மயிலாப்பூரின் தெற்கு மாடவீதியில் ஒரு அன்னதான சத்திரம் இருக்கிறது. அதன் பெயர் வியாசர்பாடி விநாயக முதலியார் சத்திரம். இந்த சத்திரத்தை ஏற்படுத்திய விநாயக முதலியார் இதனை நிர்வகிக்கத் தேவையான வரும்படிக்காக நுங்கம்பாக்கம் கிராமத்தில்(ஆம், 19ஆம் நூற்றாண்டில் அது சென்னைக்கு மிக அருகில் இருந்த ஒரு கிராமம்தான்) ஏரியை ஒட்டிய தோட்டம் ஒன்றினை வாங்கி வைத்தார். அத்தோட்டத்தின் உள்ளேயே குளம், மண்டபம் எல்லாம் உண்டெனில், அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்து கொள்ளலாம்.
எல்லா அன்ன சத்திரங்களையும் போல இங்கும் மாதமிருமுறை(துவாதசி நாட்களில்) 50 பேருக்கு அன்னதானம் நடக்கும். ஆரம்பத்தில் பிராமண போஜனம் என்றுதான் இருந்திருக்கிறது. இப்போது அது அனைவருக்குமானதாக மாறியுள்ளது (குறிப்பாக அறுபத்தி மூவர் திருவிழாக் காலங்களில் எந்த வேற்றுமையுமில்லாது, அனைவரையும் உண்ண அழைக்கின்றனர்)
இந்த அன்னதானம் தவிரவும் இச்சத்திரத்தின் சிறப்பம்சம் அங்கிருக்கும் பழமையான சித்திரங்கள்தான். தஞ்சாவூர் பாணி ஓவியங்களில் 63 நாயன்மார்களின் ஓவியங்கள், கண்ணனின் சிறு வயதுக் குறும்புகள், பாவ புண்ணியங்களுக்கான தண்டனைகள்(கருடபுராண சமாச்சாரங்கள்), அரிசந்திர புராணம் போன்றவை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கொலு போல பொம்மைக் காட்சிகளும், பழங்கால அபூர்வ ஓவியங்களுமாய் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று இந்த சத்திரம். திருமயிலைக் கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனிப் பெருவிழாவின் பத்து நாட்களும் அனைவரும் உள்ளே சென்று இவ்வரிய ஓவியங்களைப் பார்வையிடலாம். மற்ற நாட்களில் பூட்டியிருக்கும்.
’வி’னாவுக்கு ’வி’னா என்று வியாசர்பாடி விநாயக முதலி என்று பெயர் இருந்தாலும் கூட, அவரது பூர்வீகம் வியாசர்பாடி இல்லை. சோழமண்டலத்தைச் சேர்ந்த சோழிய வேளாளர் மரபில், திருவிடையார் கோத்திரத்தில் பிறந்தவரான அருசுன முதலியார் என்பவர் தொண்டை மண்டலத்தில் சென்னைப் பட்டினத்திற்கு அருகிலுள்ள வியாசர்பாடியில் குடியேறினார். பிறகு அங்கிருந்து திருமயிலைக்கு வந்து சேர்ந்து, கட்டிட வேலை மராமத்து இலாகா உத்தியோகம் (சிவில் இன்ஜினியரிங்க்) வேலைகளைச் செய்து வந்தார். அவரது தலை மகனாகப் பிறந்தவர்தான் இந்த விநாயக முதலியார். இளம் வயதிலேயே தாய் தந்தையரை இழந்த இவர், தனது தம்பி தங்கையரை காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆற்காட்டு நவாப்பின் கட்டிட வேலைகளையும், மராமத்துகளையும் செய்துவந்தவரான கான்ஸ் துரை என்பவரிடத்தில் வேலைக்குச் சேர்ந்து, மெல்ல மெல்ல கட்டிட தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றார். கான்ஸ் துரைக்குப் பின்னர் நவாப்பின் ஆஸ்தான கட்டிடக் கலைஞராக இருந்து பெரும் பொருள் சேர்த்தார்.
சேர்த்த பொருளைக் கொண்டு சுகபோகமாய் வாழ்ந்திருந்தால் பத்தோடு பதினொன்று என்றுதான் அவரும் வரலாற்றில் காணாமல் போயிருப்பார். எண்ணற்ற தமிழ்ப் புலவர்களின் பாடல்களைக் கேட்டு இன்புற்று, அவர்களுக்கு தக்க பரிசில்கள் வழங்கிப் பாராட்டியிருக்கிறார். அவர்களுள் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாவின் குருநாதரான மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். பிள்ளையவர்கள் விநாயக முதலியாரின் மீது வியாசக் கோவை எனும் நூலையும், சித்திரச் சத்திர புகழ் மாலை எனும் நூலையும் இயற்றினார். இவற்றில் வியாசக் கோவை நூலை அவரது மாணவரான தியாகேச செட்டியாரும் இணைந்து எழுதி முடித்தார் என்றும் சொல்கிறார்கள். இப்படியான நூல்களின் பாட்டுடைத் தலைவனாக அவரை உயர்த்தியது அன்னமிடும் அரும்பணியே.
மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
என்றுதானே பூம்பாவையை உயிர்ப்பிக்கப் பாடிய சம்பந்தர் கேட்கிறார். அத்தகைய தலத்தில் அன்னதானம் செய்ய இச்செல்வந்தர் ஏற்படுத்திய நிரந்தர ஏற்பாடாகிய இச்சத்திர நிர்வாகத்தில் அவரது குடும்பத்தினரே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்த, வழக்குகளை போட்டு சிக்கலாக்கியிருக்கின்றனர். இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி இன்றும் எப்படியோ இந்த அறப்பணியை அவரது சந்ததியினர் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
சத்திரத்தின் உள்ளே உள்ள ஓவியங்களை படமெடுக்க அனுமதி இல்லை என்பதால் வாயிலில் இருக்கும் கட் அவுட்களின் அருகில் மட்டும் கனியை நிற்க வைத்து எடுத்த படம் இங்கே.
