
இவ்வருட புத்தகத் திருவிழாவில் குக்கூவின் நாட்காட்டி கிடைத்தது. அதில், எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது படத்துடன் ஓர் அழகிய வாசகம் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. ‘அகப்பட்டுக் கொண்டுவிட்டோம். நின்று சாதிக்க வேண்டியதுதான்.’ எனும் அவ்வாசகம் எங்களுக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. இவ்வருடம் முடிந்ததும் அப்படத்தை மட்டும் தனியே எடுத்து சட்டமிட்டு வைத்துக் கொள்ள எண்ணியிருக்கிறோம்.
கனிக்கு ஆட்டிசம் என்பது உறுதிப் படுத்தப்பட்டபோது, எங்களுக்கு அவ்வார்த்தையின் பொருளோ, வீரியமோ, அதைத் தொட்டவுடன் அதற்குப் பின் விரியும் ஒரு தனி உலகம் உண்டென்பதோ எதுவுமே தெரியாது. உள்ளே நுழைந்து, துன்பத்தில் தோய்ந்து கிடந்ததெல்லாம் வெகு சில நாட்களே. எங்களை நாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு, இத்துறையில் பயிலவும் இயங்கவும் ஆரம்பித்தோம்.
தமிழில் இதைப் பற்றிய எழுத்துக்கள் மிகக் குறைவு. இணையத்தில் கிடைப்பவை அதிலும் சொற்பம். எனவே கற்றுக் கொண்டவற்றை கட்டுரைகளாக்கி முதலில் தனது தளத்தில் பதிவேற்றினார் பாலா. அதற்குக் கிடைத்த வரவேற்பு அதனை நூலாக்கும் எண்ணத்தைத் தந்தது. அதற்கு ஒரு வெளியீட்டு விழா என்று எண்ணியபோது, அவ்விழா எப்படி இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு சில நிபந்தனைகள் இருந்தன.
அதுவரை இத்துறையில் பெற்றோர்கள் கலந்து கொள்ளும் விழாக்கள் பலவும் பல நிறுவனங்களால், தனி நபர்களால் நடத்தப்பட்டு வந்தபோதும் எல்லாவற்றிலும் பெற்றோர் & குழந்தைகளின் வசதி வாய்ப்புகள் எதுவும் பெரிதாக மதிக்கப்பட்டதில்லை. உதாரணமாக பெரும்பாலான ஆட்டிசக் குழந்தைகளுக்கு அடைபட்ட இடத்தில் இருப்பது பயத்தைத் தரும் (Claustrophobia). ஆனால் விழாக்கள் பெரும்பாலும் நடுத்தர/சிறிய அளவுள்ள, அதுவும் குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்குகளில்தான் நடைபெறும். எனவே விழா தொடங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே குழந்தைகள் சிணுங்கவோ, அழவோ ஆரம்பிக்க, பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ அரங்கை விட்டு வெளியே சென்று குழந்தைகளை சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். விழாக்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்கள் பணம் கட்டிச் செல்லும் பயிற்சிப் பட்டறைகளில் கூட குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள எந்த ஏற்பாடும் இருக்காது. பெரும்பாலும் பெற்றோர் இருவரில் ஒருவர் மட்டுமே அந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள நேரிடும்.
எனவே எங்கள் விழா நல்ல விசாலமான அரங்கில், குழந்தைகள் விளையாடும் வசதியுடன், மிக முக்கியமாக அங்கே குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் தன்னார்வலர்களோடு நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தோம். எங்கள் திட்டத்தைச் சொன்னதுமே, ‘பண்புடன் குழு’ நண்பர்கள் பலரும் ஆர்வத்தோடு முன்வந்து பொறுப்பெடுத்துக் கொண்டனர். அவ்விழா பெற்றோர்களுக்கு அளித்த ஆசுவாசத்தையும், மகிழ்வையும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களை ஒன்று திரட்ட பெற்றோர் ஒன்று கூடல்களை ஏற்பாடு செய்தபோதும் அதே போல தன்னார்வலர்கள் உதவியோடு குழந்தைகளுக்கான விளையாடுமிடம் களை கட்டியது. இந்த ஒன்றுகூடல்களால் ஊக்கம் பெற்ற பெற்றோர்கள் பலரும் வாட்சப் குழுமங்களைத் தொடங்கி, கூட்டங்கள் நடத்தத் தொடங்கியபோது இதே போல தன்னார்வலர்களைக் கொண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்வது என்பது ஆட்டிச உலகில் ஒரு தவிர்க்கவியலாத செயல்பாடாகவே மாறிவிட்டதைப் பார்க்க முடிகிறது.
அதே போல, பேச இயலாத குழந்தைகளுக்கு ஒரு கட்டத்தில் மாற்று தகவல் தொடர்பு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதும் அவசியமானது என்பதை உணர்ந்தோம். அப்படி தூண்டப்படும் தகவல் தொடர்புத் திறனால் அக்குழந்தைகளின் நடத்தைச் சிக்கல்கள் குறைவதை ஒரு ஆசிரியையாக என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சைகை மொழி, அட்டைகளில் படங்கள், வார்த்தைகளை ஒட்டிப் பயன்படுத்துவது என நேரடியாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் குழந்தைகளுக்குப் தகவல் தொடர்பாற்றலில் உதவ முடியும்.
இப்போது புழக்கத்தில் இருக்கும் அத்தகைய தொழில்நுட்ப அடிப்படையிலான தகவல் தொடர்புக் கருவிகள்(Augmentative and alternative communication) அனைத்திலும் சில அடிப்படைச் சிக்கல்கள் உண்டு. முதல் விஷயம் – அவை கட்டணம் கோருபவை. சிலவற்றுக்கு தனியான கருவிகளே வாங்க வேண்டும். இரண்டாவதாக அவற்றில் ஏற்கனவே உள்ள குரல் மற்றும் படங்களைத்தான் நாமும் பயன்படுத்த வேண்டும். இவை இரண்டையும் தகர்த்து இலவசமாக, பயனாளருக்கு நெருக்கமானதாக இருக்கக் கூடிய ஒரு செயலியை அறிமுகம் செய்யவேண்டும் என்ற எங்கள் எண்ணத்தை நண்பர்கள் உதயனிடமும் தமிழ்ச்செல்வனிடமும் பகிர்ந்து கொண்டபோது அவர்களும் அதற்கு உருக்கொடுக்க ஒத்துழைத்தனர்.
அரும்பு அறக்கட்டளையின் கனவு, INOESIS நிறுவனத்தின் உதவியுடன் 2019ஆம் ஆண்டு உலக ஆட்டிச விழிப்புணர்வு தினத்தன்று நனவானது. எனது எழுதாப் பயணம் நூலுடன் சேர்த்து சிறப்புக் குழந்தைகளின் தொடர்புத் துணைவனாக அரும்பு மொழி செயலி வெளியிடப்பட்டது.
இச்செயலியின் சிறப்பம்சம் அக்குழந்தைகளின் படம், பெற்றோரின் குரல் ஆகியவற்றோடு இதனைப் பயன்படுத்தலாம் என்பதுதான். இதுவரை ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் கிடைத்துவந்த அரும்புமொழி, விரைவில் ஆப்பிளின் IOS இயங்குதளத்திலும் உலாவரும்.
இச்செயலி குறித்து தோழர் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழ் நிறுவனத்திற்காக ஒரு காணொலி தயாரித்துள்ளார். அதன் சுட்டியைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இப்பணியில் எங்களுக்குத் தோள் கொடுத்து உதவி வரும் நண்பர்களே என்றும் எங்கள் பலம்.
அரும்புமொழியின் சுட்டி:
பி.பி.சி. செய்தியின் சுட்டி:
வாழ்த்துகள் அம்மா .