தமிழக அரசின் பொது நூலகத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் சேர்ந்து தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் மார்ச் 18 & 19 தேதிகளில் காவிரி இலக்கியத் திருவிழாவினை சிறப்புற நடத்தினர். அதில் மார்ச் 19ந்தேதி, மதியம் 2 மணி அமர்வில் நான் நிகழ்த்திய உரைக்கென தயாரித்த எழுத்து வடிவத்தினைக் கீழே பகிர்ந்துள்ளேன்.
தமிழக அரசின் சீரிய இந்த முயற்சி இனி வருடந்தோறும் தொடரும் என்பது மகிழ்வான செய்தி. குறுகிய கால அவகாசம் எனினும் நன்றாகவே ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆளுமைகளை சந்திக்கவும், உரையாடவும் முடிந்தது மிகுந்த நிறைவினையும் மகிழ்வையும் தந்தது.
நாங்கள் சென்ற அதே ரயிலில் தோழர் சி. மகேந்திரனும் வந்திருந்தார். இருவரையும் அழைத்துச் செல்ல ஒரே வாகனம் என்பதால் அவரிடம் காலைப் பொழுதிலேயே சற்று உரையாட முடிந்தது. கையோடு எழுதாப் பயணம் சில பிரதிகள் கொண்டு சென்றிருந்தேன். அதில் ஒன்றை அவருக்குத் தந்தேன். காலை உணவுக்கென சில மணி நேரங்களுக்குப் பின் சந்தித்தபோதே நூலை மேலோட்டமாகப் பார்த்ததாகவும், மிகவும் முக்கியமான முயற்சி என்றும் பாராட்டினார். அடுத்து அண்ணன் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களை தேநீர்க்கடையில் சந்தித்தோம்.
அன்றும் மறுநாளும் அடுத்தடுத்து பலரையும் சந்தித்தபோதும் சிலருடன் மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது. அப்படியான சம்பிரதாயமான விஷயங்கள் எல்லாம் நினைவுக்கே வராத அளவு அடுத்தடுத்து நண்பர்களையும், மதிப்புக்குரிய படைப்பாளிகளையும் தொடர்ந்து சந்தித்து அளவளாவிக் கொண்டே இருந்தோம். சல்மா, உமா மோகன், கவின் மலர், முத்து நிலவன், இரா. காமராசு, சி.எம். முத்து, சுதீர் செந்தில், கீரனூர் ஜாகிர் ராஜா, யூமா வாசுகி, புலியூர் முருகேசன், தூயன், ஸ்டாலின் சரவணன், மு. முருகேஷ், கவிஞர் நந்தலாலா, செல்வ புவியரசன், பா. ஜீவசுந்தரி, அப்பண்ணசாமி, இரா. எட்வின், விஸ்வநாதன், சரஸ்வதி மகால் நூலகத்தின் நூலகரான மணிமாறன் என அடுத்தடுத்து இலக்கியவாதிகளின் சந்திப்புகள் நீண்டன. சிலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவில் இணைத்துள்ளேன்.
*******************
அரங்கிலுள்ளோர் அனைவருக்கும் வணக்கம்.
எனக்கு அளிக்கப்பட்ட தலைப்பு பேசாப் பொருளைப் பேசுதல். இத்தலைப்பைக் கேட்டவுடன் முதலில் சற்றுக் குழப்பமாக இருந்தது. யாருமே பேசாத பொருள் என்னவென்று சிறிது நேரம் யோசித்துப் பொழுதைப் போக்கினேன். சரி முதலில் இந்த சொற்றொடரை உருவாக்கியார் யார் என்று பார்ப்போம் என்று யோசித்தால் வந்த விடை நம் பாரதி. சரி, அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால்
பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
என்று தன் விநாயகர் நான் மணிமாலை நூலில் இறையிடம் வரம் கேட்கிறார் பாரதி.
தான், தன் வீடு, தன் குடும்பம், தன் குழந்தைகள் என்றே சிந்திப்பது இல்லறத்தவரின் பழக்கம் என்றால் ஆன்மீகவாதிகள் கூட ’தனக்கு’ப் பிறவிப் பிணி தீர வேண்டும், முக்தி கிட்ட வேண்டும் என்றே இறைவனை வணங்குகிறார்கள். இந்நிலையில் உலகில் உள்ள புல், பூண்டு, மரங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள், மனிதர்கள் உள்ளிட்ட ஜீவராசிகள் அனைத்துமே துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ வேண்டும் என்று கோருவது பேசாப் பொருள்தானே? பாரதியைப் போல இப்படியான உயிர்க்குலங்கள் அனைத்தின் மீதும் கருணை கொண்டு பாடியவர்கள் வெகு சிலரே. ’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலார், ’தம்முயிர்போல் எவ்வுயிருந் தானென்று தண்ணருள்கூர் செம்மையருக் கேவலென்று செய்வேன் பராபரமே’ என்று பாடிய தாயுமானவர் என்று சிலர் அவ்வரிசையில் உண்டு.
ஆனால் இவ்வரிகளை அவர் எழுதி நூறாண்டு கடந்துவிட்ட நிலையில் இன்றும் இந்த கோரிக்கைகள் பொதுச் சமூகத்தில் பேசாப் பொருளாகவே நீடிப்பதை உணர முடிந்தது.
தான், தனது என்னும் சுயநல வாழ்வியல் கருத்துக்கள் மென்மேலும் சுருங்கி, சுருங்கி வீரியமான விஷ வித்துக்கள் போல எங்கெங்கும் வியாபித்து வருகிறது.
நம் வாழ்கைச் சூழலும், குறிப்பாக பணியிட நிர்ப்பந்தங்கள் நாம் வேகமாக ஓடினால் மட்டும் போதாது, உடன் ஓடி வருவோரை விழத்தட்டியபடியே ஓடியாக வேண்டும் என்ற வகையிலான அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.
பொருள் ஈட்டுவது மட்டுமே வாழ்வின் ஒரே குறிக்கோளாகிப் போகிறது. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது என்றும் உள்ளதுதான் என்றாலும் இன்று பொருளியல் சார்ந்த அழுத்தம் மனிதர்களை முழுமையாக வளைத்துப் பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
சென்னையில் ஒரு அடுக்ககத்தில் சாலையை ஒட்டிய சாரி வீடுகளை விட உள்புறம் புல்வெளியும், நீச்சல் குளமும் உள்ள பகுதியை நோக்கித் திறக்கும் சன்னல் கொண்ட வீடுகளுக்கு சில ஆயிரம் ரூபாய் வாடகை வித்தியாசம் உண்டு. அதாவது வீட்டு ஜன்னல் கதவைத் திறந்தால் சிறு பச்சைச் சதுரமாக புல்வெளியைக் காண வேண்டுமென்றால் நாம் சில ஆயிரம் ரூபாய்களைக் கூடுதலாகத் தர வேண்டும். கல்வியில், மருத்துவத்தில், கேளிக்கைகளில் என எல்லாவற்றிலும் தரத்தின் அளவை பணத்தைக் கொண்டே மதிப்பிடப் பழகுகிறோம்.
அடுத்தவரை விட அதிகமாக பொருள் ஈட்டுவதே குறிக்கோள் என்று ஆகிறது. அதிகமாய் பொருள் ஈட்ட, அதிக முக்கியத்துவம் உள்ள படிப்பைப் படிக்க வேண்டும். கலைகளைக் கூட ரியாலிட்டி ஷோ, அங்கிருந்து திரைத்துறை என்கிற பயணத்திற்கான நுழைவுச்சீட்டு என்கிற அடிப்படையில்தான் பிள்ளைகள் கற்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
இந்தச் சூழலில் அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும், இடும்பை தீர்ந்து இன்புற்று அன்புடன் வாழ வேண்டும் என்று யார் நினைக்க முடியும்? அதனால்தான் இன்னமும் பாரதி வேண்டிய வரங்கள் பேசாப் பொருளாகவே நீடிக்கின்றன.
சமீபத்தில் தன் மகனைவிட மதிப்பெண் கூடுதலாக வாங்கிய இன்னொரு சிறுவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த தாய் ஒருவரைப் பற்றிய செய்திகளைப் படித்தோம். முன்பெல்லாம் மாற்றாந்தாய்க் கொடுமைகள் பற்றி நிறைய பார்க்கவும், கேள்விப்படவும் செய்வோம். தன் கணவருக்கு இன்னொரு பெண் மூலம் பிறந்த பிள்ளைகளை ஒரு தாய் வெறுப்பதிலாவது சற்று தர்க்கம் உண்டு. தன் பிள்ளைகளுக்கு உரித்தாக வேண்டிய தன் கணவனின் சொத்துக்களை, அது அரசுரிமையோ அரை ஏக்கர் நிலமோ எதுவாயினும் அச்சொத்தில் இன்னொருத்தியின் மகன் போட்டிக்கு வருவதா என்று எழும் பதற்றமே அந்த குரூரத்தின் மூலப்புள்ளி. சக மனைவியின் குழந்தைகளை போட்டியாக நினைத்தது போய் இன்று தன்னுடையது அல்லாத அத்தனை குழந்தைகளையும் தன் பிள்ளைகளின் போட்டியாகக் கருதும் மனநிலைக்கு அந்தத் தாய் வந்து சேர்ந்ததற்கு யார் காரணம்? அந்த ஒரு தாய் மட்டும்தான் நேரடியாக அதீத வன்முறையில் இறங்கியிருக்கிறார். ஆனால் இன்னமும் எத்தனை பெற்றோர்கள் மனதளவில் இந்த நச்சு விதைகளைச் சுமந்து கொண்டு திரிகிறார்கள்? ஒரு சாதாரண விளையாட்டு பயிற்சி நிலையத்தில் தன் குழந்தைகளுக்கு தேவையான காப்பு உடைகளை அணிவித்துவிடும் போதே, ’நீ ஏன் அந்த அண்ணாவைவிட மெதுவா விளையாடற, அவனை முந்தறா மாதிரி விளையாடணும், சரியா’ என்று தன் பிள்ளைக்குச் சொல்லித் தரும் பெற்றோரைக் காணும்போதெல்லாம் சற்று அதிர்ச்சியாகவும், அச்சமாகவும் இருக்கிறது. விளையாட்டு என்பதில் போட்டி இருக்கலாமே ஒழிய பொறாமை கலக்கலாகாது என்ற நெறி பெற்றவர்களுக்கே இல்லை என்றால் வளரும் தலைமுறையினர் என்னவாக வளர்வார்கள்?
வலுத்தவன் மட்டுமே வாழ முடியும் என்ற வேட்டைச் சூழலில் இருந்து மெல்ல நாகரீகம், உறவுகள், சமூகம் என்ற அமைப்புகள் உருவானதே பிறரோடு இணைந்து, பெற்றும் தந்தும் வாழ்வதன் மூலம் வாழ்வை எளிதாக்கிக் கொள்ளத்தான். இன்றோ சுயநலத்தின் உச்சத்தை நோக்கி மீண்டும் சரிந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.
தன்னலம் என்பதன் வீரியம் மிகுத்துப் போகையில் விஷமாகவே மாறிவிடும். அந்நிலைக்குச் சென்று சேராமல் மனிதர்களை தடுக்கும் சக்தி வெகுசில உயர் விழுமியங்களுக்கு மட்டுமே உண்டு. அவற்றையே அறம் எனும் ஒற்றை வார்த்தையால் குறிக்கிறோம்.
அவ்வறத்தை நோக்கி மனிதர்களைச் செலுத்தும் சக்தி கலை இலக்கியம் போன்ற துறைகளுக்கு மட்டுமே உண்டு. ஏன் இலக்கியம் படிக்க வேண்டும், ஏன் கலைகளை ரசிக்கவும், பயிலவும் வேண்டும் என்ற கேள்வி வரும்போதெல்லாம் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த விரிவுடனும் நம் ஒற்றை மனதை ஒட்ட வைத்துக் கொள்ளும் முயற்சியே கலைகளும் இலக்கியமும் என்றுதான் விடை சொல்லலாம். வாசிப்பு என்ன தரும் என்றால் அறம் என்னவென்று காட்டித்தரும். அதனால் மட்டும் நாம் அறவான் ஆகிவிட முடியாதுதான். ஆனால் நம் வாழ்கை முறை அறத்தின்பாற்பட்டதா இல்லையா என்று எடைபோட்டுக் கொள்ள முடியும்.
எனவே கலைகளுக்கும், இலக்கியத்திற்கும் மனதில் இடம் கொடுங்கள். வாசிப்பையும், கலைப் பயிற்சியையும் நேரம் ஒதுக்கி வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்ளுங்கள். அதன் மூலம் அறத்தின் வழியெதனப் புரிந்து கொண்டு பாரதியின் கோரிக்கைகளை நாமும் வழிமொழிவோம். உயிர்க்குலம் முழுமையும் அன்புற்று இன்புற்று வாழும் வழிமுறை அதுவே.
ஒன்றே செய்க, ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க எனும் முதுமொழிப்படி வாசிப்பை இன்றே தொடங்குவோம். இதோ இப்போது நாம் நின்று கொண்டிருக்கும் இந்த சரஸ்வதி மகால் நூல் நிலையத்தின் உள்ளே இருக்கும் பொக்கிஷங்களுக்கு வயது ஆயிரம் ஆண்டு. ஆம். சோழ அரசர்களில் முதலாம் பராந்தகனின் காலத்து ரூபாவதாரம் எனும் வடமொழி இலக்கண நூலும், ருக்வேதத்துக்கான உரையும் இங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்லது. மகுடாகமம் என்கிற ஆகமத்தைப் பின்பற்றியே ராஜராஜன் பெரியகோவிலைக் கட்டினார். அந்த மகுடாகமத்தின் தொன்மையான பிரதி இந்த நூலகத்தில் இருக்கிறது. அகோர சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் போன்றவர்கள் எழுதிய தொன்மையான சைவ சமய நூல்களெல்லாம் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாயக்கர்கள் தஞ்சையை ஆண்டது மிகவும் பிற்காலத்தில்தான் என்றாலும் முதலாம் குலோத்துங்கன் காலத்திலிருந்தே இங்கே தெலுங்கு நூல்களும் சேகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
அச்சுக்கலையும், காகிதங்களும் கண்டுபிடிக்கப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து வரலாற்றுப் பதிவுகளும் அதிகரித்தே வந்துள்ளன.
இந்த நூலகத்தில் மராட்டிய மன்னர்களின் காலத்து வரலாறு மோடி எனப்படும் லிபியில் எழுதப்பட்டு, சேகரிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மூட்டைகளில் தூங்கும் அவ்வேடுகளில் எத்தனையோ மனிதர்களின் வரலாறு புதைந்து கிடக்கிறது. அவற்றில் சிலவற்றை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையினர் கா.ம.வேங்கடராமையா போன்ற அறிஞர்கள் துணையுடன் தமிழில் மொழிபெயர்த்து பதிப்பித்துள்ளனர். அந்த மோடி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள், நூல்கள் உருவாகியுள்ளன.
அவற்றில் ஒன்றுதான் என் நாவலான ஆனந்தவல்லி. இன்று நமக்கெல்லாம் பெண்ணின் திருமண வயது 21 என்று தெரியும். ஆட்டோக்களில் கூட எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் பச்சிளங்குழந்தைகளுக்குக் கூட திருமணம் செய்துவைக்கும் பழக்கம் இங்கிருந்தது. பெண்களை கோவிலுக்குப் பொட்டுக் கட்டி, தேவதாசி எனும் பெயரில் பொது மகளிராக்கும் பழக்கம் இருந்தது. மன்னர்கள் எண்ணற்ற மனைவியரை மணந்து கொண்டனர். மேலும் பல பெண்களை கத்திக் கல்யாணம் என்ற பெயரில் திருமணம் போன்றொதொரு ஏற்பாட்டிற்கு உட்படுத்தி வாழ்ந்தனர். அரண்மனையில் ஏவல் பணிகள் செய்ய பெண்களை, பெண் குழந்தைகளை காசு கொடுத்து கிரயப்பத்திரம் எழுதி விற்றும் வாங்கியும் நுகர்ந்தனர். அந்த அடிமைத்தளையை எதிர்த்து சிலர் முறையிட்ட போது, நீதிமான்களின் மன நிலையைப் பொறுத்து தீர்ப்பு கிடைத்தது. சிலருக்கு விடுதலையும், சிலருக்கு அடிமைத்தளைதான் சாசுவதம் எனும் தீர்ப்பும் கிடைத்தது.
அப்படி ஒரு ஐந்து வயதுப் பெண் குழந்தைக்கு, விவரம் தெரியாத விளையாட்டுப் பிள்ளைக்கு திருமணம் நடக்கிறது. அருகிலிருக்கும் திருவையாற்றில் திருமணம். சில வருடங்களுக்குப் பின் கணவன் வேலை நிமித்தமாக வெளியூர் செல்கிறான். பெண்ணுக்குத் திருமணம் ஆனாலும், அவள் பூப்படையவில்லை என்பதால் தந்தை வீட்டிலேயே இருக்கிறாள். அவளை, அவளது சொந்தத் தந்தையே பொய் சொல்லி தஞ்சை அரண்மனைக்குக் கொண்டுவந்து விற்றுவிடுகிறான்.
கணவன் திரும்பி வந்து தன் மனைவியைத் தேடி அலைகிறான். அவனது அலைச்சல், அதன் பின்னால் இருக்கும் துயரம் எல்லாம் வரலாற்றில் பதிவாகாது போனாலும், இருக்கும் சில வரிக் குறிப்புகளில் இருந்து அந்த மனிதர்களின் கண்ணீரை ஊகித்தறிய முடியாது போகுமா என்ன? அப்படிக் காய்ந்து உப்புச்சுவடாகிப் போன மனிதர்களின் கண்ணீரை அடிப்படையாகக் கொண்டே என் புதினத்தை புனைந்து எழுப்பினேன். அந்த நாவலின் மூலம் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய மகிழ்வு என்ன தெரியுமா?
அதனைப் படித்த வாசகிகளில் சிலர் நேரிலும், மின்னஞ்சலிலும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தனர். ”பொதுவா எங்களுக்கு ராஜா காலத்து அலங்காரங்கள் ரொம்ப பிடிக்கும். படங்களில் பாடல் காட்சிகளில் வரும் பெரிய அரண்மனைகள், அங்கே உச்சி முதல் பாதம் வரை அணிமணிகளால் ஒளி வீசும் அழகியர்னு பார்க்கும்போதெல்லாம் ஐயோ, நாமும் ராஜா காலத்துல பொறக்காம போயிட்டோமேன்னு தோணும். ஆனா இந்தக் கதைய படிச்சப்புறம் நல்ல வேளை, நாம ராஜா காலத்துல பொறக்காம இந்த ஜனநாயக நாட்டுல பொற்ந்தோம்னு நிம்மதியா இருக்கு” என்றார்கள். ஒருவரல்ல, இருவரல்ல, நான்கு வாசகியர் இந்தக் கருத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லியிருந்தார்கள்.
ஒரு இலக்கியம் என்ன தரும் என்ற கேள்விக்கு என் பதில் இதுதான். நம் முன்னோர் தண்ணீருக்குப் பதிலாகக், கண்ணீர் விட்டுக் காத்த சுதந்திரப் பயிரின் அருமையை, நவீன அறிவியலடிப்படைகளின்படியான கல்வியின் உயர்வை, மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஜனநாயக அரசின் மாண்பை உணர்ந்து கொள்ள, ஆண்ட பரம்பரை என்று உசுப்பிவிடப்படும் அதிகார வெறியை புறந்தள்ள நம் மனதை பக்குவப்படுத்துவதுதான் வாசிப்பின் பயன்.
ஆகவே நண்பர்களே, வாசிப்பை ஒரு இயக்கமாக இன்றே தொடங்குவோம். மனதின் நுண்ணுர்வுகளை, அறமெனும் வெளிச்சத்தில் கண்டெடுத்து, உலகம் யாவும் உய்யும் கனவோடு புதிய சமூகத்தைக் கட்டமைப்போம்.
மீண்டும் அப்பாடலில் இருந்தே பாரதியின் வரிகள் சிலவற்றோடு என் உரையை முடிக்கிறேன்.
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமும் மிடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனைநீ
திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி
‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை
அருள்வாய்; ஆதி மூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே.




