காவியங்களை மறுபுனைவு செய்வது என்பது இலக்கியத்தின் முக்கியமான வகைமாதிரி. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு காவியங்களில் மகாபாரதமே அதிகம் மீள்புனைவு செய்யப்பட்டது.
மாகாபாரதம் எல்லா வண்ணங்களும் கொண்ட ஒரு காவிய வெளி. ராமாயணத்தில் நன்மையும் தீமையும் கருப்பு வெள்ளை போல தெளிவாக எதிரெதிரே நிறுத்தப்பட்டிருக்கும். வாலி வதம், சீதையின் அக்னிப்பிரவேசம் போல வெகு சில விஷயங்கள்தான் விவாதத்திற்குரிய சாத்தியங்களைக் கொண்டிருக்கும். தந்தை சொல்லை மந்திரமென நினைக்கும் மகன், தமையனின் நிழலாகும் தம்பி, தமையனின் பாதுகையை அரியணை ஏற்றும் இன்னொரு தம்பி இப்படி உன்னத கதாபாத்திரங்களின் வரிசையாகவே ராமாயணம் விளங்குவதால் அதை மீள்புனைவு செய்யும் வாய்ப்புகள் குறைவு என்பது பொதுப்புரிதல். ஆனால் மேதைகள் மற்றவர்க்கு அசாத்தியமாகத் தெரிவதைத்தான் செய்ய விரும்புவார்கள். உதாரணத்திற்கு புதுமைப்பித்தனின் நாரத ராமாயணத்தை சொல்லலாம்.
ராமனுக்கு மணிமுடி சூட்டப்பட்ட பின்னர்தான் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. வேதம் ஓதுவோருக்கும், கற்புடை மாந்தருக்கும், நீதி நெறி காக்கும் மன்னருக்குமாய் மாதம் மும்மாரி பெய்து செழிக்கும் நாட்டை ஆள்வது, அதிலும் சுமந்திரனைப் போன்ற மதியூக மந்திரியே சகல வேலைகளையும் பார்த்துவிட, பெயருக்கு அரியணையில் வீற்றிருப்பதில் மிகவும் சலிப்புக்கு ஆளாகும் ராமனைப் பற்றிய வர்ணனையோடு தொடங்குகிறது இக்கதை. சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்பிப் பார்த்தாலும் எந்த அரக்கனும் அவளைக் கவர்வதாகக் காணோம். காட்டிற்கு போனதற்கு அழகாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துக் கொண்டு திரும்பி வருகிறாள் அவள். லவனுக்கு பட்டம் கட்டிவிட்டு, மீண்டும் சீதையையும், அனுமனையும் அழைத்துக்கொண்டு இமயமலைப் பக்கம் போய் பார்த்தாலும் அரக்கர்கள் யாரும் கண்ணில் படுவதே இல்லை.
இந்நிலையில், தன் வீர வரலாற்றைத் தானே அனுமனுடன் சேர்ந்து பாராயணம் செய்ய ஆரம்பிக்கிறார் ராமர். பழங்கதைகளைப் பேசப் பேசப் பொழுது இனிமையாகக் கழிவதுடன், உற்சாகமாகிறார் ராமர். இப்படியாக ராமாயண பாராயணத்தின் பலனை முதலில் கண்டு சொன்னவர் ராமனேதான் என்று ஆக்கிவிடுகிறார் புதுமைப்பித்தன். இன்று இருந்து, இந்நூலை எழுதியிருப்பாரேயாயின், அவரது நிலை என்னவாகும் என்று சொல்லவே தேவையில்லை.
ராமரின் மகன் லவனுக்கு பிறக்கும் நான்கு குழந்தைகளின் வாரிசுகளையும் நான்கு வர்ணத்தவரோடு ஒப்பிட்டுக் கதையை வளர்த்தும் பித்தன், அப்படியே காலனிய ஆதிக்கம் உள்ளே நுழைந்த கதையாக அதை மாற்றுகிறார். பகடி என்பது எப்பேர்ப்பட்ட அழகிய மந்திரக்கோல் என்பதையும், நமது போதாமைகளை சிரிக்கச் சிரிக்கவே சொல்லி இடித்துரைப்பது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ள அவசியம் இந்த நாரத ராமாயணத்தைப் படிக்க வேண்டும். இதுவரை இந்நூலைப் படிக்காதவர்கள் படித்துவிடுங்கள். படித்தவர்கள் அவ்வப்போது மீள் வாசிப்பு செய்யலாம், தவறில்லை.
தமிழிலக்கியத்தின் மணிமுடியில் விலைமதிப்பற்ற, ஒளியுமிழ் அருமணி புதுமைப்பித்தன். ஒரு படைப்பாளியின் பிறந்த நாளையோ நினைவு நாளையோ நினைவு கூர்வதற்கான சிறந்த வழி அவர்களது படைப்பைப் பற்றி பேசுவதுதான் என்றே நினைக்கிறேன்.
கதையைத் தரவிறக்கிக் கொள்ள –
