகிருஷ்ணன் எழுதிய “எழுதாப் பயணம்.”
ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச நிலையில் இருக்கும் குழந்தைகளின் உலகம் பற்றிய அற்புதத் தொகுப்பு இது.
தங்கை லட்சுமியின் துணைவன் பாலபாரதி துள்ளல் மிகு இளைஞனாய் கவிஞனாய் எனக்கு இருபதாண்டுகளுக்கு முன்னமே அறிமுகமாகி தோழனாகத் தொடர்பவன். இவ்விருவரது புதல்வன்தான் கனிவமுதன்.
பிறந்த பொழுதுகளில் புலப்படாத சில விஷயங்கள் அச்சிறுவன் வளரும் பொழுதுகளில் வெளிபடத்தொடங்குகிறது இப்பெற்றோருக்கு. ஆம் தங்கள் மகன் சற்றே ஆட்டிச நிலையில் இருக்கும் விசயம்தான். ஆரம்பத்தில் மன உளச்சல்களுக்கு உள்ளானாலும் எதார்த்தத்தை எதிர்கொள்ளத் துணிகிறார்கள் லட்சுமியும் பாலபாரதியும்.
அத்துணிவுமிகு பயணம்தான் இங்கே நூலாகியிருக்கிறது. நம் குழந்தைக்கா இந்த நிலை என்று அழுது புலம்பிக் கொண்டிருக்காமல் இத்தகைய குழந்தைகளை முதலில் அதனது நிறைகுறைகளோடு ஏற்றுக் கொள்வது…
நமக்கு அதுவரையிலேயே அறிமுகமாகாத ஆட்டிச உலகத்தை நாம் முதலில் அறிந்து கொள்வது… அக்குழந்தைகளது விருப்பு வெறுப்புகளை நிதானமாக உணர்ந்து கொள்வது… இவர்களது உலகம் புரியாத வேற்றுலகவாசிகளிடம் (ஆம்…. இம்மழலைகளை அறிந்து கொள்ளாத பெற்றோர்… உறவினர்… ஆசிரியர்… மருத்துவர் என அனைவருமே இவர்களைப் பொறுத்தவரை வேற்றுலகவாசிகள்தான்….) எவ்விதம் இவர்களது உரிமைகளுக்காக குரல் எழுப்பிப் போராடுவது… என அனைத்தையுமே புட்டுப் புட்டு வைக்கிறார் தங்கை லட்சுமி.
புத்தகமே வாசிக்கும் பழக்கம் இல்லாத ஜென்மங்களுக்குக்கூட புரியக்கூடிய நிலையில் எழுதப்பட்டிருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பே.
சொற்களை….
வார்த்தைகளை….
வாக்கியங்களை…
எந்தெந்த விதங்களில் படிப்படியாகச் சொல்லித்தரலாம்…
மனதை ஈர்க்கும் மெல்லிய இசையினை அம்மழலைக்கு அறிமுகப்படுத்தி அவர்களது ஆழ்ந்த உறக்கத்துக்கு எப்படி வழி செய்யலாம்…
அழகிய பயணங்களில்….
அல்லது பூங்காக்களில்…
குளக்கரைகளில்…
என அவர்களுக்கான நேரங்களைச் செலவிட்டு புதிய புதிய காட்சிகளையும்… வண்ணங்களையும்… பிற உயிரினங்களையும் அறிமுகப்படுத்தி அவர்களது உலகு மேம்பட எவ்விதம் துணை நிற்கலாம்…
என்பனவற்றையெல்லாம் மிக அழகாகவும் எளிமையாகவும் சொல்கிறது இந்த “எழுதாப் பயணம்” என்கிற நூல்.
.
லட்சுமியும்-பாலபாரதியும் ஈன்றெடுத்த கனிவமுதன் இன்றைக்கு பல்வேறு துறைகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறான். ஆறு மாதங்கள் முன்னர் சென்னையில் நடந்த வாசகசாலை நிகழ்வில் ஆரம்ப அசத்தலே சிறுவன் கனிவமுதன் தான்.
.
புரட்சிக்கவி பாரதிதாசனின் “நூலைப்படி – சங்கத்தமிழ் நூலைப்படி” பாடலை பத்துநிமிடம் ஒற்றைவரி விடாது பாடிக்காட்டினான். ஆச்சர்யத்தில் அரங்கமே அதிர்ந்துபோய் கைதட்டியது. இதற்குக் காரணம் யாரென்று நான் சொல்லாமலே உணர்வீர்கள் நீங்கள்.
அதுமட்டுமில்லாமல்…
நம்மிடம் இருக்கும் பணத்தை எப்படி மொத்தமாகச் சுருட்டலாம் என்று பணத்திலேயே குறியாக இருக்கும் டாக்டர்கள்…. தெரப்பிஸ்டுகள் போன்றோரிடம் இருந்து தப்பிப்பது எப்படி…?
ஆட்டிச நிலையில் இருக்கும் மழலைகளைப் பற்றி அடிப்படை அறிவே இல்லாத ஆசிரியர்கள்… பிரின்ஸ்பால்களிடம் இருந்து விடுபட்டு நல்ல புரிந்துணர்வு கொண்ட பள்ளியை கண்டடைவது எவ்விதம்…?
போன்றவற்றையும்கூட தாங்கள் பட்ட வேதனையில் இருந்து பெற்ற பாடத்தை நமக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார் லட்சுமி பாலகிருஷ்ணன்.
இந்நூலில் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்றெனச் சொன்னால் தனிப்பட்ட சவால்களைச் சுட்டிக்காட்ட புராணக்கதை ராமனை உதாரணம் காட்டியதற்கு பதிலாக வாசகர்களுக்கு நிகழ்கால சாதனையாளர் எவரையாவது சுட்டியிருக்கலாம் என்பதுதான்.
இந்தப் புத்தகம் ஏதோ ஆட்டிச நிலையில் இருக்கும் பெற்றோர்களுக்கானது மட்டும் என்று எண்ணினால் நம்மைப் போன்ற குருமூர்த்தி வேறு யாரும் இருக்க முடியாது.
இது :
நாமும் இத்தகு மழலைகளின் உலகை எவ்விதம் புரிந்து கொள்வது…?
எவ்விதம் அணுகுவது….?
எவ்விதம் அளவளாவுவது…?
உறவாடுவது…?
அதன் வாயிலாக அவர்களது நாளைய உலகம் இனிதே மலர துணை நிற்பது என்பதற்காகவும்தான்.
இனி…. ”எழுதாப் பயணம்” நூலுக்காக நீங்கள் போட்டுத் தாக்கவேண்டிய அலைபேசி எண் : 9940203132.
- பாமரன்