உதிரிப் பூக்கள் – 26, ஜனவரி, 2012

கலைச்செல்வன் சார் – நான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், பிறகு தலைமை ஆசிரியராகவும் வேலை பார்த்தவர். பெயருக்கேற்றார்ப் போல கலை இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்சிகள் இவர் தலைமையிலான ஒரு குழுவின் பொறுப்பு. சினிமாப் பாடல்களின் ட்யூனுக்கு குழந்தைகளுக்கு ஏற்ற வரிகளாய்ப் போட்டு அவர் தயார் செய்யும் பாடல்களுக்கு ரெஜினா டீச்சர் நடனம் கற்றுத் தருவார். விழாவன்று ரெஜினா டீச்சரும், செல்வராஜ் சாரும் மைக்கில் பாடல்களைப் பாட நாங்கள் மேடையில் ஆடுவோம். நாடகங்கள் என்றால் முழுப் பொறுப்பும் கலைச்செல்வன் சார்தான். கவிதைப் புத்தகங்கள் எழுதி வெளியிடுதல், திருக்குறள் மன்றங்கள் என்று நிறைய இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்.

நேற்று அப்பா தொலைபேசியில் அழைத்து புதிய தலைமுறை பத்திரிக்கைல நீ எதுனா எழுதியிருக்கயாம்மா என்று கேட்டார். ஆச்சரியத்துடன் ஆமாப்பா, நீங்கதான் புத்தகம்லாம் படிக்கறதில்லையேன்னு சொல்லலை. உங்களுக்கு எப்படித் தெரியும்னு கேட்டேன்.

காலைல கலைச்செல்வன் கால் பண்ணி சார், நம்ம லக்ஷ்மி எழுதின கட்டுரை புதிய தலைமுறைல வந்திருக்கு. ரொம்ப சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு. வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லிருங்கன்னு சொன்னார்மா என்றார்.

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் வாங்கினா மாதிரி மகிழ்வா இருக்கு. புதிய தலைமுறை இதழுக்கு நன்றி.

*******

நண்பன் படம் பார்த்தோம். நான் இதன் இந்தி வெர்சன் பார்க்கவில்லையென்பதால் எந்த ஒப்பீடும், உறுத்தல்களும் இல்லாமல் படம் பார்த்தேன். அதனாலோ என்னவோ ரொம்பவே பிடித்தது. ஷங்கரின் வழக்கமான அரைத்த மாவான ராபின் ஹூட் கதையல்லாமல் ஒரு நல்ல கதை. ரீ மேக்தான் என்றாலும் கூட அதிலும் ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தை தேர்ந்தெடுத்த தைரியத்திற்கே ஷங்கரை பாராட்டலாம்.

எனக்கு படத்தில் பிடித்த அம்சங்கள்:

1. பஞ்ச் டயலாக்குகள், ஒப்பனிங் சாங்க், ஃபைட் என்று எதுவுமே இல்லாத ஒரு மிகச்சாதாரண படத்தில் நடிக்கும் தைரியம் இத்தனை வருடங்களுக்குப் பின்னாவது விஜய்க்கு வந்திருப்பது பாராட்டப் பட வேண்டிய முக்கிய விஷயம்.

2. ஜீவாவின் அருமையான நடிப்பு. அதிலும் அவர் தனது தற்கொலை முயற்சிக்குப் பின் தைரியமும், முதிர்ச்சியும் பெற்றுவிட்டதை பாடி லாங்குவேஜ் மூலமே வெளிப்படுத்துவது அபாரம்.

3. சத்யனின் நடிப்பு – பள்ளி, கல்லூரிகளில் அநேகமாய் எல்லோருமே இது போல ஒரு கேரக்டரை சந்தித்திருப்போம். ஒவ்வொருவருக்கும் இது யாரையோ நினைவு படுத்தும் கேரக்டராகவே இருக்கும். எனக்கு இளநிலை வகுப்பில் என்னுடன் படித்த ஒரு பெண்ணை நினைவு படுத்தியது. பிரமாதப் படுத்தியிருக்கிறார் சத்தியன்.

4. ஒரு பாடல் காட்சியில் தன் படங்களைத் தானே பகடி செய்து கொள்ளும் ஷங்கரின் துணிவு. க்ளாப் பலகையில் ஃபாரீன் சாங்க், ராஜா சாங்க், மாடர்ன் சாங்க், குத்துப் பாட்டு என எழுதுவதும், ஷூட்டிங்க் ஸ்பாட்டையும் காட்சிப் படுத்துவதுமாக நல்ல முயற்சி.

5. கல்வி முறையின் மீதான விமர்சனங்கள் சரியான காட்சியமைப்போடு, தெளிவாக பட்டியலிடப் பட்டிருக்கிறது. பிறந்தவுடனேயே வெங்கட்ராமகிருஷ்ணன், பி.ஈ என்று பெயர் சூட்டும் பெற்றோர்கள் ஆகட்டும், மனப்பாடம் செய்வதை மட்டுமே ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் ஆகட்டும், தமிழ் மீடியத்திலிருந்து இங்கிலீஷ் மீடியத்திற்குள் நுழைவதில் உள்ள சிக்கல்கள் என அநேகமாய் எல்லா பிரச்சனைகளையும் தீவிரமாக இல்லையெனினும் தொட்டுக் காட்டவாவது செய்திருக்கிறது இப்படம்.

6. கற்பிப்பு/கற்பழிப்பு, கொள்கை/கொங்கை போன்ற வார்த்தை விளையாட்டுகள் மூலம் சிரிக்க வைக்கும் ஐந்து நிமிடக் காட்சி கலக்கல்.

7.  ஸ்ரீகாந்த் தனது கனவை சொன்னதும், முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டுப் பின் இந்த லேப்டாப்பை கொடுத்துவிட்டு உனக்கு ஒரு காமிரா வாங்கித் தருகிறேன் என்று சொல்லும் அப்பா கேரக்டர் – நெகிழ வைக்கிறது.

8. அதே போல வசந்த் & கோ வாரிசான விஜய் வரும் காட்சிகள் ரொம்ப இயல்பாகவும், நெகிழ வைப்பதாகவும் இருக்கிறது. அவரும் சரி, அவரது தந்தையாக வரும் ராமுவும் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.

குறைகள்:

1. இலியானா.

2. விஜய், சத்யராஜ் என அனைவருமே வேறு விதமாய் நடிப்பதாக நினைத்து செய்யும் சில சேஷ்டைகள் சகிக்கவில்லை. விஜய் எப்போதும் காலால் பாலை உதைப்பது போன்ற பாவனையில் தத்தித் தத்தி நடப்பதும், எச்சில் தெறிக்க சத்யராஜ் பேசுவதும் தாங்கவில்லை.

3. இந்திப் படத்தில் வந்தது என்பதற்காக ஏழ்மையான ஜீவா வீட்டிலும் சப்பாத்தி பரிமாறுவதும், மூன்று ரூபாய்க்கு கோதுமை கிடைப்பதை அதன் காரணமாகச் சொல்வதும். ஏன், அதே மூணு ரூபாய்க்குத்தானே ரேஷனில் அரிசியும் கிடைக்கிறது? சப்பாத்திக்கு பதில் சிம்பிளாக தோசை என்று சொல்லியிருந்தால் என்ன குறைந்து விடும் என்று புரியவில்லை. இப்படியான அபத்தங்கள் படம் நெடுக உண்டு.

இலியானா கல்யாணக் கோலத்தில் டிசைனர் புடவையும், ஃபேஷன் ஜுவல்லரியுமாக வருவது என்ன லாஜிக்கோ புரியவில்லை.

அதே போல் ஏழை கிராமத்து இளைஞனா வசந்த் & கோ விஜய்- சோகத்தில் கிடார் வைத்துக் கொண்டு பாடுவதும் துளியும் நம்பும் படியாக இல்லை. பாடுவதும் முழுக்க வெஸ்டர்ன் ஸ்டைலில். ஈயடிச்சான் காப்பி என்பது இதுதான் போல.

4. என் வரையில் படத்தில் ஒரு பாட்டு கூட தேறவில்லை. என் ப்ரெண்டைப் போல யாரு மச்சான் பாடல் மட்டுமே தேவலாம் ரகம் – அதுவும் கூட ஏர்டெல்லின் ஓவ்வொரு ப்ரண்டும் தேவை மச்சான் பாட்டை நினைவு படுத்துகிறது.

5. ஷங்கரின் படத்தில் வரும் கருப்புப் பெண்கள் எல்லோருமே ஏன் இவ்வளவு பயங்கரமாக இருக்கிறார்கள் என்று புரியவில்லை. பொதுவாக கருப்பாக இருப்பதும், அழகில்லாமல் இருப்பது வேறு. எப்போதும் ஷங்கர் அழகின்மை என்பதை கருப்பு என்பதாகவே காட்டுவதும், அதற்காக கூடுதலான கருப்பு பூசுவதும் உண்மையில் அவரது நோய்க்கூறு மனநிலையையே காட்டுகிறது. ஜீவாவின் அக்கா, இலியானா வீட்டு பணிப்பெண் என அங்கவை சங்கவைகள் இதிலும் தொடர்கிறார்கள். ஷங்கரை சக்ரா கோல்ட் டீ குடிக்க சொல்லுங்க – அப்படியாவது மனசு விசாலமாகுதான்னு பாக்கலாம்.

குணம் நாடி, குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடுதல் என்கிற அடிப்படையில் எனக்குப் இப்படம் பிடித்தே இருக்கிறது..

***********

 

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சினிமா | Tagged , , , | மறுமொழியவும்

உதிரிப்பூக்கள் ஆகஸ்ட் 16, 2011

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் பாடல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் மீண்டும் மனதில் பெரியாழ்வாரின் இந்த வரிகள்தான் வந்து மோதின.

ஒருமகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் கொண்டு போவானோ’

என்ன ஒரு சோகம்… இதைப் படித்த போது ஜெயஸ்ரீயின் மரத்தடி கதை ஒன்றும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் பாசுரத்தில் ஆரம்பித்து மகளைத் திருமணம் செய்து கொடுத்த தந்தையின் மனவலி என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் சரியாக அப்பாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு.

அம்மா இறந்தபோது கலங்காத அப்பா, ராம-லக்ஷ்மணரைப் போல என்று ஊரே மெச்சும்படியான உயிருக்குயிரான அண்ணன் 40 வயதில் காலமான போது கலங்காத அப்பா, புயலில் பயிர் அழிந்தாலும், தண்ணீரில்லாமல் காய்ந்தாலும் என்று எந்ந்த சூழலிலும் கலங்காத அப்பா திருமணம் முடிந்து வேனில் ஏறிய போது “ஆனானப்பட்ட கண்வ மகரிஷி கூட வளத்த பொண்ணு பிரிஞ்சப்ப கலங்கிட்டாராம். நாமெல்லாம் சாதாரண மனுஷங்கதானே ” என்று தழுதழுத்தது நினைவு வந்தது.

ஆனால் போன் பேசி முடிக்கையில் ஒரு விஷயம் உரைத்தது. எப்படிம்மா இருக்கே என்ற விசாரிப்பு கூட இல்லாமல் நேராக கனியைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். பிறகு யோசித்துப் பார்த்ததில் கனி பிறந்தது முதலே அதுதான் நடைமுறை என்பது புரிந்தது.

அன்புதான் எவ்ளவு சுலபமாக மடைமாறி விடுகிறது.  :) )) :( (((

*********
ரிலையன்ஸ் ம்யூச்சுவல் ஃபண்டில் சிப் மூலம் கொஞ்சம் முதலீடு செய்திருந்தோம். தேவை கருதி அதைப் பணமாக்க ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன். இத்தனைக்கும் எந்த சேமிப்புக் கணக்கில் இருந்து மாதாமாதம் பணம் எடுத்துக் கொண்டிருந்தார்களோ அதே அக்கவுண்டில் பணத்தைப் போட்டுவிடுமாறுதான் கேட்டிருந்தேன். ஒரு வாரத்தில் உங்கள் கையெழுத்து அப்ளிகேஷனில் இருப்பதில் இருந்து வேறுபடுகிறது. எனவே புது விண்ணப்பத்தில் உங்கள் பேங்கரின் அட்டஸ்டேஷன் பெற்று எடுத்துக் கொண்டு ஒரு ஒரிஜினல் ஐடி ப்ரூஃபுடன் அருகிலுள்ள எங்கள் நிறுவனத்திற்கு நேரில் வரவும் என்று ஒரு கடிதம். பேங்க் போய் அட்டெஸ்டேஷன் வாங்க ஒரு நாள், இவங்க அலுவலகத்துக்குப் போய் நாந்தான் நான் அப்படின்னு துண்டு போட்டு தாண்ட ஒரு நாள்னு ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு சுத்த யாரால முடியும்? கஸ்டமர் கேர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விளக்கினால் கீறல் விழுந்த ரெக்கார்ட் போல நீங்கள் நேரில் வந்தால்தான் உங்கள் கோரிக்கையை பரிசீலிப்போம் என்றே சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. ஒரு கட்டத்தில் ரிலையன்ஸில் முதலீடு செய்வது என்பது நான் செய்த படு முட்டாள்தனமான முடிவு என்று புரிகிறது. இனி அந்தத் தவறை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்றெல்லாம் நான் கத்த, பிறகு பெரிய மனது செய்து ஆன்லைனில் ஐடி ஜெனரேட் செய்ய சில வழிமுறைகளைச் சொன்னார். இன்றிலிருந்து ஆறாவது நாள் உங்களால் ஆன்லைனில் லாக் இன் செய்ய முடியும். அதிலேயே ரிடெம்ஷனும் செய்து கொள்ளுங்கள் என்றார். சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டால், நேற்று அதே நிறுவனத்திடமிருந்து ஒரு போன். வெரிஃபிகேஷன் கால் என்றார்கள். இன்னும் ஆறு நாள் ஆகும் என்றும் சொன்னார். தலை சுற்றுகிறது. அமெரிக்க விசா ரேஞ்சுக்கு இவர்களின் வெரிஃபிகேஷன் அழும்பு தாங்க முடியாமல் போகிறது. எரிச்சலாக இருக்கிறது. இனி வங்கி சேமிப்புக் கணக்குகள், ஆர்டி என்று சுலபமான சிக்கலில்லாத முதலீடுகளையே தொடர்வது என்று முடிவு செய்திருக்கிறேன். :(

***********

மரண தண்டனை என்பது முழுக்க முழுக்க ஒரு காட்டுமிராண்டித் தனமான சிந்தனையே. ஒரு நாகரீக சமூகத்தில் சட்டம் என்பது தண்டனையை செய்த தவறை உணர வைக்கும் ஒரு விஷயமாகக் கொண்டிருக்க வேண்டுமே அன்றி கண்ணுக்கு கண் என்பது போல் கொலை செய்வதை நியாயப்படுத்தக் கூடியதாக இருக்க கூடாது. ஒரு வேளை திருந்தவே திருந்தாத குற்றவாளி என்றால் கூட சாகும் வரை சிறையிலேயே இருக்கும் வண்ணம் தண்டனை அளிக்கலாமே ஒழிய எந்த உயிரையும் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இருக்க கூடாது. இப்போது ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கு தண்டனை அனேகமாக உறுதி செய்யப்பட்டிருப்பது மிகக் கொடுமையானது.

ஆனால் இதில் இன உணர்வைத் தூண்டுகிறேன் பேர்வழி என்று சிலர் அர்த்தமற்ற விதண்டாவாதங்களை முன் வைப்பதன் மூலம் பாதிக்கப்படுபவர்களின் தரப்பை நீர்த்துப் போக செய்கிறார்கள். மற்றவர்களிடம் போராடி அல்ல அவர்களுக்கும் இந்த தண்டனை முறை தவறு என்பதை உணர்த்தியே நாம் அதை நிறுத்த வேண்டும். சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளனுக்கு மட்டுமல்ல நாளை அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் கூட இந்தக் கொடூரம் நடக்கக் கூடாது. எனவே தமிழர் Vs மற்றவர்கள் என்று இந்த பிரச்சனையைக் குறுக்காமல் மனிதாபிமானமுள்ள அனைவரையும் அணி திரட்டி, நீதி பெற போராடுவதே சரியான அணுகு முறையாக இருக்கும்.

இந்தக் கட்டுரை தெளிவாக வாதங்களை முன்வைக்கிறது. http://www.eegarai.net/t67225-topic

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், reliance mutual funds | Tagged , , | 1 மறுமொழி

அவன் – இவன் – விமர்சனம்

அவன் இவன் விமர்சனங்கள் பல படித்தேன் .ஒரு முக்கியமான விஷயத்தை யாரும் அதிகம் பேசவில்லை என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. படத்தில் எல்லோரும் புகழும் ஒரு விஷயம் விஷாலின் அர்பணிப்புணர்வுடன் கூடிய நடிப்பு –பெண் தன்மையோடு பல இடங்களில் பேசுகிறார். இதன் காரணமாக படத்தில் சொல்லப்படுவது என்ன? இயல்பில் அவர் பெண் தன்மை கொண்டவர் என்றா? இல்லை. அப்படியாயின் அவருக்கு ஒரு ஹீரோயினும், அவருடனான காதலும் வரவாய்ப்பில்லையே. முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவர் ஒரு ஸ்த்ரீபார்ட் நடிகர் என்பது தான்.

ஸ்த்ரீபார்ட் என்பது என்ன? அந்த காலத்தில் நாடகத்தில் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க பெண்கள் தயங்குவார்கள். அதிகமும் நடிகைகள் இல்லாத காலத்தில் குரல் உடையாத சிறுவர்களைப் பெரும்பாலும் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவைப்பார்கள். இவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வேறு எந்த வகை கதாபாத்திரமும் ஏற்கமாட்டார்கள் அல்லது கொடுக்கப்பட மாட்டாது. முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரங்கள் மட்டுமே ஏற்பர்.

சரி,அவன் இவன் படத்தில் மொத்தம் எத்தனை நாடகக் காட்சிகள் வருகின்றன? ஒரு நாடகக் கலைஞனை, அதுவும் ஸ்த்ரீபார்ட் வேடத்துக்கான தன் இயல்பையே மாற்றிக் கொண்டு வாழும் கலைஞனை மையமாகக் கொண்ட கதையில் நாடகக் காட்சிகள் மொத்தமே இரண்டு தான். அதுவும் ஒரு பாட்டில் இரண்டு துண்டு காட்சிகள். அதற்கு முன் ஒத்திகைக்காட்சிகள் இரண்டு. மேடையில் சூர்யா முன்னிலையில் நவரசத்தையும் கசக்கிப்பிழிந்து சாறு எடுப்பதையும் சேர்த்துக் கொண்டாலும் மொத்தம் ஐந்து துணுக்குகள் தான்.

சரி, பரவாயில்லை. படத்தின் மையம் அந்த ஜமீந்தாருக்கும் நாயகர்களுக்குமான பாசப்பிணைப்பைப் பற்றியது என்பதால் காட்சிகளின் எண்ணிக்கையைக் கூடவிட்டு விடலாம்.

அந்தக் காட்சிகளில் விஷால் ஏற்கும் பாத்திரங்கள் என்ன? நாடகக் காட்சிகள் இரண்டிலுமே ஆண்வேடம். ஆம் நண்பர்களே – ஒன்றில்சிவன், இன்னொன்றில் முருகன். ஆண் வேடங்களில் நடிக்க எதற்கு விஷாலின் பாத்திரம் இப்படி படைக்கப்படவேண்டும் என்ற கேள்வி ஒருவருக்குமேவா தோன்றவில்லை? இவ்வளவு பெரியலாஜிக் ஓட்டையுடன் காமெடிப்படம் எடுக்க சுந்தர்.சி போதுமே? பாலா எதற்கு என்று எனக்குப் புரியவில்லை.

 

இந்த லாஜிக் ஓட்டைக்கு மேல் இன்னும் நிறைய குளறுபடிகள். அதிலும் சேது டெம்ப்ளேட்டில் வரும் ஆர்யாவின் காதல் காட்சிகள் கொடுமை. பாலாவின் கதாநாயகிகள் எல்லோருக்கும் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் இருக்கும் போல… பெரும்பாலும் தமிழ் சினிமாவின் எல்லாக் கதாநாயகிகளுக்குமான சாபம் இது. அதிலும் பாலாவின் நாயகிகள் தான் அதில் உச்சம். தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறவன், ஏமாற்றி மிரட்டிப் பணம் பண்ணும் தெருப் பொறுக்கி கம் ப்ராட் வகையறாக்களை எல்லாம் காதலித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

பாலாவின் வழக்கமான குரூரங்கள் இந்த படத்தில் குறைவு தான். அதுவே பெரிய நிம்மதியாக இருந்தது. குற்றப்பரம்பரையினரை படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக எடுத்துக் கொண்டிருக்கும் பாலா அவர்களது பின்னணியை, அவர்கள் வாழ்வின் வலியை எங்காவது மறந்தும் பேசியிருக்கிறாரா என்று தேடினால் இல்லை என்பது தான் பதில்.  போலீஸ்காரர்கள் உள்ளே நுழைந்தால் எச்சரிக்கை செய்ய குடியிருப்பின் வாசலில் ஒரு மணி இருக்கிறதே, அதைத் தவிர்த்து அந்த மக்களைப் பற்றி என்ன காண்பிக்கப்படுகிறது படத்தில்?

அதுசரி, எடுத்துக் கொள்ளும் பின்னணிக்கு கதை நியாயம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் தமிழில் படம் பார்க்க முடியுமா என்ன? மணிரத்னம் மாதிரியானவங்களையே பார்த்துட்டோம் – பாலாவிடமா பெரிய ஏமாற்றம் வந்து விடப் போகிறது? ஜமீந்தார் திருட்டை குலத்தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் இருந்து இரண்டு பேரை தன் அபிமான புத்திரர்களாக வளர்க்கிறார். அவர்கள் குடும்பத்தில் வந்து உணவருந்துகிறார். தன் பரம்பரைக் கோவிலில் அந்தக் குடும்பத்தை பொங்கலிட அனுமதிக்கிறார். அந்தப் பையன்களில் ஒருவரின் காதலுக்காக தன்னை ஏமாற்றிய பங்காளிக்கே தன் சொத்துக்களை எல்லாம் விட்டுக் கொடுக்கிறார்… சமர சசன் மார்க்க சொர்க்க வாழ்கைதான் போங்கள். இதில் எல்லாம் லாஜிக் தேடினால் நாந்தான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.

சரி, படத்தில் உருப்படியான ஒரே ஒரு விஷயத்தை சொல்லி முடிக்கிறேன் – அந்த ஜமீந்தாராக வரும் பெரியவர் ஜி.எம்.குமாரின்நடிப்பு. அற்புதமாக நடித்திருக்கிறார். என்னைக் கேட்டால் படத்தின் உண்மையான மையக் கதாபாத்திரம் இவர் தான். கலக்கி எடுத்திருக்கிறார்.

மற்றபடி படம் ஒரு பாலாவின் டெம்ப்ளேட் குப்பை. இன்னும் ரெண்டு படம் இதே ரீதியில் எடுத்தால் போதும் பாலா ரிட்டையர் ஆக. சீக்கிரமா வேறு எதாவது புதுசா பண்ணுங்க சார். தாங்கமுடியலை.

Posted in சினிமா, விமர்சனம் | மறுமொழியவும்

உதிரிப்பூக்கள் 26, ஜூன் 2011

கனிவமுதனை மாலையில் ஒரு சின்ன நடை அழைத்துப் போனேன். தெருவில் இரண்டொரு வீடுகள் தள்ளி ஒரு ஃப்ளாட் உண்டு. அதன் கீழ் தளத்தில் கனியின் வயதொத்த மூன்று குழந்தைகளும் உண்டு. அங்கே போனதும் தோழர்களைப் பார்த்த கனி சத்யாக்ரகம் செய்யவே அங்கே உள்ளே நுழைது குழந்தைகளை விளையாட விட்டு விட்டு பெரியவர்கள் நாங்கள் ஓரமாய் நின்று பேசிக் கொண்டும், இவர்களின் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டும் நின்றோம். ஃப்ளாட்டின் மேல் தளத்திலிருந்து எட்டிப் பார்த்த ஒரு பெண் கனியை கூப்பிட்டாள். இரண்டு மூன்று முறை கூப்பிட்ட போதும் தலைவர் விளையாட்டு சுவாரசியத்தில் கவனிக்கவில்லை. கடுப்பான அவள் விறுவிறுவென கீழே இறங்கி வந்து இவனை பிடித்து தன் பக்கம் இழுத்து ஏண்டா கூப்பிட்டா கவனிக்க மாட்டியா என்றாள். அப்போதும் மற்ற குழந்தைகளோடு விளையாடும் மும்மரத்தில் கனி அவள் கையிலிருந்து திமிற அவள் சொன்னாள் “ஏண்டா உங்க பாட்டியோட கோவிலுக்கு வந்தப்ப என் பின்னாடியே சுத்தின, எவளோ பேசின என்கிட்ட, என்னை அடிப்பிரதட்சணம் பண்ண விடாம பாடா படுத்தி என் துப்பட்டாவ எல்லா பிடிச்சு இழுத்த இல்ல? இப்ப உன் சைஸ்ல ஆளுங்க கிடைச்சதும், யாருன்னே தெரியாத மாதிரி போற?” என்று பொங்கி தீர்த்து விட்டாள். அதற்குள் மேலிருந்து அவளை யாரோ அழைக்கவும், உன்ன அப்புறமா கவனிச்சுக்கறேன் என்ற ஒரு செல்ல மிரட்டலுடன் மேலே போனாள்.

இது மாதிரி வசனங்களை ஒரு இருபது வருடம் கழித்துதான் கனி கேட்க வைப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்ப்வவேவா…. விளங்கிரும். :) )))

******

சமச்சீர் கல்வி பற்றிய குழப்படிகள் உண்மையிலேயே மனதை கொதிப்படைய வைக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகளின் கல்வி  குறித்து ஒரு கொள்கை முடிவு எடுப்பதில் கூடவா இவர்களின் துக்ளக்தனத்தை காட்டித் தொலைக்க வேண்டும். கடவுளே… இந்த இரட்டைக் கழக ஆட்சி முறையிலிருந்து எங்களுக்கு விடிவே இல்லயா? (ஏன் கேப்டன் இல்லியான்னு கேட்டு யாரும் வந்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் ப்ளீஸ் :) )

*********

ஜான் ஹோல்ட் எழுதி அப்பணசாமி தமிழில் மொழி பெயர்த்த எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றேன்.  முடித்ததும் என் பார்வையைப் பகிர்கிறேன். குழந்தைகளின் கல்வி குறித்த குறிப்பாய் மாண்டிசோரி முறையைப் பற்றி மேலும் படிக்க எண்ணம். வேலையிலிருந்து ஒரு ப்ரேக் எடுக்கும் எண்ணமும், அப்படி கிடைக்கும் நேரத்தை மாண்டிசோரி முறையை கற்றுக் கொள்ளவும் ஆசை. பார்ப்போம் எவ்வளவு தூரம் முடிகிறது என்று.

******

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கல்வி, குழந்தை வளர்ப்பு | Tagged , | 3 மறுமொழிகள்

இஸ்லாமிய விளிம்புநிலை வாழ்வின் பிரதிமைகள்

படித்ததில் பிடித்தது..

மீன்குகைவாசிகள்

ஆசிரியர்: கீரனூர் ஜாகிர்ராஜா

ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை – 24

பக்:192 | ரூ.140 போன்: 044\2372 2939

எங்கள் ஊரில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்தான். ஊரின் நடுவில் கம்பீரமாக

வெண்ணிறச் சுவர்களுடன் எழுந்து நிற்கும் பள்ளிவாசலை என்னவென்று கேட்ட போது என்

அப்பா சொன்னார் ‘‘அது முஸ்லீம்களோட கோவில். நம்ம மாதிரி சிலையோ படமோ வச்சு கும்பிடாம அவங்க நபியோட ஊரான மெக்கா இருக்குற மேற்கு திசையை நோக்கித் தொழுவாங்க. அவங்க ஸ்லோகமெல்லாம் அரபு மொழியில் இருக்கும். தொழுகைக்கான அழைப்பைத்தான் ஐந்து வேளையும் மைக்குல சொல்றாங்க. இந்த கோவிலுக்கு வரமுடியாத

பெண்களெல்லாம் வீட்டுலேர்ந்தே அதகேட்டு தொழுதுப்பாங்க’’ இவ்வளவுதான் இஸ்லாமியர்களின் ஆன்மீக உலகம்பற்றி எனக்கு சிறு வயதில் இருந்த அறிமுகம்.

சற்றே வளர்ந்த பின் நாகூர் சந்தனக்கூடு ஊர்வலம் பற்றி செய்தித்தாளில் படித்தபோது குழப்பம்

கொண்டேன். மறுபடி அப்பாவிடம் தான் போய் நின்றேன். ‘‘முக்கியமான மகான் நாகூர் ஆண்டவர்னு ஒருத்தர். அவர் சமாதிய ஒட்டி கட்டின தர்கா அது. இந்தத் தேர்ல வச்சு எடுத்துட்டுப் போற சந்தனத்தை அவரோட சமாதில பூசுவாங்க’’ என்றார் அப்பா.

அதன் பின்னர் பள்ளியில் எனக்கு வாய்த்த பெரிய நட்பு வட்டத்தில் நிறைய இஸ்லாமியப் பெண்களும் உண்டு. என்றாலும் வாப்பா, உம்மா போன்ற சொல்லாடல்களுக்கு மேல் அவர்களது வாழ்க்கைமுறை குறித்து ஒன்றும் பெரிதாக அறிந்து கொள்ள முடியவில்லை.

மற்ற சமூகங்களைக் குறித்து இலக்கியவெளியில் இருக்கும் பிரதிகளோடு ஒப்பிடுகையில் இஸ்லாமிய சமூகம் குறித்த பதிவுகள் சொற்பமே. ஜாகிர்ராஜா போன்ற படைப்பாளிகளே மூடுண்ட சமூகமாய் காட்சிதரும் இஸ்லாமிய சமூகத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும். குறிப்பாக இஸ்லாம் சமூகத்திற்கு எதிரான கருத்துக்கள் சினிமா உள்ளிட்ட வெகுஜன

ஊடகங்களில் முள்ளாகத் தைக்கும் வேளையில், சுற்றியுள்ள மனிதர்கள் மனதில் விஷவித்துக்கள் திட்டமிட்டு விதைக்கப்பட்டு வரும் தருணத்தில் அச்சமூகம் தன்னைச் சுற்றியிருக்கும் திரைகளை

விலக்கி எல்லோருடனும் கைகோர்த்து நெருங்கி நிற்பதே சரியான வழிமுறையாக இருக்கும். அதற்கு மிக முக்கியமான பங்களிப்பு இலக்கிய உலகிலிருந்தே கிடைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஹெச்.ஜி.ரசூல், கீரனூர் ஜாகிர்ராஜா போன்று ஃபத்வாக்களுக்கு அஞ்சாது உண்மையை உரத்துக்கூற முனையும் எழுத்தாளர்களிடமிருந்தே கிடைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் பலப்படுத்துகிறது இந்த மீன்குகை வாசிகள் நாவல்.

முஸ்லிம்கள் என்றால் அன்னியர்கள் என்னும் கற்பிதம் திட்டமிட்டு நம்மவர்களின் மேல்

விதிக்கப்பட்டுள்ளது. அச்சமூகத்தின் உள்ளிருக்கும் மக்களுக்கே அப்படி ஒரு வம்சாவழிப் பெருமிதமுமிருக்கிறது. உண்மையில் தமிழ் முஸ்லிம்கள் எல்லோரும் இங்கே இருந்த தொன்மக்குடிகள்தான். மாலிக்காபூரின் படையெடுப்பை ஒட்டிய இஸ்லாமிய அரசின் தாக்கத்

தாலோ அரேபிய வணிகர்களின் சகவாசத்தாலோ இவர்கள் மதம் மாறியிருக்கலாம். பல முஸ்லீம்

குடும்பங்களை நெருங்கிப்பார்த்தால் தெரியும் -அவர்களில் பலருக்குத் தாய்மொழியே தமிழ்தான்

என்பது. தமிழ்நிலத்தில் வேர்கொண்ட மக்களே அவர்களும் என்பதற்கான நிறைய தடயங்கள் இந்த நாவலில் கிடைக்கின்றன. மிக முக்கியமாக இந்துக்களின் சிறு தெய்வ வழிபாட்டோடு ஒப்பிட்டு நோக்கத் தக்கதான அவர்களின் தர்கா கலாச்சாரம். நம்மில் ஒருவராக வாழ்ந்து மறைந்த நம் முன்னோரையே நம் மக்களில் பலரும் குலதெய்வமாக வழிபட்டு வருவது வழக்கம். மகான்களுக்கு மட்டுமல்ல, வாழ வேண்டிய வயதில் வயிற்றுப் பிள்ளையுடன் அகாலமாக

மரணித்த பெண்ணுக்கும் கூட மீன்குகை வாசிகளில் ஒரு தர்கா எழுகிறது. அப்பெண்ணின் மீது அற்புதங்கள் புனையப்படுகின்றன. ஏழ்மையில் உழலும் மக்களுக்கு எப்போதுமே அற்புதங்களின் தேவை இருக்கிறது. கை சுழட்டலில் கணையாழி வரவழைக்கும் அற்புதங்கள்

எல்லாம்வேண்டாம். நள்ளிரவில் ஒலிக்கும் நெஞ்சையுருக்கும் ஈருசுருக்காரியின் அந்த தாலாட்டுப்

பாடலே அவர்களுக்குப் போதும்.

தனது முதல் நாவலான மீன்காரத் தெருவின் நீட்சியாக இந்த ஐந்தாவது நாவலை எழுதியிருக்கிறார் ஜாகிர்ராஜா. ஒரு தனி நாவலாக எந்த சிக்கலுமின்றி வாசிக்க முடியும் என்ற உறுதியை அவரே முன்னுரையில் தரவும் செய்கிறார். நானும் முதல் நாவலைப் படிக்காமலேயே இதை எந்த சிக்கலுமின்றி வாசிக்க முடிந்தது.

ரமீஜா எனும் பெண் தரகர், கூனன் லியாக் போன்ற கதாபாத்திரங்கள் அவரது முதல் நாவலின்

தொடர்ச்சிகளே. அந்த பாத்திரங்களையும், அவர்களின் பிரச்சனைகளையும் முதல் சில அத்தியாயங்களுக் குள்ளாகவே நிர்ணயித்துவிடும் ஜாகிர்ராஜா புதிய இந்நாவலின் மையச்சரடாக எடுத்துக் கொண்டிருப்பது மதம் மாறினாலும் இஸ்லாத்தில் அங்கீகாரமற்று இருக்கும் தாழ்த்தப்பட்டோரையும், தர்காக்களில் அடக்கமாகி இருக்கும் மகான்களை தரிசிப்பதை

இழித்துப்பேசி கடைசியில் தர்காக்களையே இடிக்க முயற்சிக்கும் அடிப்படை மனோபாவத்தின் மீதான எதிர்ப்பையும்தான். தர்கா கலாச்சாரத்தைப் புறக்கணிக்கும் தவ்ஹீதுகளுக்குப் பெரும் எதிர்

வினையாகவே இந்த நாவல் இயங்குவதாக எனக்குப்படுகிறது.

பங்களாத் தெரு பணக்காரர்கள் வாழும் தெரு. அங்கே பெரும்பாலானவர்களுக்கு மலையாளத்துப்பக்கம் சம்பாத்தியத்துக்கான தொழிலும் சிலருக்கு உபரியாக இன்னொரு குடும்பமும் இருக்கும். மீன்காரத் தெரு ஊருக்கு நடுவிலிருக்கும் ஆலங்குளத்தில் மீன் பிடித்து விற்பதை ஜீவனோபாயமாகக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கொண்ட தெரு. இரு வேறு துருவம் போன்ற இடங்கள். ஆனால் இருதரப்பு மனிதர்களும் ஒருவரோடு ஒருவர் ஊடாடாமல் வாழவும் முடியாது. ஒரே மதம், ஒரே கடவுள் என்றாலும் இருவரும் சமமா என்றால் எங்கும் போல இங்கும் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.

மீன்பிடி குடும்பங்களுக்கும் கீழான நலிவுற்ற மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாவிதர்கள்,குறவர்கள் என அவர்களோடும் புழங்கித்தான் தீர வேண்டியிருக்கிறது இந்த மீங்காரர்களுக்கு. நாவிதராக இருந்து பின் இஸ்லாம் ஆனவனான சண்முகத்துக்குத் துணையாக மீன்காரத் தெருவின் நைனா நாவலின் இறுதியில் பள்ளிவாசலுக்குள் நுழைய முடிவெடுக்கின்றான். அதற்கும் முன்னரே அவர்களுக்கும் ஆன்மீகத் தேடல் உண்டு என்பதைச் சொல்லும் விதமாக கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த ஈருசுருக்காரி தர்கா தகர்க்கப் படும் செய்தி வருகிறது. நிதர்சனத்தை அவர்கள் எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறார்கள்? வாசகர்கள் எப்படிவேண்டுமானாலும் யூகித்துக் கொள்ளும் இடைவெளியுடன் கதை முடிகிறது.

மீன்காரத்தெரு வீட்டின் இருட்டு மூலையில் தஞ்சம் புகுந்த ஆமீனா வறுமையின் காரணமாக பங்களாத் தெருவிலிருக்கும் வேறு ஒரு வீட்டுக்கு வேலைக்குப் போகிறாள். அங்கே அவள் எதிர்கொள்ளும் முதலாளியின் மைந்தன் புதுவிதமானவன். கால்கள் முடங்கினாலும் மனதால் சஞ்சரிக்கப் பழகியவன்.

இஸ்லாம் ஹராம் என்று வரையறுக்கும் கலைவடிவங்களை நேசிக்கும் மனம் கொண்டவன்.

குரான் ஓதுகையில் அதன் தமிழ் விளக்க உரையையும் படித்து எல்லாக் காட்சிகளுக்கும் உருவம் தந்து அதை சித்திரக் குரான் என்பதாகப் புனைந்து அலமாரியில் சேகரித்து வைத்திருப்பவன். ஆமீனாவின் மனதில் ஏற்பட்ட காயத்தை ஆற்றும் மருந்தாகவும், அவளுக்கும் கலையுணர்வோடு உலகைப் பார்க்க கற்றுத் தரும் ஆசானாகவும் அமையும் நசீர் மீது ஆமினாவுக்கு மெல்ல மலரும் நேசமும் நாவலில் ஒரு தனிச் சரடாக செல்கிறது.

கலைஉள்ளம் கொண்ட ஒருவன் இறைத் தூதர்களைக் காட்சிப் படுத்துவது எனும் பேராவல்

ஜாகிர்ராஜாவின் படைப்புகளில் எதிர்ப்படுவது எனக்குத் தெரிந்து இது இரண்டாவது முறை.

அவருடைய கருத்த லெப்பை நாவலின் மையப்புள்ளியே அதுதான். ஜாகிரின் அகமனது விழையும் ஒரு பெருங்கனவு என்றே இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரம் இதற்கு புற உலகின் எதிர்ப்புகள் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கக் கூடும் என்ற யதார்த்தமும் திகைக்க வைக்கிறது.

 

இஸ்லாமிய ஆண்கள் எளிதாக தலாக் என்ற சொல்லை மூன்று முறை சொல்லி பெண்களை

விவாகரத்து செய்துவிட முடியும். தொலைபேசியில் கூட அதை எளிதாக நிறைவேற்றலாம். அதே நேரத்தில் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு இஸ்லாம் காட்டும் நிவர்த்தி ஒன்று இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? குல்உ எனப்படும் அம்முறையால் பெண்களும் மணவாழ்விலிருந்து விலக்குப் பெறலாம்.

கணவனிடமிருந்து காதலுக்குப் பதில் வன்முறைகளையே தொடர்ந்து பெறும் ஒரு அபலைப் பெண் துணிந்து குல்உ முறையால் கணவனிடமிருந்து வெளியேறி மறுமணம் செய்து கொள்வதைப் பற்றியும் இந்நாவல் விரித்துப் பேசுகிறது.

இந்த நாவலையும் தொடர்ந்தெழுதும் எண்ணமிருப்பதாக ஜாகிர்ராஜா முன்னுரையில் குறிப்பிடுகிறார். எனவே நாவிதனாய் இருந்து இஸ்லாத்துக்கு மாறிய சண்முகத்துக்கு தன்  சினேகிதன் நைனா சொல்வது போல தண்ணியூத்தி வெளுத்த துணி மாத்தி ஜம்முண்டு தொப்பி வச்சுகுட்டு அத்தர் பூசிகிட்டு சுருமா வச்சுகிட்டு தொழுகைக்கிப் போகும் கனவு எவ்வளவு தூரம் பலித்தது என்பதையும் ஆமினா என்னும் பெண்ணின் மறுமலர்ச்சியையும் இதே போன்ற ஒரு அருமையான நாவல் வடிவில் விரைவில் படிக்க முடியும் என்று நம்புகிறேன்.

(புத்தகம் பேசுகிறது ஏப்ரல் 2011 இதழில் வெளியானது.)

 

Posted in இலக்கியம், படித்ததில் பிடித்தது | 3 மறுமொழிகள்

உதிரிப் பூக்கள் 04-ஜூன் – 11

என்னதான் இந்த விஷயத்தைப் பற்றிப்  பேச வேண்டாம் என்று நினைத்தாலும் பாலா, மாசி போன்றவர்களே இதை நம்புகிறார்கள் போலத் தெரிவதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்(யாருக்கும் அது ரொம்ப அவசியம் இல்லைன்னாலும் கூட :) )

இவர் கருத்துச் சொல்ல மறுப்பதன் காரணமாக இங்கே காட்டுவது கனிமொழி பெண் என்பதால் ஏற்படும் இரக்கத்தை. ஆனால் உண்மையிலேயே அதுதான் காரணமா?  ஊழல் என்பதைப் பற்றிய அவரது கருத்துக்களை இந்தக் கட்டுரையில் காணலாம். அதாவது எப்படி ஜாதியோடு புழங்குதல் அவசியம் என்று அவர் நினைக்கிறாரோ அது போலவே ஊழலோடு புழங்குதலும் அவசியம் என்றே நினைக்கிறார். ஒருவரது உடல் ஊனத்தைச் சொல்லி திட்டினால் அது அநாகரீகம் இல்லையா என்று கேட்டால் மலையாளத்தில் அப்படித்தான் பேசுவோம், அந்த பக்குவம் உங்களுக்கு இல்லை என்பார். ஜாதிப் பெயர் சொல்லி ஒருவரை அழைப்பதும், அந்த ஜாதிக்கு ஒரு புத்தி உண்டு என்று சொல்வதும் ஜாதீய வேறுபாடுகளை தொடர வைக்குமே, அது தவறில்லையா என்றால் மலையாள தேச உதாரணமே மீண்டும் வரும். அதே போல ஊழல் தவறில்லையா என்று கேட்டால், மன்னராட்சியில் இருந்தது, அதனால் அது ஒரு தவிர்க்க முடியாத விஷயம். அரசு என்றால் வன்முறையும், ஊழலும் சேர்ந்ததுதான் என்கிறார்.  ஏற்கனவே ஊழல் பற்றி பெரிய தார்மீகக் கோபம் இல்லாத ஒருவர் இப்போது செத்த பாம்பை அடிப்பது போல் கனிமொழியை திட்டுவதற்கு பதில் முன்னர் தனக்கு துணை நிற்காத பத்திரிக்கைகளுக்கு ஒரு குட்டு வைக்கவும், தனது இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்யும் பண்பை காட்டிக் கொள்ளவுமே இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

*********

பையனுக்கு சாப்பாடு கொடுப்பது தினசரி ஒரு பெரிய போராட்டம். அதில் தினமும் இருவரும் புதுப்புது உத்திகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாள் பயன்படுத்தும் உத்தியை மறுநாளைக்கு நம்பி செயல்படுத்த முடியாது. அதற்குள் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என கனி கண்டுபிடித்திருப்பான். அது ஒரு தொடர் கதை. அதை விடுங்க. நான் சொல்ல வந்த விஷயம் வேறு ஒன்று. அவனுக்கு சாப்பாடு கொடுக்க நிச்சயமாக ஏதேனும் அவனுக்குப் பிடித்த பாடல் தொலைக்காட்சியில் ஓடியே ஆக வேண்டும் என்பது அடிப்படை விதி. எனவே ஒவ்வொரு வேளை உணவுக்கும் குறைந்தது ஒரு மணி நேரமாவது தொலைக்காட்சி இசையருவில் அல்லது சன் ம்யூசிக் சேனல் மாறி மாறி ஒடியபடி இருப்பது எங்கள் வீட்டு வழக்கம். வீட்டில் பெரியவர்கள் யாருமே ஏன் தங்க விரும்புவதில்லை என்று இப்போது புரிந்திருக்குமே? :)

ஆக அப்படி இந்த சேனல்களை மாற்றி மாற்றிப் பார்க்கையில் நான் கவனித்த சில விஷயங்களில் முக்கியமான ஒன்று – வாரத்தில் ஒரே ஒரு நாள், ஒரு மணி நேரம் மட்டுமே பெப்சி உங்கள் சாய்ஸ் ஒளிபரப்பான காலத்தில் இருந்த அதே க்ரேஸ் நேயர்களுக்கு இன்னமும் குறையவே இல்லை. வருடம் 365 நாளும், நாளின் பெரும்பகுதி நேரத்துக்கும் போன் செய்து பேச முடியும் என்ற அளவுக்கு இந்த நிகழ்சிகள் மலினப்பட்டுப் போன பின்னரும், லைன் கிடைத்தவுடன் அந்தப் பக்கம் இருக்கும்  நேயரின் பரவசத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. நான் முன்பெல்லாம் பெப்சி உங்கள் சாய்ஸின் வெற்றிக்கு உமாவின் குரலும், அவரது தோற்றமும், அவரின் மழலை நிறைந்த சமத்காரமான பேச்சுமே முக்கிய காரணம் என்று நினைத்து வந்தேன். இப்போதுதான் புரிகிறது, அந்த நிகழ்ச்சியின் வெற்றி ஒரு சாதாரணன் தன் குரலை தொலைக்காட்சியில் கேட்க முடிவதின் பரவசத்தினாலேயே நிகழ்கிறது என.

உமாவின் நிகழ்ச்சி பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப் பட்டதனால் வெளிவராத ஒரு சிக்கல் இப்போது நேரடி ஒளிபரப்பில் மக்கள் பேசுகையில் வெளிப்படுகிறது. டிவியில் வரும் தன் குரலைத் தானே கேட்கும் ஆர்வத்தில் பேசுபவர்கள் தன் வீட்டு டிவியின் ஒலி அளவை உச்சத்தில் வைக்க, நேரடி ஒளிபரப்பு ஆகையால் எதிரொலி கூடி பார்வையாளருக்கும், தொகுப்பாளருக்கும் அவர்கள் பேசுவது சுத்தமாக காதில் விழாமல் போகிறது.  இது ஏதோ ஒரு முறை இருமுறை இல்லை ஒரு மணி நேரம் தொடரும் நிகழ்ச்சியில் 6 பேர் வரை பேசுகிறார்கள் என்றால் குறைந்தது மூன்று பேராவது இப்படிச் செய்கிறார்கள். ஆச்சரியமான விஷயம் அந்த 6ல் 5 பேர் தினசரி அதே நிகழ்ச்சிக்கு அழைத்து அதே தொகுப்பாளர்களோடு பேசுகிற ஆட்கள்தான். அழைப்பாளரின் குரலைக் கேட்டதுமே சொல்லுங்க சந்துரு என்று அன்னியோன்னியமாகப் பேசுகிறார்கள் இந்த தொகுப்பாளர்கள். ஆனாலும் எப்படித்தான் சளைக்காமல் அதே தப்பை திரும்ப செய்யவும்,  இவர்களும் சளைக்காமல் “உங்க டிவி வால்யூமை கொஞ்சம் ரெட்யூஸ் பண்ணிட்டு பேசுங்க ப்ளீஸ்”என்று செந்தமிழில் கொஞ்சவும் முடிகிறதோ என்று ஆச்சரியமாக இருக்கிறது.

*********

டோமெக்ஸ் டாய்லட் க்ளீனருக்கு ஒரு விளம்பரம் சமீப நாட்களில் வருகிறது. வெள்ளை கோட் அணிந்த ஒரு பெண்மணி தன் மகனோடு லிஃப்டில் வருகிறார். உடன் வரும் பெண்மணி ஒரு கூடை நிறைய வீட்டுக்கான சாமான்கள் வைத்திருக்கிறார். அத்தோடு ஏதோ ஒரு ஆசிட் – டாய்லட் க்ளீன் செய்ய. உடனே இந்த வெள்ளைக் கோட் அணிந்த சுகாதார தேவதை அவரை டாமெக்ஸை விட உங்க க்ளீனர் சக்தி வாய்ந்தது என்றால் உங்களுக்கு ஒரு கோடி பரிசு கிடைக்கும் என்று பீலா விட்டுவிட்டு அந்த பெண்மணியின் வீட்டுக்குப் போய் டோமெக்ஸால் அவர் வீட்டு டாய்லட்டை சுத்தம் செய்து காண்பிக்கிறார். உச்சகட்ட கொடுமை இதற்குப் பிறகுதான்…..

 டாய்லெட்டில் கிருமிகள் எதுவுமில்லை என்று நிரூபிக்க, தன் கையை டாய்லெட் பீங்கானில் விட்டு தடவி அந்தக் கையை தன் மகனின் கையில் அடித்துக் காண்பிக்கிறார். இதைப் பார்க்கும் குழந்தைகள் இதே போல் செய்யலாம் போலிருக்கு என்று எண்ண மாட்டார்களா? இப்படியெல்லாம் எப்படி யோசிக்க முடிகிறது? எரிச்சலும், அருவெறுப்பும் ஒன்றாக உண்டாகிறது இது போன்ற விளம்பரங்களைப் பார்க்கையில்.

Posted in அனுபவம், அரசியல், உதிரிப்பூக்கள், எண்ணம் | Tagged , , , , | 1 மறுமொழி

முன்னுதாரணம்

மகாபாரதத்தில் ஒரு இடம். குக்ஷேத்திர யுத்தத்தில் கௌரவர்களின் சேனாதிபதியாக முதலில் பதவியேற்பவர் பீஷ்மர். அவரது தலைமையில் யுத்தம் நடந்தபோதுதான் அபிமன்யு கொல்லப்பட்டது போன்ற அதர்மங்கள் நடந்தன. அதன்பின் துரோணரும், அவருக்குப் பின் கிருபரும் சொற்பநாட்களுக்கு கௌரவ சேனாதிபதியானார்கள். அவர்களின் தலைமையின் கீழும் சில விதிமீறல்கள் நடக்கவே செய்தன. பாண்டவர்தரப்பில் 18 நாளுமேஅதர்மயுத்தம்தான்.

அதே சமயம் கிருபருக்குப் பின் கௌரவ சேனாதிபதியான கர்ணனின் தலைமையில் நடைபெற்ற மூன்றுநாள் யுத்தத்தில் ஒரு சிறு விதிமீறல் கூட கௌரவர் தரப்பில் அனுமதிக்கப்படவில்லை. அதில கர்ணன் மிகவும் கடுமையாகவே இருந்தான். துரியோதனன் பிதாமகர் பீஷ்மரே சிற்சில அதர்மங்களை கண்டுகொள்ளாதுவிட்டாரே, நீ ஏன் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்கிறாய் என்று கேட்டதற்கு கர்ணன் சொன்ன பதில் – “நண்பா, பீஷ்மரோ துரோணரோ செய்யும் தவறுகள் முதலில் பெரிதாக பேசப்படமாட்டாது. அப்படியே பேசினாலும் அதை தனிப்பட்ட பீஷ்மரின், துரோணரின் தவறுகளாகவே இந்த உலகம் பார்க்கும். ஆனால் சூத புத்திரனாகிய என் தலைமையில் நடக்கும் தவறுகள் உடனே கவனம்பெறும். கீழானவர்களுக்கு அதிகாரம் தந்தால் இப்படித்தான் அதர்மவழியில் போவார்கள் என்று இந்த உலகம் என் மொத்த இனத்தையும் பழிக்கும். எனவே நான் அதிகப்படி கவனத்துடந்தான் இருந்தாக வேண்டும். கவலைப்படாதே நண்பா. தர்ம யுத்தத்திலேயே நான் உனக்கு வெற்றியை ஈட்டித்தருகிறேன் ” என்றான்.

உண்மையில் கிருஷ்ணனின் குயுக்திகள் இல்லாதிருந்தால், அவன் அப்படி ஒரு வெற்றியை ஈட்டி தன் நண்பனின் காலடியில் சமர்ப்பித்திருக்கவும் கூடும்.

ஒடுக்கப்பட்ட பிரிவினர் யாராயினும் அரசியலோ இல்லை வேறு எந்தத்துறையிலும் உயர்பதவிகளை அடையும்போது அவசியம் மனதில் நிறுத்த வேண்டிய விஷயம் இது.
இந்தக் கதை இப்போது எதற்கு என்றால்….

கனிமொழியின் அரசியல் பிரவேசம் குறித்து நான் முன்பு எழுதிய பதிவு இது. ராப்ரி போன்ற ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அரசியல்வாதியாகவோ இல்லை மாயாவதி/ஜெயலலிதா போன்ற அராஜகவாதியாகவோ இல்லாமல் ஒரு தெளிவான நல்ல பெண் அரசியல்வாதியாக வருவார் என்ற என் எதிர்பார்ப்பில் மண். அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல – லாரி லாரியாக மண்.
அவரது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறுமா பெறாதா அல்லது கைதாவாரா மாட்டாரா என்பதல்ல இங்கே முக்கியம். அது அரசியல் சதுரங்கத்தின் ஆட்டத்தைப் பொறுத்த விஷயம். ஆனால் இப்படி பெயரைக் கெடுத்துக்கொண்டதே ஒரு பெரிய பின்னடைவு என்றே எண்ணுகிறேன்.

Posted in அரசியல், எண்ணம், சமூகம் | Tagged , , | 1 மறுமொழி

உதிரிப் பூக்கள் – 13 பிப் 2011

இன்று கேணி கூட்டத்தில் இபா கலந்து கொண்டார். ஞானி பேசுகையில் பார்த்தசாரதியிடம் நான் அதிசயிக்கும் விஷயம் இன்றும் அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார் என்பதுதான் என்று சொன்னார். நிஜம்தான். டிவிட்டரிலும் இயங்குகிறாராம் இந்த இளைஞர். :)

பேசுகையில் அவர் நகுலன் என்ற துரைசாமி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படிக்கையில் தன்னுடைய அறை நண்பராக சிறிது காலம் இருந்தவர் என்று சொன்னார். தொடர்ந்து அவர் சொன்ன விஷயங்களை வைத்துப் பார்க்கும் போது வேர்ப்பற்றில் வரும் கிருஷ்ணன் நகுலந்தான் என்று தோன்றுகிறது. அந்த நாவலை இப்போது மறுவாசிப்பு செய்யும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது இன்றைய மாலைப் பொழுது.

தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு வாசித்தவர் என்கிற வகையில் உங்களுக்கு ஏதேனும் பதில் கிடைக்காத கேள்விகள் மிச்சமுண்டா என்ற கேள்விக்கு சற்று விரிவான அழகான பதில் ஒன்றை தந்தார். சங்கம் மருவிய காலத்தில் வந்த நூலான திருக்குறளில் வரும் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற குறளுக்கு, காலத்தால் பிற்பட்டவரான பரிமேலழகர் உரையில் ‘தானாக அறியும் அறிவில்லாத தன்மையினள் பெண் என்பதால் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சொல்கிறார்’ என்று பொருள் தரப்பட்டிருப்பதைச் சொன்ன இ.பா, சங்க காலத்திலேயே ஏகப்பட்ட பெண் கவிஞர்கள் இருந்திருக்கையில் நிச்சயம் வள்ளுவர் இப்படி ஒரு பொருளில் சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை. வள்ளுவருக்கே இந்த நிலை என்றால் அவரையும் விட முற்பட்ட தொல்காப்பியரை எல்லாம் அவர் சொன்ன பொருளில் தான் உரையாசிரியர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா, நாம் இன்று கொள்ளும் பொருள் எல்லாம் உண்மைதானா என்ற மயக்கம் தனக்கு உண்டு என்று சொன்னார். யோசித்துப் பார்க்கையில் நிஜம்தான் என்று தோன்றுகிறது.

இன்னும் நிறையப் பேசினார் என்றாலும் கூட வயோதிகத்தின் காரணமாய் தொடர்ச்சியின்றி அங்குமிங்குமாய் எல்லாத் திசைகளிலும் போய்க் கொண்டிருந்தது அவரது பேச்சு. எனவே என்னால் எல்லாவற்றையும் ஒருமிக்க நினைவு கூர்ந்து எழுத முடியவில்லை. விரைவில் கிருஷ்ணபிரபு போன்ற நண்பர்கள் யாராவது எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

அருகே அமர்ந்திருந்த பாரதி மணி எமெர்ஜென்சி குறித்த சம்பவங்களை இபாவுக்கு நினைவூட்டிய காட்சி சமீபத்தில் படித்த ஜெயமோகனின் அறம் கதையில் வரும் சாமினாதுவை நினைவூட்டியது. :) )

******

வாரமலரில் வெளியான இரு கதைகளுக்கும் வந்த வாசகர் கடிதங்களை ஒரு நகலெடுத்து உடனடியாக அடுத்த வாரமே அனுப்பி வைத்து விட்டார்கள். ஆரம்ப நிலையிலிருக்கும் ஒரு ஊர் பெயர் தெரியாத எழுத்தாளருக்குக் கூட இது போன்ற விஷயங்களை சிரத்தையாய் செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  மற்ற பத்திரிக்கைகளின் நிலவரம் தெரியவில்லை. ஆனால் இது நல்ல அனுபவம். முதல் கதைக்கு கடிதங்களில் நிறைய பாராட்டுகளும் ஆன்லைனில் நிறைய திட்டுக்களும். இந்தக் கதைக்கு நேர் மாறாக கடிதங்களில் திட்டு, ஆன்லைனில் நிறையவே பாசிடிவ் கமெண்ட்ஸ். என்னமோ போடா மாதவா.. ஒன்னுமே புரியலை.

******

எங்கள் தெருவிலும் ஒரு ஃபிளாட் கட்ட வேலைகள் துவங்கி விட்டனர். பேஸ்மெண்ட் போட்டாயிற்று. அங்கேயே தங்கி வேலை செய்ய நிறைய ஆட்கள் வந்து விட்டார்கள். ஒரு நாள் உட்கார்ந்து முட்டி முட்டி உழைக்கு வர்க்கத்தைப் பற்றி ஒரு போஸ்ட் போட்டு விட வேண்டியதுதான்.

******

கீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன் குகை மனிதர்கள், விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள் இரண்டும் படித்தாயிற்று. விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வலையேற்றிவிட வேண்டியதுதான். அநேகமாய் அடுத்த வாரம் ஒவ்வொன்றாய் போட முயல்கிறேன்.

******

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கேணி | Tagged , , , , , , , | 6 மறுமொழிகள்

ஒரு கோழியும் சில குஞ்சுகளும் – சிறுகதை

இரவு ஆஃப்ஷோர் டீமுடன் பேசி முடித்துவிட்டுப் படுக்க ரொம்பவுமே நேரமாகியிருந்தது. அதனால் காலையில் ரேவதிக்கு கண்ணே திறக்க முடியாத அளவு எரிச்சல். இருந்தாலும் காலை ஒன்பது மணிக்கு இருந்த கிளையண்ட்டுடனான மீட்டிங்க் நினைவு அவளை படுக்கையிலிருந்து பிடுங்கி எழுப்பி கிளம்பச் சொன்னது. கார்ன் ஃபேளக்சை பால் விட்டு சாப்பிட்டுவிட்டு இரவு சமைத்ததில் மீதமிருந்ததை மதியத்துக்கு பேக் செய்து கொண்டு அவசர அவசரமாய் கிளம்பினாள்.

மீட்டிங்கில் இருக்கையில் சைலண்ட்டில் போட்டிருந்த அவளது செல்போன் திரையில் ஐ.எஸ்.டி நம்பர் ஒன்று தொடர்ந்து மின்னிக் கொண்டிருந்தது. அது ஒரு இந்திய எண் என்பது ஆர்வத்தை தூண்டினாலும் மீட்டிங்க் மும்மரத்தில் அதை ஒதுக்கி விட்டு வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.

வெளியே வந்து மீதி இருந்த வேலையில் மூழ்கியவள் மீண்டும் அதே எண்ணிலிருந்து கால் வரவும் ஆர்வமாக எடுத்துப் பேசத் தொடங்கினாள்.

“ஹலோ”

“ஹலோ… ஆம் ஐ ஸ்பீக்கிங்க் டு மிஸ். ரேவதி சந்திரசேகர்?” எதிர் முனையில் பேசியவருக்கு ஒரு ஐம்பது வயதிருக்கலாம். ஆனால் இது வரை கேட்டிராத குரல்.

“எஸ்…ரேவதி ஹியர்”

“இஃப் யூ டோண்ட் மைண்ட், நாம தமிழ்ல மேற்கொண்டு பேசலாமாம்மா? ஐ கேன் ஃபீல் மோர் கம்பர்ட்டபிள்.”

”தாராளமா. ”

“இப்ப நான் பேசறதில உனக்கு ஒன்னும் சிரமமில்லையேம்மா? இப்ப அங்க மணி பதினொன்னேகால் இருக்கும் இல்லயா? வேலையா இருந்தா அப்புறமா வேணும்னாலும் பேசலாம். ஒன்னும் அவசரமில்லை”

“இப்ப ஒன்னும் பிரச்சனையில்லை சார். உங்களுக்குத்தான் அகாலமாயிருக்கும். பரவாயில்லைன்னா சொல்லுங்க.”

“என் பேர் ராமமூர்த்தி. திருச்சில இருக்கேன். உங்க பெரிய மாமா ராஜகோபால் மூலமா உன்னோட ஜாதகம் கிடைச்சுதும்மா. உங்கம்மாட்ட பேசினேன். அவாதான் உன் நம்பர் , மெயில் ஐடி எல்லாம் கொடுத்தா.

என் பையன் பேரு ஷங்கர். அவனும் செயிண்ட் பால் ல இருக்கான். நீ மினியாபோலிஸ்ல தானே இருக்க?  ரெண்டு ஊரும் நம்மூர் ஹைதராபாத்- செகெந்திராபாத் போல ட்வின் சிட்டீஸ் இல்லயா? ஊர் ரெண்டும் ரொம்ப பக்கம் இருக்காப்பலயே நீங்க ரெண்டு பேரும் கூட ரொம்ப பக்கத்துல இருக்கணும்னுதான் பெரியவா நாங்க ஆசப்படறோம். புரியறதில்லையா?  ”

தன் சிலேடையை தானே மெச்சிய சிரிப்புடன் அவர் பேசிக் கொண்டே செல்ல ரேவதிக்கு தலை சுற்றியது.

திருமணமா? தனக்கா? இந்த அம்மாவுக்கு என்ன ஆயிற்று என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தவள் அந்தப் பக்கத்திலிருந்து தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவரின் பேச்சை சரியாக கவனிக்காமலே சரி சரியென்று சமாளித்து போனை கட் செய்தாள்.

அந்த பெரியவர் பேசியதின் சாராம்சம் இதுதான். அவரது மகன் ஷங்கருக்கு ரேவதியின் ஜாதகம் ரொம்ப பொருந்துகிறது. பக்கத்திலிருக்கும் நகரத்தில்தான் அவனும் தங்கியிருக்கிறான் என்பதால் இவளது தொலைபேசி எண்ணை அவனுக்கு தந்து இந்த வார விடுமுறையில் இருவரும் சந்தித்துப் பேச வேண்டுமென ஏற்பாடு. ஆனால் இதை அம்மா சொல்லாமல் வேறொருவர் சொல்லித் தெரிந்து கொள்வதில் வந்த ஒரு எரிச்சல் ஒருபக்கம் என்றால் முதலில் தனக்குத் திருமணம் என்று எப்படி அம்மாவுக்கு யோசிக்கத் தோன்றியது என்ற குழப்பம் ஒரு பக்கம் பிடுங்கியது.

ஒருவழியாக வேலைகளை பேருக்கு ஒப்பேற்றிவிட்டு வீடு வந்து சேர்ந்தவள் சோர்வுடன் உட்கார்ந்தாள். இந்தியாவில் மணி ஆறாவது ஆனபின்னர்தான் வீட்டிற்கு போன் செய்ய முடியும் என்பதால் வேறு எதையும் செய்யப் பிடிக்காமல் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.

சத்தமாக “ஹாய்” என்றவாறே உள்ளே நுழைந்த அறைத் தோழி தாரிணி குனிந்து தன் ஷூவை கழற்றத் தொடங்கினாள். இவளிடமிருந்து பதிலெதுவும் இல்லாததை உணர்ந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். முகமும் கண்ணும் சரியில்லை என்பதை உணர அதிக நேரம் தேவைப்படவில்லை – இரண்டு வருட பழக்கத்தில் இவளை நன்றாகவே புரிந்து கொள்ளத் துவங்கியிருந்தாள் தாரிணி. மேற்கொண்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்று முகம் கழுவி, உடை மாற்றி வந்தவள் இரண்டு கோப்பை காபியுடன் வந்து அவளருகில் அமர்ந்தாள்.

“என்ன மேடமுக்கு இன்னிக்கு ஆஃப்ஷோர் கால் எதும் இல்லயா? இன்னிக்கு டின்னர் உங்க டேர்ன் வேற. நீங்க என்னடான்னா ட்ரஸ் கூட மாத்தாம அப்படியே போஸ் கொடுத்துகிட்டிருக்கீங்க? என்ன மேட்டர்?”

“என்ன சொல்றதுன்னே தெரியல தாரிணி. என் குடும்ப நிலமை உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன். நான் தான் மூத்தவ. இன்னும் ரெண்டு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கா. அப்பா நாங்க சின்ன குழந்தையா இருக்கும் போதே போய்ட்டார். சொத்துன்னு இருக்கறது ஒரு வீடு மட்டும்தான். சின்ன போர்ஷன்ல குடி இருந்துண்டு, மீதி இடத்தை வாடகைக்கு விட்டு அதுலதான் அம்மா சிக்கனமா எங்கள எல்லாம் வளத்தா.

நான் வேலைக்குப் போற வரைக்கும் அம்மா சமையல் வேலைக்கு போயிண்டிருந்தா. வேலைக்குப் போக ஆரம்பிச்சதும்தான் இப்ப ஒரு நாலு வருஷமா அம்மா ரெஸ்ட்ல இருக்கா.

ஆன்சைட் வந்து ரெண்டு வருஷம் கூட ஆகலை. இப்பத்தான் ஒரளவு ஒரு தங்கைக்கு கல்யாணம் பண்ற அளவுக்கு நகையும், பணமும் சேர்ந்திருக்கு. “

இதெல்லாம் ஒரளவுக்கு தாரிணிக்கும் ஏற்கனவே தெரிந்ததுதான். இருந்தாலும் ஏதோ பெரிய டென்ஷனில் இருக்கும் ரேவதி, எல்லாவற்றையும் தானே கொட்டித் தீர்க்கட்டும் என்று “அதான் எனக்குத் தெரியுமே” என்று குறுக்கு வெட்டெல்லாம் போடாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

“இப்போ என்னடான்னா கொஞ்சம் கூட யதார்த்தமா யோசிக்காம,  எனக்கு கல்யாணத்துக்கு பாக்க ஆரம்பிச்சிருக்கா எங்கம்மா. பையனோட அப்பா போன் பண்ணினப்புறம்தான் எனக்கே தெரியவருதுன்னா.. எப்படியிருக்கும்னு யோசிச்சுப் பாரு? தவிரவும் நான் கல்யாணம் வேணும்னு இவாகிட்ட கேட்டேனா? ஒரு கணக்கு வேணாம் எதை எப்படி செய்யுறதுன்னு.. கொஞ்சங்கூட யோசனையில்லாம எதையாவது பண்ணி வைக்கறதே பொழப்பா போச்சு…. எப்படா  அங்க மணி ஆறாகும்னு காத்திண்டிருக்கேன். போன்ல மாட்டட்டும், இன்னிக்கு இருக்கு எங்கம்மாக்கு…”என்றவளை புன்னகையுடன் பார்த்தவாறே எழுந்தாள் தாரிணி.

“எங்கப்பா எழுந்துக்கறே?”

“எனக்கு கால் ஆரம்பிக்கறதுக்கு முன்னால சமையல முடிச்சுட்டு வந்துடறேன்”

“ஹேய்…. இன்னிக்கு என்னோட முறைதானே? நானே சமச்சுடறேன்பா”

“வேணாம்மா தாயே… நல்ல நாள்லயே நீ சமைக்கறது ரொம்ப கொடுமை. அதும் இன்னிக்கு நீ இருக்கற மூடுக்கு, உன்னை சமைக்கவிட்டு அதை சாப்பிடற அளவு ரிஸ்க் எடுக்க நான் தயாரா இல்ல. வேணும்னா நீயும் ஒரு ரெண்டு நாளைக்கு சமைச்சு காம்பன்சேட் பண்ணிக்கோ… இன்னிக்கு என்னை விட்டுடும்மா புண்ணியமா போகும்..” என்று சிரித்துக் கொண்டே சொல்லியவாறு கிச்சனை நோக்கிப் போனாள் தாரிணி.

மேலுக்கு கிண்டல் செய்வது போல் தெரிந்தாலும், அந்த செயலில் இருந்த ஆதரவும் அனுசரனையும் ரேவதியை நெகிழ வைத்தது.இரண்டே வருடங்கள் உடன் தங்கியவளே இவ்வளவு தூரத்துக்கு மனதைப் புரிந்து கொண்டு நடக்கையில் தன்னை பெற்று வளர்த்த அம்மா ஏன் இப்படி புரிந்து கொள்ளாமல் படுத்துகிறாள் என்று எரிச்சலைத்தந்தது.

**

ரேவதி மட்டுமல்ல நாகலக்ஷ்மி அம்மாவின் நான்கு பிள்ளைகளுமே ரொம்பவும் பொறுப்பான பிள்ளைகள்தான். மற்ற மூவரும் அம்மாவுக்கு அதிக செலவு வைக்காமல் ஸ்காலர்ஷிப்பில் படிப்பார்கள் என்றால் இவள் ஒரு படி மேலே போய் மாலை நேரங்களில் தனக்கு கீழ் வகுப்பு பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்து வீட்டுச் செலவுக்கே கை கொடுப்பாள். மெரிட்டில் பி.ஈ முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் ரேவதிக்கு வேலையும் கிடைத்த பின்னர்தான் நாகம் மாமி சிரித்தால் எவ்வளவு அழகு என்பது தெரியவந்தது. ரேவதி வேலைக்கு வந்த இந்த நான்கு வருடங்களில் போக்குவரத்து செலவு தவிர்த்து டீ காபிக்கு கூட அநாவசியமாய் செலவு செய்தவள் இல்லை. அவ்வளவு ஏன், இரண்டு வருடமாய் யூ.எஸ்ஸிலிருந்தாலும் இன்னமும் நயாகராவை கூட தரிசித்ததில்லை.

தம்பி தங்கைகளின் படிப்பு, இரண்டு தங்கைகளின் கல்யாணம், அதற்கு பின் தனக்கும் அம்மாவுக்குமான வாழ்கைச் செலவுக்கு சேமிப்பு என அவளது இலக்குப் பட்டியல் பெரியது. அர்ஜுனன் கிளியின் கண்ணை மட்டுமே பார்ப்பது போல்தான் அவள் வாழ்வும் ஓடிக் கொண்டிருந்தது. வாரயிறுதிகளில் விதவிதமான ரெஸ்டாரன்ட்டுகளில் சாப்பிடவோ, லாங் வீக் எண்ட் எனப்படும் நீண்ட விடுமுறைகளில் அக்கம் பக்கமிருக்கும் ஊர் சுற்றிப் பார்க்கவோ அவள் வருவதில்லை. தானோ மற்ற தோழிகளோ கிளம்புகையில் ஒரு துளி ஏக்கமும் அவள் கண்களில் எட்டிப் பார்த்தது கூட இல்லை என்பதெல்லாம் தாரிணிக்கு அவள் மேல் மதிப்பை அதிகரிக்க வைத்த பல காரணிகளில் ஒன்று.

ரேவதியின் குடும்ப நிலமையை வெளியிலிருந்து பார்க்கும் தனக்கே இந்த கல்யாண ஏற்பாடு எவ்வளவு அசட்டுத்தனமானது என்று புரிகையில் ரேவதியின் அம்மா ஏன் இப்படி குழப்படி செய்கிறார். ஒரு வேளை ஊரும் உறவும் வயதுப் பெண்ணுக்கு திருமண முயற்சி செய்யவில்லை என்று தூற்றக் கூடாது என்று பேருக்கு செய்யும் முயற்சியோ என்று கொஞ்சம் விகல்பமாகக் கூட தோன்றியது.

தாரிணி சமையலை முடித்துவிட்டு கிச்சனை ஒழுங்கு செய்ய ஆரம்பித்த போது ரேவதி அம்மாவோடு பேச ஆரம்பித்துவிட்டாள் என்பதை உணர முடிந்தது. அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று தன் அறைக்குச் சென்றவள் கதவைத் தாளிட்டுக் கொண்டு தன் வேலைகளில் மூழ்கினாள். வயிறு உணவை நினைவு படுத்திய போது மணி பதினொன்றாகியிருந்தது. வெளியே வந்தவள் அப்போதுதான் ரேவதியும் சாப்பாட்டுத் தட்டுடன் உட்கார்ந்திருப்பதை பார்த்தாள்.  பார்த்த மாத்திரத்தில் அவள் முகத்தில் ஒரு தெளிவும், மகிழ்ச்சியும் தெரிந்தது மனதுக்கு இதமாக இருந்தது.

“என்ன ரேவ்ஸ், அம்மாவை வறுத்தெடுத்துட்ட போல? குரல் ரொம்ப பலமா இருந்துச்சே?”

“ஒ, ரொம்ப கத்திட்டேனா? அதான் ரூம் கதவையே திறக்காம வேலை பாத்துகிட்டிருந்தயா? சாரி தாரிணி”

“ச்சீ… எதுக்கு இதுக்கெல்லாம் சாரி சொல்ற? நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். சரி, அம்மா என்ன சொல்றாங்க? உன் ஸ்டாண்ட் என்னான்றத தெளிவு படுத்திட்டயா? புரிஞ்சுகிட்டாங்களா? என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு.”

“உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன்? எதுக்கு இவ்ளோ ஃபார்மலா பேசற நீ? அம்மாவுக்கு நான் தெளிவு படுத்த வேண்டியதில்லை. அம்மா என்னை தெளிவாக்கிட்டா தாரிணி. “

புரியாமல் பார்த்தவளைப் புன்னகையுடன் எதிர்கொண்டாள் ரேவதி

“ஆமாம்பா… அம்மாவோட ப்ளானிங்கும், தைரியமும், வித்யாசமான சிந்தனையும் என்னிக்குமே எனக்கு ஆச்சரியமான ஒன்னு. இன்னிக்கும் அம்மா வழக்கம் போல யாரும் கெஸ் பண்ண முடியாத விளக்கத்த கொடுத்து என்னை வாயடச்சு போக வச்சுட்டா”

“புரியும்படியா பேசு ரேவ்ஸ்” ஆச்சரியத்திலும், ஆர்வத்திலும் தாரிணி சாப்பிடுவதை கூட நிறுத்தி விட்டு ரேவதியை நோக்கித் திரும்பினாள்.

“நாமதான் ரொம்ப தமிழ் சினிமால்லாம் பாத்து அப்பா இல்லாத குடும்பத்துல யாராவது ஒருத்தர் தியாகியா ஆகறதுன்ற மாதிரில்லாம் அபத்தமா யோசிக்கறோம் போல. மீதி இருக்கற குழந்தைகளைக்  காப்பாத்த உன்னை பலியிடறதுக்கு நானென்ன தலச்சன் குட்டிய பத்தியத்துக்கு முழுங்கற பூனையான்னு அம்மா கேக்கறா… நாலு மாசத்துக்கு முன்னாடியே என் தங்கை ராஜிக்கும் கேம்பஸ்லயே வேலை கிடைச்சுடுத்துன்னு சொல்லிருந்தேன், ஞாபகம் இருக்கா?”

ஆமாம் என்பது போல் தாரிணி தலையசைத்தாள்.

“அம்மா சொல்றா, உன் பங்குக்கு அடுத்தவளோட படிப்பு முடியற வரைக்கும் வீட்ட காப்பாத்திட்ட. அதோட ஒருத்தி கல்யாணத்துக்கு வேணுங்கற அளவு நகையும் பணமும் சேர்த்துட்ட. இப்ப நீ உன் வாழ்கைய பாக்கணும். நீ சேர்த்தது உனக்கே பயன்படனும். இனி ராஜியோட பொறுப்புல கொஞ்ச நாள் குடும்பத்த ஓட்டறேன். இன்னும் நாலு வருஷத்துல அவள் கல்யாண நேரம் வரதுக்கும் சின்னதுகள் ரெண்டும் படிப்ப முடிச்சுட்டு வேலைக்குப் போகவும் நேரம் சரியா இருக்கும். எல்லாருக்கும் கல்யாணத்த முடிச்சுட்டா மிச்சம் இருக்கவே இருக்கு என் ஆம்படையான் வச்சுட்டுப்போன ஆகம். நான் என் பாட்டை ஒட்டிப்பேன்.

இப்ப நீங்கல்லாம் இப்படி கை நிறைய சம்பாதிக்கறேள்ன்றதாலதான் நான் இப்படி சொல்றேன்னு நினைக்காதே ரேவதி. உங்கப்பா காலமானபோதே அவர் ஆபிஸ்ல கொடுத்த பணம், நம்ம ஊர்ல இருந்த பூர்வீக நிலத்தை வித்த பணம்னு எல்லாத்தையும் போட்டு மூணு பொண்களுக்கும் தலைக்கு அஞ்சு பவுனுக்கு நகை பண்ணி அதை என் பெரிய அண்ணா மூலமா பாங்க்ல லாக்கர்ல வச்சுட்டேன். உழைச்சும், இந்த வீட்டு வாடகைய வச்சும் உங்களையெல்லாம் படிச்சு ஆளாக்கிண்டிருந்தேன். நீங்க யாரும் இப்படி ஓகோன்னு படிச்சு சம்பாதிக்கலைன்னாலும் கூட அந்த நகைய வச்சுண்டு, மேல் செலவுக்கு இந்த வீட்டை வித்தாவது உங்க ஒருத்தொருத்தரையும் சக்திக்கேத்த மாதிரி ஒரு வைதீகம் பண்ற பையனுக்காவது பாத்து கல்யாணம் பண்ணி அனுப்பி இருப்பேனே ஒழிய, உங்கள்ள ஒருத்தரோட சம்பாத்யத்த பிடுங்கி மத்தவாளுக்கு இட்டு நிரப்பணும்னு நினைக்க மாட்டேண்டின்னு தெளிவா சொல்லிட்டா

இன்னிக்கு உடம்புல பலமும், நெஞ்சுல தைரியமும் இருக்கறப்போ தம்பி தங்கேள்தான் முக்கியம், அவாளை இன்னும் உசரத்துல கொண்டு போய் வைக்கணும்னு உனக்குத் தோன்றது இயல்புதான். ஆனா அவாள்ளாம் ஆளாகி, தனக்குன்னு ஒரு வாழ்கைய அமைச்சுண்டு, உன்னை கவனிக்க நேரமில்லாம ஓடறப்போ அது நன்றி கெட்ட தனம்னு தோணும். எவ்வளவு தியாகம் பண்ணினேன்னு நினைக்கத்தோணும். அப்போ அவா மேல ஆங்காரப்பட்டோ உன் மேலயே கழிவிரக்கப்பட்டோ என்ன ஆகும் சொல்லு? எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்குடீ.. யாரும் இன்னொருத்தரோட வாழ்கைய அழிக்கவோ, உசத்தவோ வேண்டாம்.

அதுக்கு பதிலா என் வயத்துல பொறந்த கொழந்தேள் எல்லாரும் வசதி குறைவா இருந்தாலும் அவாவா நிம்மதியாவும், சந்தோஷமாவும் வாழ்ந்தா எனக்கு அது போதும். தியாகம்ங்கறதெல்லாம் ஒரு நேரத்துல உசத்தியா தெரிஞ்சாலும் பிற்பாடு ஏமாந்துட்டோமோன்னு தோண வச்சுடும், அதெல்லாம் நமக்கு வேண்டாண்டின்னு சொல்லிட்டப்பா…”

”சோ.. சீக்கரம் டும்..டும்.. தான்..”

பதில் பேசாமல் தலைகுனிந்தபடி தலையசைத்தாள் ரேவதி. அம்மாவை நினைத்து நெகிழ்ந்து கலங்கிய அவளின் கண்களைப் பார்த்த போது படிப்பறிவில்லாத அந்த மனுஷியின் தைரியத்தின் மீதும், உணர்ச்சிவசப்படாது முடிவுகளை எடுக்கும் அவரது நெஞ்சுரத்தின் மீதும் மரியாதை பெருகியது தாரிணிக்கு.

———-

நன்றி:- தினமலர்- வாரமலர்-30.01.11

Posted in சிறுகதை | Tagged , , | மறுமொழியவும்

ஸ்திரீ- பாரதியார்

அது ‘ஸயன்ஸ்’ ஆயினும், பெண் விடுதலையாயினும் வேறெவ்வகை புதுமையேயாயினும், நம்மவர் அதனை ஒரு முறை கைக்கொள்வாராயின், பிறகு அதை மஹோன்னத நிலமைக்கு கொண்டு போய் விடுவார்கள். எனவே, நாம் – ஸ்திரீகளாகிய நாம் குருடாகிவிட்ட ஒருவன் தான் இழந்த பார்வையை மீட்டும் எய்தும் பொருட்டு எத்துணை பிரம்மாண்டமான த்யாகங்கள் செய்யத் ஒருப்படுவானோ, அத்துணை பெருந்தியாகங்கள் புரிய நாமும் ஒருப்பட்டோமாகி, இந்த விடுதலைக்கு பாடுபட வேண்டும். கூடித் தொழில் செய்யவேண்டும். ஒற்றை ஸ்திரீயால் நடக்கக்கூடிய கார்யத்தைக் காட்டிலும் பத்து ஸ்திரீகள் சேர்ந்து செய்யக் கூடிய கார்யம் எத்தனை மடங்கு அதிக வலிமை கொண்டது, பத்து மடங்கு வலிமையுடையதென்று சிலர் நினைக்கக் கூடும். அது சரியன்று. பதிறாயிரம் மடங்கு அதிக வலிமையுடையதாகும்.

நாம் சேர்ந்து உண்மையோடு விடுதலைக்கு பாடுபட்டால் பிறகு நமக்கு ஆண்மக்களும் உதவி செய்வார்கள்; கடவுளும் உதவி செய்வார். எனவே, இவ்வித விடுதலை எய்தும் பொருட்டு உழைத்து வரும் இந்த சங்கமும், இது போன்ற பிறவும் பெரிய வெற்றி எய்தும்படி அருள் செய்யுமாறு கடவுளின் பாதமலர்களை வேண்டுகிறேன்.

-பாரதியார்

(இது வரை அச்சில் வெளிவராத கையெழுத்துப் பிரதியின் பகுதி)

தமிழ் நாட்டு மாதருக்கு -  எனும் நூலில் இருந்து.

Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம் | Tagged , , , , , | 1 மறுமொழி