விசாரணைகள்

ஒரு தந்தை தனது விவரமில்லாத மகனை நடைமுறை வாழ்கைக்குத் தயார் செய்ய முடிவு செய்தார். முதல் முயற்சியாக உடல்நலமில்லாது இருந்த பெரியவர் ஒருவரைக் கண்டு நலம் விசாரித்து வரச் சொல்லி தன் மகனை அனுப்பினார். முன் அனுபவம் இல்லாத மகனுக்கு நலம் விசாரித்தல் எனும் சம்பிரதாயச் சந்திப்பில் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து கொஞ்சம் சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

”உடம்புக்கு என்ன தாத்தா பண்ணுது?” என்று கேள், அதற்கு அவர் என்ன சொன்னாலும் “அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்ல, சரியாகிடும்” என்று பதில் சொல். அடுத்து ”எந்த டாக்டர்கிட்ட காண்பிக்கறீங்க?” என்று கேள். அவர் என்ன பதில் சொன்னாலும் “அவரா, ரொம்ப கைராசியான டாக்டராச்சே, அவர்ட்டயே தொடர்ந்து பாத்துக்குங்க” என்று சொல். அடுத்து ”என்ன மருந்து கொடுத்திருக்கார்?”என்ற கேள்விக்கு அவர் என்ன பதில் சொன்னாலும் “ரொம்ப நல்ல மருந்தாச்சே, நல்லா கேக்கும், விடாம சாப்பிடுங்க”  என்று சொல்லிவிட்டு வந்துவிடு என்று சொல்லியனுப்பினார்.

அந்த பெரியவரோ சற்று விரக்தியான மனநிலையில் இருந்தார். எனவே அந்த உரையாடல் இப்படிப் போனது.

”உடம்புக்கு என்ன தாத்தா பண்ணுது?”

”என்னத்த உடம்பு, சாவுதான் வரமாட்டாம படுத்துது”

“அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்ல, சீக்கிரம் சரியாகிடும்”

”எந்த டாக்டர்கிட்ட காண்பிக்கறீங்க?”

“டாக்டரா, இனி யமன்கிட்டத்தான் காமிக்கணும்”

“அவரா, ரொம்ப கைராசியான டாக்டராச்சே, அவர்ட்டயே தொடர்ந்து பாத்துக்குங்க”

”என்ன மருந்து கொடுத்திருக்கார்?”

“மருந்தென்ன மருந்து, விஷந்தான் இனி எனக்கு மருந்து”

“ரொம்ப நல்ல மருந்தாச்சே, நல்லா கேக்கும், விடாம சாப்பிடுங்க”

இதற்கு மேல் அந்தக் கதை நமக்கு வேண்டாம். இது போன்ற நலம் விசாரிப்புகள் கற்பனைக் கதைகளில் மட்டுந்தான் நடக்கும் என்று நினைக்காதீர்கள். எதிராளியின் மனநிலை புரியாது, அவர் சொல்லும் பதிலின் தீவிரம் உணராது மேலும் மேலும் சம்பிரதாயக் கேள்விகளும், தங்களுக்குத் தெரிந்ததையே பிரதானமாகப் பேசும் மனநிலையும் கொண்ட அந்த இளைஞனைப் போன்ற பலரையும் நாங்கள் தினமும் சந்திக்கிறோம். நாங்கள் என்ற பதத்திற்குள் சிறப்புக் குழந்தைகளைப் பெற்ற எல்லோரும் அடங்குவர். அதிலும் குறிப்பாக ஆட்டிச நிலையாளரான குழந்தைகளைப் பெற்ற நாங்கள் எதிர்கொண்டிருக்கும் விசாரணைகளை எழுதினால் மேற்சொன்ன கதை மிகச் சாதாரணமான ஒன்று என்று தோன்றுமளவுக்கு இருக்கும்.

நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தெரப்பிகளுக்கு வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வது, பார்த்துப் பார்த்து திட்டமிட்டு டயட்டை பின்பற்றுவது, வீட்டில் செய்ய வேண்டிய பயிற்சிகளை செய்வது, இதுதவிர  சாதாரணமான வீட்டு வேலைகள், மற்ற குழந்தைகள் இருந்தால் அவர்களின் வளர்ப்பு என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கும் பெற்றோரிடம் ”இன்னும் பேச்சு வரலயா, தினமும் காலைல ஒரு முறை சாயந்தரம் ஒரு முறை தேனைத் தொட்டு நாக்குல தடவினீங்கன்னா போதும், புள்ள கடகடன்னு பேச ஆரம்பிச்சுரும்” என்பது போன்ற அறிவுரைகளைச் சொல்வது மேற்சொன்ன கதையில் வரும் இளைஞனனது செயலைப் போன்றது என்பதை நலம் விரும்பிகள் உணர்வதே இல்லை. உண்மையில் அவர்களின் அக்கறையும் அன்புமே இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று புரிந்தாலும் எங்களால் அதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை. சிலர் கோபப்பட்டும், சிலர் உடைந்து அழுதும் அந்த சிக்கலை கடக்கிறோம்.

அக்கறையோடு சொல்லப்படும் அறிவுரைக்குக் கூட ஏன் இப்படி வித்யாசமாக எதிர்வினையாற்றுகின்றோம் என்று பலருக்கும் கேள்விகள் எழக்கூடும். அதற்கு முன் எங்களது வாழ்வின் சில சிக்கல்களை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

சாதாரணக் குழந்தைகளுக்கு இந்தப் பள்ளி இல்லையென்றால் அடுத்த தெருவிலிருக்கும் பள்ளி என்பது போல் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். பள்ளி என்றில்லை இசை வகுப்போ கணிணி வகுப்போ எதுவானாலும் சுற்றுவட்டாரத்திற்குள்ளேயே பொருத்தமானதாக அமைந்து விடும். ஆனால் சிறப்புக் குழந்தைகளைப் பொறுத்தவரை நல்ல பள்ளி மோசமான பள்ளி என்றோ நல்ல தெரப்பிஸ்ட் மோசமான தெரப்பிஸ்ட் என்றோ பிரிவினைகளே கிடையாது. என் குழந்தைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் பள்ளி அவன் வயதொத்த இன்னொரு ஆட்டிசக் குழந்தைக்கு சரி வரும் என்று சொல்ல முடியாது. அவனுக்கு அருமையான முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொடுத்த தெரப்பிஸ்டின் அருமை என் மகனிடம் செல்லுபடியாகாது. எனவே தூரம், நேரம், பணம் என எதைப் பற்றியும் பொருட்படுத்தாமல் அவரவர் குழந்தைக்குப் பொருத்தமான பள்ளி மற்றும் இன்னபிற வகுப்புகளை தொடர் தேடல் மூலமே கண்டடைந்தாக வேண்டும். ப்ரீக்கேஜியில் சேர்த்தால் பன்னிரண்டாவது முடியும் வரை ஒரே பள்ளி என்ற விளையாட்டெல்லாம் சாத்தியமே இல்லை. எனவே எந்நேரமும் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி தேடிக் கொண்டும், விசாரித்துக் கொண்டும்தான் வாழ்கை கழிகிறது.

 

ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்கை என்பதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் எந்த ஒரு சிறப்புக் குழந்தையிருக்கும் குடும்பத்தையும் நீங்கள் பார்த்தாலே போதும். ஒரு முறை வலிப்பு வந்தாலோ அல்லது தினசரி வாழ்வின் ஒழுங்குகள் வேறு ஏதேனும் சிக்கலினால் மாறிப் போனாலோ போதும் அதுவரை கற்றுத் தந்திருந்த விஷயங்கள் கூட அக்குழந்தையிடமிருந்து பறிபோகக் கூடும். எங்கள் வாழ்விலிருந்தே ஒரு சின்ன எடுத்துக் காட்டு. 2015 மழை வெள்ளத்தின் போது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மின்சாரம் இல்லாத சூழல். எங்கள் மகன் பிறந்ததிலிருந்தே இன்வர்ட்டர் உதவியுடன் வீட்டில் எப்போதும் வெளிச்சம் இருப்பதையே உணர்ந்து வந்தவன். இரண்டாம் நாள் முதல் சுவிட்சைப் போட்டாலும் விளக்கெரியாது என்ற யதார்த்தத்தை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஐந்து நாட்களுக்கும் இரவு ஏழு மணிக்கு மேல் இருட்டுக்குப் பழகிக் கொள்ள வேண்டிய நிலை. வெள்ளம் வடிந்த பின்னும் கூட கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை எந்த வகுப்புகளுக்கும் போக முடியாத சூழல். இது போன்ற கை மீறிய நிலைகளை அவனால் புரிந்து கொள்ளவே முடியாது போனதில் அது வரை பயிற்சியின் மூலம் அடைந்திருந்த பேச்சும், பாட்டும் காணாமல் போனது. மீண்டும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாயின அவன் பேச்சு மீண்டு வருவதற்கு.

இப்படியாக வாழ்வென்பதே ஒரு பரமபதம் போன்றதுதான் – என்ன இங்கே ஏணிகளின் எண்னிக்கை மிகவும் குறைவு. எனவே நீங்கள் எதிர்பார்க்கும் சமூக முறைமைகளை அந்தக் குடும்பத்தால் கடைபிடிக்க முடியாமலிருக்கலாம். ”ஒழுங்காக போன் பண்ணுறதே இல்ல, நாம பண்ணினாலும் பிசின்னு சொல்லிக்கறாங்க, அப்படி என்ன நாமெல்லாம் வெட்டியாவா இருக்கோம்”, எந்த நிகழ்வுக்கும் வருவதில்லை, வீட்டுக்கு விருந்தினர்களை அடிக்கடி அழைத்து உபசரிப்பதில்லை, அப்படியே அழைத்தாலும் வீட்டிலிருக்கையில் சின்னப் பயலுக்கு மூட் பாத்து நாம இருந்துக்கணுமாம் என்பது போன்ற உள்ளக் குமுறல்கள் உறவினர் மத்தியில் வெகு சகஜம்.

ஏதேனும் இயற்கைச் சீற்றங்கள் வரும் போது “போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்துவருகிறது” என்பது அரசு தரப்பிலிருந்து வழமையாக வரும் ஒரு செய்திக் குறிப்பு. போர்க்காலத்தில் சாதாரண நாட்களில் செல்லுபடியாகும் சட்ட திட்டங்கள் மாறிவிடும். அங்கு போரில் ஜெயிப்பது என்ற ஒன்றே முக்கியமாகி பிற எல்லா விஷயங்களும் பின்னுக்குத் தள்ளப்படும். உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள், கள்ள மார்க்கெட் போன்ற அதிமுக்கிய விஷயங்கள் கூட பின்னுக்கு தள்ளப்பட்டு போர் முனைக்கு உணவும் இன்னபிற தளவாடங்களும் தட்டுப்பாடின்றி செல்வது ஒன்றே குறியாக அரசு இயந்திரம் இயங்கும். இது போலவே நாங்களும் எங்களது குறுகிய வாழ்நாளுக்குள் எங்கள் குழந்தைகளை முடிந்த அளவு தன்னிச்சையான, சராசரிக்கு நிகரானதொரு வாழ்வுக்கு தயார் செய்யும் ஓயாத போரொன்றில் ஈடுபட்டிருக்கிறோம்.

எல்லோரும் தினசரி வாழ்வுக்குத் தேவையான பொருள், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முதலீடுகள்(இது பெரும்பாலும் அவர்களது கல்வி/திருமணம் வரையிலானது மட்டுமே), தங்களது ஓய்வுக்கால வாழ்கைக்கான முதலீடு என திட்டமிட்டு சம்பாதித்தால் அதிலும் நாங்கள் பன்மடங்கு அதிக சுமையை சுமக்க வேண்டியிருக்கிறது. குடும்பத்தின் அன்றாடத் தேவைகள், மேலதிகமாக குழந்தைக்கான தெரப்பிக் கட்டணங்கள், அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான முதலீடு(அவர்களின் ஆயுள் முழுமைக்கும் யோசித்தாக வேண்டும்), எங்களது ஓய்வுக்கால வாழ்விற்கு தேவையான முதலீடுகள் என எல்லாவற்றையும் ஈடுகட்ட ஓடியாக வேண்டும்.

எனவே உங்களுடனான நட்பில்/உறவில் வழக்கமான எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது போகலாம். அவற்றைப் பொறுத்துப் போக வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என்றாலும் கூட அவற்றை நாங்கள் ஆணவம் காரணமாக செய்வதாக தவறாகப் புரிந்து கொண்டு விடாதீர்கள் என்பதே எங்கள் கோரிக்கை.

ஆட்டிசமோ அல்லது இன்னபிற அறிவுசார் குறைபாடுகள் எதுவுமே நிச்சயமாக தொட்டால் ஒட்டிக் கொள்ளும் வியாதியல்ல என்பது அறிவியல் பூர்வமான உண்மை. எனவே பள்ளிகளிலும், பூங்காக்களிலும் உங்கள் குழந்தைகளோடு மாற்றுத்திறானாளிக் குழந்தைகள் யாரேனும் விளையாடும், உறவாடும் பட்சத்தில் அதை தவிர்க்க முயற்சிக்காதீர்கள். குழந்தைகளுக்கும் சிறப்புக் குழந்தைகளைப் பற்றிச் சொல்லித்தந்து அவர்களது நட்பு வட்டத்தை விரிவடையச் செய்யுங்கள்.

உங்கள் வீட்டிற்கு வர நினைக்கிறோம், வந்தால் உங்கள் குழந்தையிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், என்ன வாங்கி வரலாம் என்பது போன்ற விஷயங்களை அப்பெற்றோரிடம் கலந்து பேசிவிட்டு அவர்களைப் பார்க்கப் போனால் எல்லோருக்குமே மகிழ்ச்சி பன்மடங்கு பெருகும்.

சிலபல வருடங்களாக குழந்தைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பெற்றோரிடம் மிகவும் எளிய, சாதாரணமான உண்மைகளை அவர்களுக்குத் தெரிந்திருக்காது என்ற எண்ணத்தில் ஆலோசனையாக முன்வைக்காதீர்கள். பத்திரிக்கையில் ஏதேனும் படித்தால் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள எண்ணுவது நல்ல எண்ணம்தான். ஆனால் முடிவெடுக்கும் உரிமை அவர்களுடையது என்பதை மறவாதீர்கள்.

உங்களது அக்கறையும், அன்பும் எங்களுக்கு நிறையவே தேவைதான். ஆனால் எந்த வழியில் காட்டினால் எங்களுக்குப் பயன்படும் என்று அறிந்து கொண்டு அந்த வகையில் காட்டினால் எல்லோருக்கும் இதமாக இருக்கும்.

Advertisements
Posted in ஆட்டிசம் | Tagged , | 1 பின்னூட்டம்

பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது? – பாரதி

புதுச்சேரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியின் குமாரிஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்ற கட்டுரையின் சுருங்கிய வடிவம். முழுக் கட்டுரையும் படிக்க விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும்.

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டு மன்று,பெண்ணுக்கும் அப்படியே.

ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம்விடுதலை. அடிமைகளுக்கு இன்பம் கிடையாது.

சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவே உபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும், வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம், குருக்ஷேத்திரத்தில் போர் தொடங்கிய போது அர்ஜுனனுடைய மனது திகைத்தது போல, திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத் தகாத காரியம். அதுபற்றியே, ”சாத்வீக எதிர்ப்பி”னால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்லுகிறேன்.

ஒரு ஸ்திரீயானவள் இந்த ஸாத்வீக எதிர்ப்புமுறையை அனுசரிக்க விரும்பினால் தனது கணவனிடம்சொல்லத் தக்கது யாதெனில்:-

‘நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன்”வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல்செய்யமாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போடமாட்டேன். நீஅடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன்.இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்’ என்று கண்டிப்பாகச் சொல்லி விடவும் வேண்டும்.இங்ஙனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வைப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது. ”சிறிது சிறிதாக,படிப்படியாக ஞானத்தை ஏற்படுத்திக் கொள்வோம்” என்னும் கோழை நிதானக் கட்சியாரின் மூடத்தனத்தை நாம்கைக்கொள்ளக் கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும்.அதுவும் இந்த க்ஷணத்தில் வேண்டும்.

இங்ஙனம், ”பரிபூர்ண ஸமத்வ மில்லாத இடத்திலேஆண் மக்களுடன் நாம் வாழமாட்டோம்” என்று சொல்வதனால்,நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மையுடையனவாயினும், அவற்றால் நமக்கு மரணமே”நேரிடினும், நாம் அஞ்சக்கூடாது. ஸஹோதரிகளே! ஆறிலும்சாவு; நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான்செய்கிறார்கள்; ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸஹோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம்தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்திதுணை செய்வாள். வந்தே மாதரம்.

Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம் | Tagged , , , | 1 பின்னூட்டம்

புதிரும் புத்தகமும்

நீங்கள் ஒரு படைப்பாளி என்று வைத்துக் கொள்வோம். ஒரு கவிதைப் புத்தகமோ கதைப் புத்தகமோ வெளியிடுகிறீர்கள். வெளியீட்டு விழா நிகழ்வு. அல்லது நீங்கள் ஒரு ஓவியர் எனில் உங்களது ஓவியங்களின் கண்காட்சி. அந்த நிகழ்வுக்கு எல் & டியின் ஜி.எம்மோ அல்லது கெவின்கேர் சி ஈ ஓவோ அல்லது ஒரு பெரிய திரைத்துறை பிரபலமோ வருகிறார் என்று வையுங்கள். நாம் என்ன செய்வோம்? கையிலிருப்பதை போட்டுவிட்டு அவரை வரவேற்கப் போய் நிற்போம். மனங்கொள்ளா மகிழ்வுடன் நம் படைப்பை அவர் பாராட்டுவதை எதிர்நோக்கி நிற்போம். அந்த பாராட்டை காது குளிர கேட்டு ரசிப்போம். அவரை சரியாக உபசரித்து, விடை கொடுத்து அனுப்புவோம்.

மாறாக ஒருவர் அப்படி பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்ததையோ போனதையோ லட்சியம் செய்யாமல் கம்பீரமாய் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தால் அதை வித்யா கர்வம் என்போம். அப்படி உட்கார்ந்திருப்பவர் அச்சமயம் டீயோ இல்லை சமோசாவோ வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தால்? அவரை என்னவென்று சொல்வீர்கள்? புதிரானவர் என்றா? ஆம்… அப்படியான ஒரு புதிர்ப் பெண்ணைப் பற்றிய புத்தகம்தான் இது.

பீச். பீட்டர் சார். லாலிபாப்… இந்த மூன்று வார்த்தைகளைத் தலைப்பாகக் கொண்ட ஒரு க்ரைம் நாவல். 90 பக்கங்களில் சுருக்கமாகவும், நேரடியாகவும், விறுவிறுப்பாகவும் செல்லும் கதை. குறுநாவல் என்றே சொல்லும்படியான அளவுக்கு அளவான கதாபாத்திரங்களுடன் ரொம்பவும் பரந்து விரியாமல் இரண்டு இணைகோடுகளாக பயணிக்கும் நேரடியான கதை.

எனில் இந்நூலின் முக்கியத்துவம் என்ன? எத்தனையோ த்ரில்லர், க்ரைம் கதைகளை நாம் படித்திருக்க முடியும். இதையும் அது போன்றதொரு சாதாரணக் கதை என ஒதுக்கிவிட முடியாது போவது ஏன்?

வாழ்வில் வளர்ச்சி என்பது ஒவ்வொரு நாளும் அனுபவங்களின் வழி நாம் கற்றுக்கொள்வதைப் பொறுத்தது. எல்லாவகை அனுபவங்களையும் சொந்தமாக அனுபவித்தே கற்றுக் கொள்வது என்பது மனிதனின் வாழ்நாளுக்குள் சாத்தியமில்லை எனும் பேராவலே அவனை அடுத்தவரின் அனுபவங்களையும் கடன் வாங்கிக் கற்றுக் கொள்ளச் செய்கிறது. நமது தாத்தா பாட்டியிடம் இருந்து கதை கேட்டு அதன் மூலம் அவர்களது அனுபவத்தின் சாரத்தைப் பெற்றுக் கொள்வதில் துவங்கும் இந்தத் தேடலே நம்மை இலக்கியத்தை நோக்கி நகர்த்துகிறது.

எல்லா அனுபவங்களும் முக்கியத்துவம் பெற்ற படைப்புகளாக ஆகிவிடுமா என்றால் இல்லை. எல்லோருக்கும் ஒன்று போல் ஏற்படும் அனுபவங்களை அப்படியே பேசும் நாவல்களோ சினிமாவோ வெறும் கேளிக்கை அம்சத்துடன் நின்றுவிடும். ஐந்து பாடல், இரண்டு சண்டை, ஒர் உணர்ச்சி மயமான சுபம் போடும் க்ளைமாக்ஸ் என இருக்கும் சினிமாக்களும், அதற்கொப்பான டெம்ப்ளேட் மாத/வார நாவல்களும் இவ்வகை. இவையும் தேவைதானென்றாலும் தனித்துவமின்மை காரணமாக அவற்றுக்கு கிடைக்கும் உடனடி வரவேற்பு காற்றில் கரைந்துவிட நாட்கள் அதிகம் ஆவதில்லை. மாறாக தனித்துவம் மிக்க ஒரு அனுபவத்தை படைப்பாக ஆக்கும் போதே அது சிறப்பான அந்தஸ்தைப் பெறுகிறது.

அந்த வகையில் இந்த நாவலில் திருமதி. லக்ஷ்மி மோகன் ஆட்டிச நிலையாளர் ஒருவரின் வாழ்வையும், அக்குழந்தையை அரவணைக்கும் குடும்பத்தின் அனுபவங்களையும் கதையின் சாரமாக்கி வைத்திருக்கிறார். ஊடாக அக்குழந்தையின் அபரிமிதமான புதிர்களை கோர்க்கும் திறனை இந்த சமூகம் எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றொரு கற்பனையை விறுவிறுப்புக்காக சேர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த துப்பறியும் பகுதியை ஒரு மாத்திரையின் சர்க்கரைப் பூச்சாக கொண்டால் அந்த மாத்திரையின் உள்ளீடாக ஆட்டிச நிலையாளர்களின் வாழ்வும், அவர்களை வீடும், சமூகமும் அரவணைக்க வேண்டிய விதத்தையும் அழகாக விவரிக்கிறார். ரத்தமும் சதமுமாக நம்முடன் நடமாடும் ஐஸ்வர்யா எனும் புதிர் ராணியின் வாழ்விலிருந்து சாரத்தை எடுத்து அதனுடன் தன் கற்பனை கொஞ்சம் கலந்து இப்புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் லக்ஷ்மி.

பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் இப்புத்தகத்தின் முன்னுரையில் சொல்லியிருப்பது போல பிரச்சாரம் என்பது இலக்கியத்துக்கு ஆகாத வேலையாக இன்று நிறுவப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாம் சிறுவயதில் கேட்ட பஞ்சதந்திரக் கதை முதல் நம் மண்ணின் மகா காவியங்களான ராமாயண மகாபாரதம் வரை காலம் தாண்டி நிற்கும் எல்லா படைப்புகளுமே ஏதேனும் கருத்தைச் சொல்லியே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஆட்டிச நிலையாளர்கள் பற்றிய அதிக புனைகதைகள் இல்லாத சூழலில் இப்புத்தகம் ஒரு முக்கியத்துவம் பெறுகிறது. இன்று இச்சமூகத்திற்கு தேவையான ஒரு அவசியமான கருத்தை தன் கதையின் வாயிலாக சொல்ல முனைந்திருக்கிறார் நூலாசிரியர்.

நம் மாநிலத்தின் ஊனமுற்றோருக்கான நலவாரிய அலுவலகம் லிஃப்ட் இல்லாத ஒரு கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் செயல்படுகிறது என்று சில வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. என்ன செய்வது, நம் பொது புத்தியில் சராசரியான ஒரு மனிதனின் தேவையைத் தாண்டி, ஒரு சின்ன வித்யாசம் இருக்கும் மனிதர்களின் தேவையைப் பற்றிய பிரக்ஞை கூட நமக்கு கிடையாது. சக்கரநாற்காலிகள் புழங்க வசதியான சாய்வுப் பாதைகள் உள்ள கட்டிடங்கள் மொத்தம் எத்தனை இது வரை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? விரல் விட்டு எண்ணிவிட முடியுமில்லையா? ஆனால் பொதுமக்கள் புழங்கும் படியான கட்டிடங்கள், வணிக வளாகங்களில் சாய்வுப்பாதைகள் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பது அரசின் விதி. இந்த அரசு தான் இவர்களுக்கான அலுவகத்தை இரண்டாம் தளத்தில் வைத்து செயல்படுத்தி வந்தது. வெளிப்படையாகத் தெரியும், அனுதாபத்தைத் தூண்டக்கூடிய புற உடல் சார்ந்த ஊனங்களுக்கே இந்த நிலை என்றால்.. பார்வைக்கு எந்த வித்யாசமும் இல்லாத, ஆனால் நடவடிக்கைகளில் மட்டும் மாறுபாடான ஆட்டிச நிலையாளர்களின் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?

இவ்ளோ வாலா இருக்கானே, புள்ள வளக்கத் தெரியாட்டி வெளீல கூட்டி வந்து எங்க உயிர ஏன் சார் வாங்கறீங்க என்பது போன்ற வார்த்தைகளை தினம் தினம் கேட்டு நொந்திருக்கும் எத்தனையோ பெற்றோர்கள் இங்கே உண்டு. ஆட்டிசம் என்று சொன்னால், ஓ… லூஸா, அப்ப ஏன் சார் வெளீல கூட்டிட்டு வர்ரீங்க, இவங்களுக்குன்னு ஆஸ்பிட்டல் இருக்குமில்ல, அங்க கொண்டு போய் சேத்துர வேண்டியதுதானே என்பது போன்ற ஆலோசனை மூட்டைகளை அள்ளி வீசுவதற்கு தயாராக உள்ளனர். சொல்லிப் புரியவைக்கவும் முடியாமல், பேசாது போனால் திமிர்ப் பட்டங்கள் என்று ஆட்டிச நிலைக்குழந்தைகளை அரவணைத்து நிற்கும் குடும்பத்தினர் எதிர் கொள்ளும் எத்தனையோ சிக்கல்கள் உண்டு. இதற்கு காரணம் சுற்றியிருப்போர் எல்லோரும் கல் நெஞ்சுக்காரர்கள் என்பதல்ல, அவர்களுக்கு இப்படியான மனிதர்களைப் பற்றிய புரிதல் இல்லை என்பதுதான்.

இப்படியான நிலையிலிருந்து நம் சமூகமும் குடிமையுணர்வுள்ள ஒன்றாக மாறி, எல்லாவகை மனிதர்களுக்கும் வாழ்வுரிமை உண்டு என்று உணர்ந்து, எல்லாருக்கும் ஏற்ற வகையில் கட்டமைப்புகளோடும், அவர்களை வித்யாசமாக பார்க்காத புரிந்துணர்வோடும் முன்னேற வேண்டுமானால், பிரச்சாரம் இருந்தாலும் இது போன்ற நூல்கள் அதிகமாக வந்தாக வேண்டும்.

Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

உறவுகள் தொடர்கதை

இதோ வந்துவிட்டது பொங்கல் திருநாள். தமிழர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானதும், உன்னதமானதும் இந்த பொங்கல் திருவிழாதான். முன்பெல்லாம் விரிவாக நான்கு நாட்களுக்கு வெவ்வேறு கருத்துக்களில் அடிப்படையில் கொண்டாடப் பட்ட விழா இன்று சுருங்கி ஒரு நாள் பண்டிகையாக மாறிவிட்டது.

பொங்கல் என்பது விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடும் பண்டிகை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம் நாட்டின் பிற பகுதிகளும் இதே கருத்துடன், இப்பண்டிகையை மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஆனால் தமிழகத்திலோ இன்னும் விரிவாக முந்தைய நாள் வீட்டை சுத்தம் செய்து, பழங்க்குப்பைகளை அழிப்பதில் தொடங்கி, பொங்கலன்று சூரியனுக்கு பூஜை செய்து, படையலிடுவதோடு அதற்கடுத்த நாள் மாட்டுப் பொங்கலன்று தங்கள் தொழிலுக்கு உதவும் கால்நடைகளையும் பூஜை செய்து சிறப்பிப்பது வழக்கம். மூன்றாம் நாளான காணும் பொங்கல் நமது உறவுகளைக் கொண்டாடவும், புது உறவுகள் தோன்ற அஸ்திவாரம் இடுவதற்குமாக இரண்டு நோக்கங்களோடு கொண்டாடப் பட்டு வந்தது.

பலவகை சித்ரான்னங்களோடு அருகிலிருக்கும் ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்கு சென்று உறவினர் குடும்பங்களோடு சேர்ந்து அமர்ந்து, உணவை பகிர்ந்து உண்பது என்பது ஏற்கனவே இருந்த உறவுகளை பேணுவதற்கான வழக்கம். வீட்டிலிருக்கும் கன்னிப் பெண்களுக்கு சடையில் பூத்தைத்து அலங்கரித்து ஆற்றங்கரையில் நடக்கும் கும்மி, கோலாட்டம் போன்ற பெண்களுக்கான ஆட்டங்களில் கலந்து கொள்ளச் சொல்வது அவர்களின் திருமண முயற்சியில் முதற்படியாகும்.

இன்றைப் போல மேட்ரிமோனியல் தளங்களும், தொழில் ரீதியான திருமணத் தரகர்களும் இல்லாத அந்தக் காலத்தில் இப்படியான விழாச் சூழலில்தான் எங்கள் வீட்டில் திருமணத்திற்கு தயாராக ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நாசுக்காக அறிவிப்பது வழக்கம். பஜ்ஜியும் சொஜ்ஜியும் விளம்பி, கடைச் சரக்கினை பார்வையிடுவது போன்ற பெண் பார்க்கும் சடங்குகள் தோன்றுவதற்கெல்லாம் முன்னரே நமக்கேற்ற திருமண உறவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய வசதியோடும், யாரையும் நோகடிக்காத மாண்போடும் நம் விழாக்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன.

இந்த நவீன யுகத்தில் சுயம்வரங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. சுத்தமாக காணாமல் போனதென்னவோ உறவுகளைப் பேணும் சங்கதிதான். எனவே ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோ சென்று சந்திக்க முடியாத நம் உறவுகளை நவீன தொழில் நுட்பங்களின் உதவியோடு மெய்நிகர் வெளியிலாவது(Virtual Space) சந்தித்து மகிழ முற்படலாம்.

வாட்சப் போன்ற செயலிகளில் எத்தனையோ குழுமங்களை அமைத்து அதில் நகைச்சுவைத் துணுக்குகளையும், யாரோ உருவாக்கிய குட்டிக் கதைகளையும் சலிப்பின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கும் நாம் ஏன் குடும்ப உறவுகளுக்காக ஒரு குழுவைத் தொடங்கி அதன் மூலம் உறவுகளை பேணக் கூடாது.

ஏற்கனவே சில பல குடும்பங்கள் இது போன்ற குழுக்களை ஆரம்பித்து மிகவும் மகிழ்வோடு உறவுகளை புதுப்பித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன. குழுமங்களை நம் அனைவருக்கும் பொதுவான மூத்த சந்ததியினரின் பெயரில் ஆரம்பித்து அவர்களின் வாரிசுகள் அனைவரையும் அந்தக் குடையின் கீழ் திரட்டிக் கொள்வதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தலும் ரத்த உறவுகளையும் விட்டுப் போகாமல் தொடரலாம்.

முன் ஏர் போகும் வழியில் தான் பின் ஏர் போகும் என்று பழமொழி ஒன்றுண்டு. நாமே உறவுகளைப் பேணாவிடில் நம் குழந்தைகளுக்கு நம் வீட்டுச் சுவருக்கு வெளியில் உறவுகள் யாரும் இருப்பதே தெரியாமல் போகக் கூடும். எனவே நம் குழந்தைகளுக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழவேனும் நம் சொந்தபந்தங்களைத் தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்தாக வேண்டும்.

ஒவ்வொருவரின் பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றிற்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள, பொக்கிஷமாய் இருக்கும் பால்ய புகைப்படங்கள் யாரேனும் ஒருவரிடம் இருந்தால் அதைப் பகிர்ந்து கொள்ள என நம் உறவுகளுக்கு புத்துயிர் ஊட்டும் எத்தனையோ விஷயங்களை இது போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் உதவியோடு செய்ய முடியும்.

இந்த காணும் பொங்கல் நாள் முதல் நம் உறவுச் சங்கிலிகளை தொழில்நுட்ப வசதி கொண்டு இணைத்து மகிழ்வோம்.

நன்றி – செல்லமே, ஜனவரி 2016

Posted in எண்ணம், கட்டுரை, காணும் பொங்கல், சமூகம், செல்லமே | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

பார்த்துப் பகிருங்கள்

கல்லூரி முடியும் நேரம் நெருங்க நெருங்க, புவனாவின் முகம் இறுக்கமாகிக் கொண்டிருந்தாலே அவள் தோழியருக்கு விஷயம் புரிந்துவிடும்.

“என்னடி! உங்க அணைக்கரை மாமா வந்திருக்காராக்கும்?” என்று கேட்டால், சங்கடமாக ‘ஆம்’  என்று தலையசைப்பாள். மிகவும் நெருங்கிய சொந்தக்காரர். அவள் மீது கொள்ளை அன்பும் அக்கறையும் உள்ளவரும் கூட! ஆனாலும் அவரது வருகை எப்போதும் புவனாவுக்கு எரிச்சலையே அளிக்கக் காரணம், சற்று நுட்பமானது.  “என் முன்னாடி ஜட்டியோட திரிஞ்சவதானே நீ..?” –  இப்படியாகத் தொடரும் அவரது இங்கிதமற்ற பேச்சு. உன்னை குழந்தையிலிருந்து அறிந்தவன் நான் எனும் உரிமையைக் காட்டும் எண்ணத்தோடும்,  பாசத்தைக் காட்டும் வழியாகவும்தான் அவருக்குத் தெரிகிறது. பதின்பருவத்தின் எல்லையில் நிற்கும் புவனாவிற்கோ, குழந்தைப் பருவத்திற்குரிய பேதமையோடு தான் செய்த செயல்கள் பகிரங்கப் படுத்தப்படுவது கூனிக் குறுக வைக்கும் விஷயம் என்பதை அந்த மாமா புரிந்து கொள்ளவே இல்லை. மாமா என்றில்லை, புவனாவின் பெற்றோருக்கும் கூட இப்புரிதல் இல்லை.

இப்படி நெருங்கிய சொந்தக்காரர்கள் நம் குழந்தைகளின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தினாலே, அது குழந்தைகளின் மனதைக் காயப்படுத்துவதோடு, உறவினர்களின் உறவிலும் விலக்கத்தை ஏற்படுத்தும்.  கேலிக்கும் கிண்டலுக்கும் ஓர் எல்லை உண்டு. எது எல்லை என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த மாதம் எல்லா தினசரி நாளிதழ்களிலும் திருப்பதியில் கைது செய்யப்பட்ட  யாதவா மணிகண்டா என்பவரைப் பற்றி, புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியானது. அந்தச் செய்தியைப் படித்த பல பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாயினர். ஆம்! கைது செய்யப்பட்ட யாதவா மணிகண்டா, நூற்றுக்கணக்கான சிறுமியரின் புகைப்படங்களைக் கொண்டு முகநூலில் ஒரு ஆபாசதளம் நடத்தி வந்தவன். ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள், ப்ளாக்,  வாட்ஸ் ஆப் என்று நம் வீட்டுக் குழந்தைகளின் புகைப்படங்களை, நாம் மிகுந்த மகிழ்ச்சியோடு நண்பர்களோடு பகிர்ந்து வருகிறோம். அப்படி பகிரப்பட்ட புகைப்படங்களைத் தொகுத்து,  ஃபேஸ்புக்கில் அந்த ஆபாசதளத்தை நடத்தி வந்துள்ளான் இவன். அப்பக்கத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்கள்  3 ஆயிரத்திற்கும் மேல். இந்த இணையதளம் குறித்த தகவலை அறிந்த சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்,  உடனடியாக முகநூல் நிர்வாகத்துக்கும், சென்னை காவல் துறைக்கும் புகார் அளித்தார். புகார் கிடைத்த உடனேயே, அவனை அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்து, அப்பக்கத்தையும் முடக்கியது சென்னை சைபர்க்ரைம் போலீஸ். பரபரப்பாகச் செயல்பட்ட காவல்துறையின் செயல் நிச்சயம் பாராட்டத்தக்கது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், யாதவா மணிகண்டாவுக்கு ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் கிடைக்கக்கூடும். இந்தச் செய்தி சொல்லும் நீதி என்ன?

தன் பிள்ளைகளின் உரிமை என்ன என்பதை, ஒவ்வொரு பெற்றோரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் நம் மூலம் இவ்வுலகிற்கு வந்தவர்களே தவிர, நம்முடைய உடைமைகள் அல்ல! எனவே, அவர்களின் நுண்ணுணர்வைப் புண்படுத்தும் உரிமை நமக்குக் கிடையாது என்ற தெளிவு பெற்றோருக்குத் தேவை.

“குழந்தையைப் பற்றிய எந்தத் தகவல்களையும் சமூகவலைத்தளங்கள் போன்ற பொதுவெளியில் பகிரவேண்டாம்” என்கிறார், உளவியல் மருத்துவரான கீர்த்திபை. “இன்னைக்கு, சமூகஊடகங்களின் தாக்கம் அதிகம். பெற்றோர் பலரும் விபரம் அறியாமல் தங்கள் பிள்ளைகளின் படங்களை அங்கே போட்டுவிடுகிறார்கள். அப்படங்களைத் திருடி ஆபாசதளத்தில் பயன்படுத்திய ஒருவனை, நம்ம காவல்துறை சமீபத்தில் கைது செய்திருக்கிறது. பெற்றோருக்கும் இதில் ஒரு செய்தி இருக்கிறது. பீச், பார்க், மால், திருமணங்கள் என எங்கே போகும்போதும், நம் வீட்டுக் குழந்தையை பிறர் படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம். நேரடியாகத் தெரிந்தவர் என்றால், பொது வெளியில் பகிர வேண்டாம் என்று சொல்லுங்கள். நேரடியாக அறிமுகமில்லாத, நண்பருடைய, நண்பருடைய நண்பர் என்று எவர் வந்தாலும் மறுத்து விடுங்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் எனக்குத் தெரிந்தவரின் பிள்ளை படத்தை, இப்படியொரு ஆபாசதளத்தில் வலையேற்றி விட்டார்கள். ‘என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்று போன் செய்து கேட்டார். உடனடியாக போலீஸிடம் போகச் சொன்னேன். முதலில் தயங்கியவர், என்னுடைய தொடர் வலியுறுத்தலால் புகார் தெரிவித்தார். அடுத்த சிலமணிநேரத்திலேயே, அத்தளத்தை யார் நடத்துகிறார் என்பதைக் கண்டறிந்து தளத்தையும் முடக்கி, அதை நடத்திய நபரையும் கைது செய்துவிட்டார்கள். எல்லாமே காதும் காதும் வைத்தாற் போல நடந்தது. இங்கேயும் இப்படி யாருக்கேனும் நடந்தால், உடனடியாக காவல்துறையை அணுகவேண்டும். பலவழக்குகளில், காவல்துறை ரகசியம் காப்பாற்றும் நண்பனாகவே இருக்கிறது. அதனால், தயங்காமல் பெற்றோர் செயல்படவேண்டும்” என்கிறார்,மருத்துவர் கீர்த்திபை.

இப்படியெல்லாம் நமக்கு நடந்துவிடாது என்று நம்பும் நல்மனது நமக்கு இருக்கலாம். ஆனால் நடந்துவிட்டால், துளியும் தயங்காது உடனடியாக அக்கயவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க காவல்துறையினரை அணுக வேண்டும்.

இன்று பதின்பருவபிள்ளைகள் பலருக்கும், ஃபேஸ்புக் மாதிரியான இடங்களில் கணக்கு இருக்கிறது. மொபைல் கேமராக்களின் உதவியோடு, இஷ்டம் போல செல்ஃபி எடுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கும் இப்படியான படங்களின் மூலம் எதிர்வரும் ஆபத்துக்களைப் பற்றி சொல்லிக்கொடுங்கள். பெயர், விலாசம், தொடர்புஎண், படிக்கும்பள்ளி, கல்லூரி என தங்களைப் பற்றிய விபரங்களை பொதுவெளியில் வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். இதன் மூலமும் சமூகவிரோதிகள்,குழந்தைகளை எளிமையாக நெருங்கி விட வாய்ப்பு உள்ளது.

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்ற எந்தவொரு சமூகவலைத்தளங்களிலும் குழந்தைகளின் படங்களை கடைவிரிப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக, பெண்குழந்தையின் படங்களைப் பகிர வேண்டாம். வக்கிரம் பிடித்தவர்களின் கைகளில் இப்படங்கள் சிக்கினால், தேவையற்ற மனஉளைச்சல் பெற்றோராகிய நமக்கும் நம் வீட்டுச் செல்லங்களுக்கும்தான். எச்சரிக்கையாகஇருப்போம். குழந்தைகளின் தனி உரிமை நலன் காப்போம்!

வாங்க,பழகலாம்!

 1. பிள்ளைகளுக்கும் அந்தரங்கம் உண்டு என்பதை உணர்ந்து, பெற்றோர் பழக வேண்டும். எந்த உறவுகளும், எல்லை மீறி குழந்தைகளின் அந்தரங்கத்துக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.
 2. ஃபேஸ்புக் போன்ற சமூகதளங்களில் உங்கள்பிள்ளைகள் இருந்தால், அவர்களின் நட்புவட்டத்தில் நீங்களும் இருங்கள். அதன் சாதகபாதகங்களைச் சொல்லிக்கொடுங்கள்.
 3. நல்லவற்றை வழிகாட்டுகிறேன் என்று அட்வைஸ் மழை பொழிந்து, பிள்ளைகளை ஓட வைத்துவிட வேண்டாம். பக்குவமாக எடுத்துச்சொல்லுங்கள்.
 4. அந்தரங்கமாக செல்ஃபி படங்கள் எடுத்துக்கொள்வதோ, நண்பர்கள், தோழிகளுடன் அரைகுறை ஆடைகளுடன் படம் எடுத்துக்கொள்வதோ கூடாதுஎன்பதை, பிள்ளைகளுக்குப் புரியும் வண்ணம் சொல்லலாம்.
 5. தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்டால், பயமில்லாமல் நம்மிடம் பிள்ளைகள் பகிர்ந்து கொள்ளும் சூழல் இருக்கவேண்டும். இதைச் சொன்னால், அம்மா, அப்பா திட்டுவார்கள் என்ற பயம் பிள்ளைகளுக்கு இருந்தால், உண்மையைச் சொல்லாமல் மறைத்துவிட வாய்ப்பு உள்ளது.
 6. பிரச்சனை என்று வந்துவிட்டால், கொஞ்சமும் தாமதிக்காமல் காவல்துறையின் உதவியை நாடுவது நல்லது. சம்பந்தப்பட்ட சமூகவலைத்தளத்தின் நிர்வாகத்தையும் உடனே தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட பக்கத்தை அல்லது தளத்தை முடக்கச் செய்யலாம்.
 7. குடும்பப்புகைப்படங்கள், குழந்தைகளின் புகைப்படங்களை குடும்ப உறுப்பினர்கள், நம்பகமான நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாக இருந்தால், முகநூலில் ‘யாருடன் இவற்றைப் பகிர விருப்பம்?’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள வசதியைப் பயன்படுத்தி, நெருங்கியவட்டத்தை மட்டும் அனுமதிக்கலாம்.

———————-

 

நன்றி – செல்லமே மாத இதழ்(ஜூன்).

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

குறையொன்றும் இல்லை

ரு குழந்தையைப் பார்த்து ”அப்படியே அவங்க தாத்தா போல புத்திசாலித்தனம்” என்றோ ”அப்படியே அவங்க அத்தை போல அழகு” என்றோ சொல்வதை கேட்டிருப்போம். இப்படி சில பண்புகள் பாரம்பரியமாக தலைமுறைகள் தோறும் கைமாற்றப்படுவதன் அடிப்படைக் காரணி நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் மரபணுக்கள்(DNA).

மரபணுக்கள் நற்பண்புகளை மட்டும்தான் சந்ததியினருக்கு கடத்த வேண்டும் என்பதில்லை.  போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் மன அமைப்பு, வரைமுறையற்ற கோபம் என கெட்ட பண்புகளும் கூட தலைமுறை தாண்டி பயணிக்க இந்த மரபணுக்கள் துணை செய்கின்றன. அதைவிடவும் மோசமாக சில நோய்களையும் மரபணுக்கள் கடத்திவிடக் கூடும்.  இந்த மரபணுவின் அமைப்பிலேயே ஏற்படும் சில மாறுதல்கள் காரணமாக உருவாகும் ஒரு குறைபாடே டவுன் சிண்ட்ரோம். டவுன் எனும் மருத்துவர் கண்டடைந்ததால் அவரது பெயரில் அழைக்கப்பட்டாலும், இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் தோற்றத்தை வைத்து மங்கோலாய்டுகள் என்று பேச்சு வழக்கில் அழைக்கப் படும் இந்த குறைபாட்டை குழந்தை கருவில் இருக்கையிலேயே கண்டறிந்து விட முடியும்.

நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் இடம்பெற்றுள்ள மரபணுக்கள்(DNA) என்பவை ஒருவரது பாரம்பரிய பண்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கைமாற்றும் முக்கிய உயிரியல் சாதனம் . ஆனால் இந்த மரபணுக்களிலேயே ஏற்படும் சில திரிபுகளால் ஏற்படுவதே இந்த டவுன் சிண்ட்ரோம் ஆகும். உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் இந்த மரபணுக்களில் 23 ஜோடிகளாக தொகுக்கப்பட்ட 46 குரோமோசோம்கள் எனும் அமைப்புகள் தேவையான உயிரியல் தகவல்களை தாங்கியிருக்கும். ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் மட்டும் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47ஆக உயரும்.  இக்குழந்தைகளில் 95 சதவீதம் பேருக்கு 21வது இரட்டை குரோமோசோம்கள் மட்டும் மூன்றாக பிரிந்திருக்கும் நிலையே இந்நோய்க்கு காரணம் என்பதால் இக்குறைபாடே ட்ரைசோமி 21(Trisomy 21) என்று அழைக்கப் படுகிறது.

கருவுற்ற 12வது வாரத்தில் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளில் இந்த மரபணுக் குறைபாட்டுக்கான அபாயம் தெரிந்தாலோ அல்லது நமது பரம்பரையில் யாருக்கேனும் இந்த நோய் தாக்கியிருந்தாலோ அடுத்த கட்ட சோதனையை மருத்துவர்கள் சிபாரிசு செய்வார்கள்.  கோரியானிக் வில்லஸ்(Chorionic villus sampling – CVS) எனப்படும் இந்த நவீன பரிசோதனை டவுன் சிண்ட்ரோம் உள்ளிட்ட 200 வகையான மரபணு சார்ந்த குறைபாடுகளைக் கண்டுணர வல்லது.  கருவின் நஞ்சுப் பகுதியில் இருந்து மாதிரி எடுத்து செய்யப்படும் இச்சோதனையை செய்வதில் 0.5 முதல் 1 சதவீதம் வரை கருக்கலையும் வாய்ப்பு உள்ளது என்பதும்,  மேலும் சில நேரங்களில் பனிக்குடத்தில் இருந்து திரவக் கசிவு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

நவீன மருத்துவம் வானளவு வளர்ந்து, கருவிலேயே இக்குழந்தைகளைக் கண்டறிந்து அழித்துவிட வாய்ப்புகள் உள்ள நிலையிலும் இன்னமும் கூட இக்குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் இருக்கவே செய்கின்றனர். இதற்கு கருக்கலைப்பு பாவம் என்கிற மதநம்பிக்கை அல்லது இந்த நவீன சோதனைகளைப் பற்றிய விழிப்புணர்வு இன்மை என காரணங்கள் பல.

இந்தியாவில் வருடம் ஒன்றிற்கு சராசரியாக 23,000 முதல் 29,000 வரையிலான குழந்தைகள் இக்குறைபாட்டுடன் பிறக்கிறார்கள் என்றாலும் இவர்களுக்கு பிறவியிலேயே இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் என்பதால் அதில் தப்பிப் பிழைப்பவர்கள் வெறும் 44 சதவீதம் மட்டுமே.

மேல் நோக்கி ஏறிய கண்கள், வட்டமான முகம், தடித்த நாக்கு, வயதுக்கேற்ற உயரமோ எடையோ இல்லாது இருப்பது என பலவிதத்திலும் புறத்தோற்றத்திலேயே மாறுபட்டு இருப்பதால் சமூகத்தில் இவர்கள் தனித்தீவாகவே வாழ நேர்கிறது. ஆனால் உள்ளுக்குள் இவர்களும் இனிமையான கலகலப்பான மனிதர்களே. இசை, நடனம் போன்ற கலைகளில் ஈடுபாடு, சூழ உள்ள மனிதர்களின் அன்பை புரிந்து கொள்வது என ஒரு சராசரியான வாழ்கைக்கு ஏங்கும் இவர்களைப் புரிந்து கொள்வதும், அவர்களுக்கு தேவையான அனுசரணையான சூழலை உருவாக்குவதும் நம் கடமை.

இளம்பிராயத்திலேயே தொடங்கப்படும் பயிற்சிகள்(Early Intervention), சமூகத்தின் அரவணைப்பு(Inclusion), தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பு(Progressive health care) என்ற மூன்றும் இக்குழந்தைகளின் அத்யாவசியத் தேவை.

பயிற்சிகள்:

 1. உடலியக்க பயிற்சிகள்(physiotherapy) – உடலின் தசைகளை உறுதிப்படுத்தவும், அசைவுகளை சீராக்கவும் இந்தப் பயிற்சிகள் தேவை.
 2. பேச்சுப் பயிற்சி(Speech Therapy) – பெரும்பாலானவர்களுக்கு நாக்கு தடித்துக் காணப்படும் என்பதால் இவர்களுக்கு பேச்சுப் பயிற்சி அவசியமாகிறது.
 3. சிறப்புக் கல்வி(Special Education) – இவர்களின் நுண்ணறிவுத் திறன் சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என்பதுடன் பல்வேறு உடல்நலச் சிக்கல்களும் இருப்பதால் இவர்களுக்கு வகுப்பறைக் கல்வி முறையில் கற்பிக்க முடியாது. செயல்வழி கற்றல் முறையே இவர்களுக்கு சிறந்தது.
 4. யோகா மற்றும் இசை – மேலதிகமாக இவர்களின் மன அழுத்தங்களை குறைக்க யோகா மற்றும் இசை தெரப்பிகளும் அளிக்கப்படலாம்.

திருவான்மியூரைச் சேர்ந்த மூத்த சிறப்புக் கல்வி ஆசிரியை திருமதி. உஷாவிடம் இக்குழந்தைகளைப் பற்றிக் கேட்டபோது தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

திருமதி. உஷா, சிறப்புக்கல்வியாளர்

 

“நான் டவுன் சிண்ட்ரோம் மட்டுமில்லாம பல்வேறு வகையான வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகளோட வேலை செஞ்சிருக்கேன். அந்தக் குழந்தைகள்லேயே இவங்களைக் கையாள்வதுதான் ரொம்ப சுலபம். ஏன்னா இவங்கள அன்பால ரொம்ப சுலபமா வசியம் பண்ணிடலாம். எல்லா மனிதர்களுமே அன்புக்கு கட்டுப்படுவாங்கன்னாலும் கூட இவங்க ரொம்ப சீக்கிரம் நம்மள புரிஞ்சுகிட்டு நம்மளோட ஒட்டிருவாங்க.

ஒரு குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் இருக்குன்றத கருவிலிருக்கும் போதே உறுதி செஞ்சுட முடியும். அதுல தவறிட்டாலும் கூட குழந்தை பிறந்த உடனேயே மருத்துவர்களால இந்தக் குறைபாட்டை அடையாளம் கண்டுட முடியும். எனவே உடனடியாக பயிற்சிகளைத் துவங்குறது அவசியம். இவங்களோட நாக்கு தடிப்பா இருக்கும்ன்றதால பேச்சு சரியா வராது. அதே போல தசைகள் ரொம்ப தளர்வா இருக்கும்ன்றதால நடக்குறது, பொருட்களை தூக்குறது போன்ற விஷயங்களும் சிரமம்தான். ஆனா இதெல்லாத்துக்கும் பயிற்சிகள் இருக்கு. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் இவர்களுக்கு பயிற்சி அளிக்கறோமோ அவ்வளவு தூரம் இவங்கள சகஜமான வாழ்கைய நோக்கி கூட்டிவரலாம்.

ஆரம்ப கட்ட அதிர்ச்சின்றது எல்லா பெற்றோருக்கும் இருக்கும்னாலும் சீக்கிரமா சுதாரிச்சுகிட்டு உடலியக்கப் பயிற்சிகள்(physiotherapy), பேச்சுப் பயிற்சி போன்றவற்றை ஆரம்பிச்சா குழந்தையின் எதிர்காலம் நல்லாருக்கும். ஆனால் இவங்களோட கற்கும் திறன் கொஞ்சம் குறைவு என்பதால சிறப்புக் கல்வி முறைகளை பயன்படுத்தித்தான் கற்பிக்க முடியும். நல்லா படிச்சாலும் கூட வயதாகும் போது கற்ற விஷயங்களை மறந்துவிடும் வாய்ப்பும் இவங்களுக்கு அதிகம். அதுனால இவங்களுக்கு பேப்பர் கப் செய்யறது, மெழுகுவர்த்தி தயாரிப்பு, சாமான்களை அளந்து பொட்டலங்கள் உருவாக்குவது போன்ற எளிய கைத்தொழில்களை சின்ன வயசுலேர்ந்தே பயிற்றுவிக்கறதும் முக்கியம். அது அவங்களுக்கு ஒரு தன்னம்பிக்கைய கொடுக்கும்.“ என்று நம்பிக்கையூட்டுகிறார்.

பெரும்பாலும் பிறவியிலேயே இதய நோய் குறைபாட்டுடன் பிறக்கும் இக்குழந்தைகளுக்கு மேலும் பல்வேறு நோய்களும் வருவதற்கான அபாயம் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.  பார்வைக் குறைபாடு, கேட்கும் திறன் குறைபாடு, ஜீரண சிக்கல்கள், தைராய்டு குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்திக் குறைவினால் அடிக்கடி சளி போன்ற தொல்லைகளுக்கு ஆளாதல் என இவர்களைத் தாக்கும் சிக்கல்கள் எண்ணிலடங்காதவை. தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்புகள் இவர்களுக்கு அவசியம்.

abhiyum deivayanaiyum 004

அபிராமியுடன், திருமதி தெய்வானை சொக்கலிங்கம்

 

இத்தனை உடல்நல, மனநல சிக்கல்களோடு பிறக்கும் இக்குழந்தைகளை முழுமையான ஈடுபாட்டோடு வளர்த்து வரும் பெற்றோர்களில் ஒருவரான திருமதி. தெய்வானை சொக்கலிங்கம், தனது மகள் அபிராமி (வயது 30)யை இசை வகுப்புக்கு அனுப்பி விட்டு காத்திருந்த நேரத்தில் தன் எண்ணங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இவர் ஒரு சிறப்புக் குழந்தையின் தாய் மட்டுமல்ல வேறு சில பெற்றோர்களுடன் சேர்ந்து சிறப்பு பள்ளி ஒன்றினை தொடங்கி நடத்துவதிலும் தன் பங்களிப்பை செய்தவர்.

”இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனைன்னு டாக்டர் சொல்லும் போது அவ்வளவு சீக்கிரத்துல அத ஒத்துக்கறதில்ல. முதலில் பிரச்சனையை ஏத்துக்கற(Acceptance) மனப்பக்குவம் வேணும். வளர வளர தன்னால சரியாப் போயிடும், அந்த சாமிக்கு வேண்டிகிட்டா போதும், இந்த விரதம் இருந்தா போதும் என்பது போன்ற சிறு சிறு சமாதானங்கள் ஒரு போதும் இந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவாது. நம் குழந்தைகளை, அவர்களின் வாழ்கையை வடிவமைக்கும் முழுப் பொறுப்பும் நம்மிடம் மட்டும்தான் இருக்குன்றத எவ்ளோ சீக்கிரம் உணர்ந்து பயிற்சிகளை ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு தூரம் இவர்களை சராசரி வாழ்கைய நோக்கி நகர்த்த முடியும். முழுமையா இல்லைன்னாலும் நம்ம உதவி இல்லாம எவ்ளோ தூரத்துக்கு முடியுமோ அவ்வளவு தன்னிச்சையா வாழ அவங்களை பழக்கறதுதான் நம்ம முக்கிய நோக்கமா இருக்கணும். Less dependent, Near Normal என்பதுதான் நம்ம இலக்கா இருக்கணும். முழுமையா குணமாக்குவது என்பது போன்ற சித்து வேலைகளை எல்லாம் நம்பி பணம், நேரம், எதிர்பார்ப்பு எல்லாத்தையும் வீணடிப்பதில் அர்த்தமே இல்ல.

அடுத்தது, சமூகத்துல எல்லாரும் இந்தக் குழந்தைகள அவங்களும் சக மனுஷங்கதான்னு ஏத்துக்கணும். அதிலும் இவங்க புறத்தோற்றத்திலும் ரொம்பவே வித்யாசமா இருக்காங்களா, அதுனால ஏதோ வேற்றுகிரகவாசிய பாக்கறது போல பாக்கறாங்க. அது தவிர்க்கப் படணும்னா ஜனங்களுக்கு இது மாதிரியான குறைபாடுகள் பற்றின விழிப்புணர்வு அதிகம் வேணும். அடிப்படைல ரொம்ப ரொம்ப அன்பான, மனுஷங்களுக்கு நடுவுல வித்யாசமே பாக்கத் தெரியாதவ என் பொண்ணு அபிராமி. எல்லோரிடமும் ஒட்டிக் கொள்ளும் சுபாவம் உள்ள அவ இன்னிக்கு வளர வளர ரொம்பத் தனிமை விரும்பியா மாறிட்டா.  மத்தவங்க தன்னை வேறுபாடா நடத்தறாங்கன்றத அவ புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்கறதுதான் இதுக்கு காரணம். இந்த நிலை மாறி அவங்கள காட்சிப் பொருளா பாக்கும் வழக்கம் நம்ம சமூகத்துல இல்லாம ஆனா, அவங்களும் சந்தோஷமாவும், இயல்பாவும் ஒரு வாழ்கைய வாழ முடியும்.

அரசாங்கத்துல இந்தக் குழந்தைகளோட நிலைய பதிவு செய்யப் போனா அவங்க வச்சிருக்கும் ஒரே அளவுகோல் மன வளர்ச்சி குன்றியோர்(Mentally retarded) என்பது மட்டுமே. டவுன் சிண்ட்ரோம், ஆட்டிசம் என ஒவ்வொரு குறைபாட்டையும் தனித்தனியா பிரிச்சு, பாதிக்கப் பட்ட குழந்தைகளின் எண்ணிகைய சரியா சேகரிச்சு, அதுக்கு தக்கபடி அரசு நிதி ஒதுக்கீடுகளை செய்யணும். குறிப்பா இக்குழந்தைகளுக்கு அதிக உடல்நலச் சிக்கல்கள் இருப்பதால இவங்களுக்குன்னு தனியா காப்பீட்டு திட்டங்கள் வேணும்.” என்கிறார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் பலம் என்று நம் பாட புத்தகங்களில் கற்பிக்கப் பட்டாலும் யதார்த்தம் என்னவோ வேறாகத்தான் இருக்கிறது. மனநல, உடல்நலக் குறைபாடுகள் உடையவர்களை மட்டுமல்ல, மாற்றுப் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள்  போன்ற அனைவரையுமே இயல்பாக அணுகுவதில் நம் சமூகத்தில் நிறைய மனத்தடைகள் உள்ளன. அதிலும் டவுன் சிண்ட்ரோம் போல வெளித் தோற்றத்திலேயே மாறுபாடுகளைக் கொண்டிருப்பவர்களை வெறித்து பார்ப்பது, அவர்களோடு பழகுவதை தவிர்ப்பது அல்லது அவர்களின் பெற்றோர்களுக்கு/குடும்பத்தினர்களுக்கு எந்த அடிப்படையுமற்ற ஆலோசனைகளை வழங்க முற்படுவது என பலவிதங்களில் அவர்களை தாம் இச்சமூகத்திற்கு அன்னியர்கள் என்று உணரவைத்துக் கொண்டே இருக்கிறோம். மேலை நாடுகளிடமிருந்து எண்ணற்ற விஷயங்களை பின்பற்ற நினைக்கும் நாம் இது போன்ற சகலவிதமான மனிதர்களையும் அரவணைக்கும் அவர்களின் சமூகக் கட்டமைப்பையும் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

டவுன் சிண்ட்ரோம் குறைபாடுடையவர்களையும் நன்கு பயிற்சி அளித்து சமையல், அறை பராமரிப்பு, சாமான்களை அளந்து பொட்டலங்கள் உருவாக்குவது, நெசவு போன்ற சிறு சிறு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை நகரில் இயங்கும் பல்வேறு சிறப்புப் பள்ளிகள் நிறுவி வருகின்றன. இத்தகைய வேலைவாய்ப்புகள் பொருளாதார ரீதியில் பெரிய பலன் களைத் தராவிட்டாலும் கூட இக்குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வளர அடிப்படைக் காரணிகளாக அமையும். ஆனால் இது போன்ற வேலைகளுக்கு இக்குழந்தைகளை அனுப்புவதற்கு முன் பணியிடப் பாதுகாப்பை நன்கு உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று திருமதி. தெய்வானை தன் பேச்சில் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் வசிக்கும் செல்சியா வெர்னர் எனும் டவுன் சிண்ட்ரோம் குறைபாடுடைய பெண் தொடர்ச்சியாக நான்கு முறை சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருக்கிறார். இது போன்ற சாதனை மனிதர்கள்தான் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை பொறுமையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வளர்க்கும் பெற்றோருக்கு ஆதர்சங்கள்.

(மார்ச்-21ம் தேதி சர்வதேத  டவுன் சின்ட்ரோம் நாள்)

(2015 மார்ச் – செல்லமே மாத இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறப்பியல்புக் குழந்தைகள், டவுன் சிண்ட்ரோம், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

சித்திரம் பேசேல் – புத்தக மதிப்புரை

chithiram

டிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்கிறார் வள்ளுவர். அதிகாரம் என்பது கட்டற்றதாக இருந்துவிடக் கூடாது. அது ஒரு போதும் சமூகத்துக்கு நன்மை பயக்காது என்பதுதான் இதன் பொருள். சங்கப் பாடல்களைப் பார்த்தோமேயானால் கோவூர்க் கிழார், பொய்கையார் என மன்னனை இடித்துரைத்த, நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய புலவர்கள் பலரைக் காண முடிகிறது. அதிகாரத்தை கேள்வி கேட்கும், வழிநடத்தும் பொறுப்பை அறிவு சார் குழு ஒன்று எப்போதும் நம் சமூகத்தில் செய்தே வந்துள்ளது என்பது நாம் நம் தமிழ் மரபில் பெருமைப் பட்டுக் கொள்ள கிடைக்கும் அம்சங்களில் ஒன்று.

இன்றைய நவீன ஜனநாயக யுகத்தில் அரசை கேள்வி கேட்கும், அதன் தவறுகளை சுட்டிக் காட்டும் தார்மீக உரிமையைக் கைவசம் வைத்திருப்பவை ஊடகங்கள். சரி, அப்படியெனில் அந்த உரிமை சரியான வகையில் கையாளப் படுகிறதா என்பதையும் சீர் தூக்கிப் பார்க்க ஒரு வழிவகை வேண்டுமல்லவா? பத்திரிக்கை தர்மம் என்பது தமிழில் புழங்கும் ஒரு தேய்வழக்கு(cliché). ஆனால் அப்படி ஒன்று இருக்கத்தான் செய்கிறதா என்ற கேள்வி இன்று தொடர்ந்து ஊடகங்களை பார்க்கும் எவருக்கும் எழத்தான் செய்யும். தொலைக்காட்சி அலைவரிசைகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு கட்சிக்கும் ப்ரத்யேகமாக செய்திக்கு மட்டும் என்றே ஒரு சேனல். அந்த செய்திகளைக் கேட்டால் நமக்கு தலை சுற்றிப் போகும். பத்திரிக்கைகளும் விதிவிலக்கல்ல. இப்போது நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பையும், அதற்கு பின் நம் மாநிலத்தில் போராட்டம் எனும் பெயரில் நடக்கும் கேலி கூத்துக்களையும் கண்டித்து காத்திரமான, நடுநிலையான ஒரு கட்டுரையேனும் எந்தப் பத்திரிக்கையிலாவது வெளி வந்திருக்கிறதா என்ன?

இந்த நிலை மாற வழி என்ன என்று யோசித்தால் பத்திரிக்கைகளையும் வழி நடத்த ஊடக விமர்சனங்கள் எனும் வகைமையில் அதிகமான படைப்புகள் வர வேண்டியது அவசியம். மீடியா வாட்ச் எனும் அமைப்பு இந்தப் பணியை முன்னெடுத்து ஒரு நல்ல ஆரம்பம். இந்த முன்னெடுப்பில் மீனாவின் பங்களிப்பாக வெளிவந்த கட்டுரைகள் இங்கே ஊடக அவதானிப்புகள் எனும் தலைப்பில் தொகுக்கப் பட்டிருக்கின்றன.

அதில் குறிப்பாக கவுகாத்தியில் நடந்த பாலியல் வன்முறையையும், அதனை படம் பிடித்து ஒளிபரப்பிய தொலைகாட்சி ஊழியரையும் முன்வைத்து எழுதப் பட்டுள்ள கட்டுரை ஒரு காத்திரமான ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனிமனிதனாகவே தான் கடைபிடிக்க வேண்டிய அறம் அல்லது ஒழுக்கக் கோட்பாடு என்று ஒன்று உண்டு. செய்யும் தொழில், உறவுகள் போன்றவற்றை முன்னிட்டு ஏற்படும் அறக்கட்டுப்பாடுகள் தனி. இவை ஒன்றோடு ஒன்று முரண்படும் வேளையில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான, முக்கியமான கேள்வி. காலகாலமாக இந்த கேள்வியும், இது சார்ந்த வாதப் பிரதிவாதங்களும் நிகழ்ந்தவண்ணமே உள்ளது.

காவியங்கள் தொடங்கி இன்றுவரை நீளும் இந்த கேள்வித் தொடருக்கு அவ்வப்போது நாம் நம் புரிதலுக்கும், அறிவுத் தேடலின் நீளத்துக்கும் ஏற்ப விடை கண்டு நம் மனசாட்சியைத் திருப்தி செய்து கொள்ள முடியுமே அன்றி அதை எல்லாரையும் ஏற்றுக் கொள்ள செய்துவிட முடியாது.
இந்து நாளிதழில் இந்நிகழ்வை ஒட்டி கரன்சிங்க் தியாகி எழுதிய ஒரு கட்டுரையின் சாராம்சத்தை மொழிபெயர்த்துத் தருகிறார் மீனா. 1994ல் புலிட்சர் பரிசை வென்ற கெலின் கார்ட்டரின் புகைப்படம் சூடானில் பட்டினியாலும் வயிற்றுப் போக்காலும் பாதிக்கப்பட்டு குற்றுயிராக கிடந்த ஒரு சிறுமியை கழுகொன்று கொத்தி தின்பதை பதிவு செய்திருந்தது. அந்தக் குழந்தையை காப்பாற்ற முயற்சிக்காமல், தெளிவாகவும் அழகுனர்ச்சியோடும் அந்தப் படத்தை பதிவு செய்தார் என்று விமர்சிக்கப் பட்டதால் கெலின் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை விவரிக்கும் கரண்சிங்க், அதே போன்ற கேள்வியை இந்த கவுகாத்தி சம்பவத்தை முன்வைத்தும் எழுப்பிக் கொள்கிறார்.

பின் வேறொரு நிகழ்வு. வெள்ளைப் போலீசாரால் கருப்பின குழந்தைகள் சிலர் முரட்டுத் தனமாக தள்ளப்பட்ட போது அவர்களை காக்க ஒடிவந்த பத்திரிக்கையாளரிடம் மார்டின் லூதர் கிங் “நீங்கள் அக்குழந்தைகளை காப்பாற்றுவதை விட இச்சம்பவத்தை உலகத்திற்கு அறிவிப்பதே எங்களுக்கு செய்யும் பேருதவி” என்று சொன்னதையும் கரன்சிங்க் நினைவு கூர்கிறார்.

இந்த இரண்டு வகையான வாதங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும் கட்டுரை பின் தன் இறுதிப் பகுதிக்கு வருகிறது. ஒரு பத்திரிக்கையாளராக அந்நிகழ்வை படம் பிடித்தது தவறில்லை. ஆனால் அந்த படக்காட்சி குற்றவாளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஏதேனும் நிவாரணம் அளிக்கவும் உதவு வகையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் நேர்மாறாக காயம்பட்ட பெண்ணை, அவளது அடையாளத்தை உலகுக்கு வெளிப்படுத்தவே அக்காட்சி பயன்படுகிறது என்பது ஒரு நல்ல பத்திரிக்கையாளருக்கோ ஏன் ஒரு தனி மனிதனுக்குமே நியாயமான ஒரு செயல் அல்ல.

கரன்சிங்க் தியாகியின் கட்டுரை இந்த மட்டோடு நிறுத்திக் கொள்ள மீனா அதை மொழியாக்கம் செய்வதோடு நின்று விடாமல் தமிழக அளவில் ஊடகங்கள் இச்செய்தியை எப்படி வெளியிட்டனர் என்பதையும் அலசுகிறார். குறிப்பாக தினமணி தன் தலையங்கத்தில் பெண்களுக்கு புத்திமதிகளை அள்ளிவிட்டிருப்பதை சாடவும் தவறவில்லை. டில்லி நிர்பயா வழக்கிற்கு பிறகும் தினமணி இதே போன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தது. அந்த பஸ்ஸில் எத்தனை பேர் இருக்கிறார்கள், குறிப்பாக வேறு பெண்கள் யாரேனும் இருக்கிறார்களா என்றெல்லாம் பார்த்துவிட்டு ஏறியிருக்க வேண்டுமாம். யாரேனும் ஒரு பெண் முன்கூட்டியே ஏறியிருந்தால்தான் மற்ற பெண்கள் ஏற வேண்டும் என்றால் அந்த முதல் பெண் எப்படி வண்டிக்குள் ஏறமுடியும்? இப்படியாக தினமணி தொடங்கி இப்போது ஜேசுதாஸ் வரைக்கும் எல்லோரும் பெண்களுக்கு அறிவுரைகளாக அள்ளி வீசிய வண்ணம்தான் இருக்கிறார்கள்.

சமச்சீர் கல்வி பற்றிய மீனாவின் கட்டுரை முக்கியமான ஒன்று. பாடத்திட்டம்(syllabus) ஒன்றாவதால் மட்டுமே முழுமையான சமச்சீர் கல்வி சமூகம் முழுமைக்கும் கிடைத்துவிடாது என்பதை ஒப்புக் கொள்ளும் மீனா அதே நேரம் இந்த புது பாட புத்தகங்கள் நிச்சயம் ஒரு அந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல் என்பதையும் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பாட புத்தகத்தையும் அலசி ஆராய்ந்து இன்னமும் மிச்சமிருக்கும் பழமையான கருத்துக்களை சுட்டிக் காட்டுகிறார்.  பன்மைத்துவ சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் பெயர்களில் சிறுபான்மையினப் பெயர்களும் பயன்படுத்தப் பட்டிருக்கலாம், கற்பனையை வளர்க்க உருவாக்கப் பட்டிருக்கும் பகுதிகளான இப்படி இருந்தால் எனும் பகுதி இன்னமும் நேர்மறை எண்ணங்களை குழந்தைகளிடம் விதைக்கும் படி இருக்க வேண்டும் என்பது போன்ற நல்ல அவதானிப்புகளைக் கொண்ட கட்டுரை இது.

அதேநேரம் ஆதிமனித வாழ்வைப் பற்றி பேசும் பாடத்தில் அது ஆண்மைய வாசகங்களைக் கொண்டிருப்பது கண்டு மீனா பொங்கியிருப்பது கொஞ்சம் அதிகப்படியாக தோன்றுகிறது. இன்னமும் நம் சமூகத்தில் பெரும்பான்மை சொல்லாடல்கள் ஆண்மைய வார்த்தைகளாகத்தான் உள்ளது. வரலாறே இங்கே இன்னமும் ஹிஸ்டரிதான், ஹர்ஸ்டோரி அல்ல. எனவே புழக்கத்திலிருக்கும் அதே சொற்களை பாடநூலிலும் காண்பது தவறுதான் என்றாலும் கூட அது எதோ திட்டமிட்ட சதி என்பது போல் நாம் எடுத்துக் கொள்ளவும், உணர்ச்சிவயப்படவும் தேவையில்லை. அதற்காக அதை சுட்டிக் காட்டக் கூடாது என்பதில்லை.

ராதிகா சாந்தவனம் – பெண்ணுடலும் பாலியல் வேட்கையும், ஒரு முன்மாதிரி எனும் கட்டுரையும் குறிப்பிடத்தக்க ஒரு ஆக்கம்.  பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துப் பழனி எனும் தேவதாசி ஒருவரால்  இயற்றப்பட்ட இந்தக் காவியத்திலிருந்து சில கவிதைகளை மொழிபெயர்த்து தந்திருக்கும் மீனா அவற்றின் சிறப்புகளை முன்வைக்கிறார்.  இன்றும் ஒரு ஆண் எழுதும் போது அதில் அவரது அனுபவம் எவ்வளவு, கற்பனை எவ்வளவு என்ற விகிதாச்சாரத்தைப் பற்றி கேள்வி கேட்போர் யாருமில்லை. ஆனால் அதுவே எழுதுவது பெண்ணென்றால் அதுவும் எழுதப்படுவது பாலியல் சார்ந்த விஷயங்களென்றால் முதலில் பெரும்பான்மை வாசகர்கள் அறிய விரும்புவது அதெல்லாம் எழுத்தாளரின் சொந்த அனுபவமா என்பதையே. ஆமென்றால் உடனே நமக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே அடுத்த கேள்வியாக இருக்கும். இப்படியான சூழலில் மராட்டிய காலகட்டத்தில் தஞ்சைப் பகுதியில் வாழ்ந்த ஒரு பெண் இப்படி பாலியல் சார்ந்த கதையாடல்களை, அதுவும் பெண்ணை முக்கியத்துவப்படுத்தும் பிரதி ஒன்றை எழுதியிருக்கிறார் என்பது அவரது வித்யா கர்வத்தையும், தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. ஆனால் கீத கோவிந்தம் எனும் சிருங்கார ரச காவியத்தைக் கொண்டாடும் பக்தி மரபுதான் முத்துப் பழனியின் இந்த நூலை தனது நிலவறைக்குள் கைமறதியாக சொருகி வைத்துவிட்டு அமைதியானது. ஏனெனில் முன்னதை எழுதியவர் ஜெயதேவர் எனும் ஆண் அல்லவா? மீண்டும் அந்த நூலை கைப்பற்றி அச்சுக்கு கொண்டு வந்தவர் தேவதாசி சமூகத்திலிருந்து வந்த இன்னொரு பெண்மணி – வித்யா சுந்தரி பெங்களூர் நாகரத்தினம் அம்மாள். அவர் அந்த நூலை அச்சிட்டு வெளியிட்ட போது பெற்ற வசைகளும், கண்டனங்களும் கணக்கிலடங்காதவை.  முத்துப் பழனி, நாகரத்னம்  – இருவருக்கும் மட்டும் எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது? இருவருமே தேவதாசி இனத்தைச் சேர்ந்தவர்கள் எனும் போது நம்மை புதிதாக என்ன இழிவு செய்துவிட முடியும் என்ற துணிச்சலோ அது என்று தோன்றுகிறது.

வ.வே.சு ஐயரைப் பற்றிய நம் மன பிம்பங்களை அசைத்துப் பார்க்கும் கட்டுரையும் மீனா பன்மைத் தன்மை என்பதில் எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கையுடையவர் என்பதைக் காட்டுகிறது. அதில் ஐயர் இறந்தபோது பெரியார் எழுதிய இரங்கற் செய்தியை மேற்கோளிட்டிருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இஸ்லாமியர்களையும் உள்ளடக்கிய அவரது தேசியம் குறித்த சிந்தனைகளும், ஆயுதப் போராட்டத்திலிருந்து அகிம்சையை நோக்கித் திரும்பிய அவரது பார்வையையும் அழகாக நிறுவும் இந்தக் கட்டுரை இப்புத்தகத்தின் முக்கியமான கட்டுரைகளில் ஒன்று.

பொதுவாக இந்த புத்தகத்தின் கருத்துக்களோடு ஒத்துப் போக முடியும் என்னால் சில இடங்களில் அவரது மொழியோடு ஒத்துப் போக முடியவில்லை. ஒருவருக்கு ஒருவர் மட்டும் கருத்துப் பரிமாறுவதற்கும் ஒருவர் ஒரு கூட்டத்தோடு உரையாடுவதற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் பேசும் போது நாம் கொள்ளும் அதே உணர்வை எதிராளியும் எதிரொலிக்க வாய்ப்புகள் அதிகம். நான் கோபமாக பேசினால் எதிராளியும் கோபமடைவார். ஆனால் ஒருவர் கூட்டத்திடம் உரையாடும் போது இந்த மனநிலை பெரும்பாலும் நேரெதிராகவே பரவுகிறது. நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினால் அது கூட்டத்தினரிடம் எதிரொலிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த உணர்ச்சி வசப்பட்ட மொழியும், உடல்மொழியுமே கூட அவர்களை எரிச்சலடையவோ அல்லது என்னை நக்கலாக பார்க்கவோ வைத்துவிடும் அபாயம் உண்டு. அதே போல நிதானமான ஆனால் அழுத்தமான பேச்சு கூட எதிரிலிருக்கும் கூட்டத்தை வெறியேற்றவும் முடியும். இரண்டாம் வகைப் பேச்சுக்கு ஹிட்லரின் பேச்சை உவமை கூறுவதுண்டு. சமகாலத்தில் வேண்டுமானால் நாம் இப்போது பால்தாக்ரேவையும், நரேந்திர மோடியையும் உவமை கூறலாம்.

அதே போலவே எழுத்திலும் சற்று மென்மையாக எழுதும் போது நாம் சொல்ல வரும் கருத்தை வாசகருக்கு சரியாக கடத்த முடியும். சிவந்த நிறமாய் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்பது போலவே உணர்ச்சி வசப்படாமல் பேசுபவர்களும், எழுதுபவர்களும் அறிவாளிகள் என்று நம்பும் சமூகம் நம்முடையது. எனவே மீனாவும் தனது நடையை கொஞ்சம் தளர்த்தி உணர்வு வயப்பட்ட வார்த்தைகளை தவிர்த்து எழுதுவாரேயானால் வாசகர்களுக்கு தனது கருத்துக்களை கடத்துவதில் 100% வெற்றிபெறுவார் என்பதில் ஐயமில்லை.

 

**********

புத்தகம்: சித்திரம் பேசேல்

ஆசிரியர்: மீனா

பதிப்பகம்: எதிர் வெளியீடு

முதல் பதிப்பு – ஆகஸ்டு 2013

***********

11.10.2014 அன்று மிளிர் இலக்கிய அமைப்பு நடத்திய விமர்சன அரங்கில் வாசிக்கப்பட்ட மதிப்புரை.

Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம், விமர்சனம் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக