படித்ததில் பிடித்தது (1)


படித்ததில் பிடித்தது அப்படிங்கற வரிசைல நான் எனக்கு பிடிச்ச சில புத்தகங்களை பற்றி எல்லோருடனும் பகிர்ந்துக்காலாம்னு ஒரு எண்ணம். (1) அப்படின்னு போட்டிருக்கறதில்லேயே தெரிஞ்சிருக்குமே, இது இன்னியோட முடியற தொல்லை இல்லை. இது தொடரும்….(இப்படி நான் போட்டு வச்சிருக்கற லிஸ்ட் கொஞ்சம் பெருசுதான். நானே மறந்துடுவேனேன்னு சில சமயம் நினைப்பேன். ஆனால் நம்மை விட அதை மற்றவர்கள் நன்றாகவே நினைவு வச்சுக்கறாங்களே. அதுனால அப்புறமா கேட்டுகிட்டா போச்சு 🙂 )

ஜெயந்தனின் சிறுகதைகள் தொகுப்பு – மீண்டும் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்னை ரொம்பவே கவர்ந்த ஒரு புத்தகம். முதலில் ஆசிரியரை பற்றி – 70களில் இருந்து எழுதிவரும் இவர் சிறுகதை, நாவல் மட்டுமின்றி சிறந்த நாடகங்களையும் படைத்துள்ளார். இவரது பெயரை கேட்டு இவரை ஜெயகாந்தனோடு குழப்பிக்கொள்பவர்கள் உண்டு. நர்மதா வெளியீடான இந்த புத்தகத்தில் மொத்தம் 9 சிறுகதைகள் உள்ளன. இவரோட சிறுகதைகள் வழக்கமான ஒரு நாட், சில சம்பவங்களின் வர்ணணை கடைசியில் ஒரு நீதிபோதனை அல்லது பொட்டிலறைகிற திருப்பம்ன்ற வழக்கமான வடிவத்துல பொதுவா உள்நுழையறதில்லை. பெரும்பாலும் கதாபாத்திரங்களின் படைப்புத்தான் முக்கியமான விஷயமா இருக்கும். கடைசியில் கதைகள் வாசக மனதில் எழுப்பற கேள்விகள்தான் அவரோட இலட்சியம். மத்தபடி இந்த சுவாரசியமான நடை ,திடீர் திருப்பங்கள் எல்லாம் இவர் எழுத்திலிருக்காது. எளிமையான நீரோடை போன்ற நடை.

சிறுகதை தொகுப்பு என்கிறதால இதை பத்தி அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் பிச்சு பிச்சு எடுத்து போட்டு விமர்சனம் எழுதறதை விட, ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்ற அடிப்படைல ஒரு கதையையே எடுத்து பொட்டுடலாம்னு எண்ணம்.
இப்போ கதை.

************************
ஆகஸ்ட்

சாந்தி டீச்சர் எந்த முகாந்திரமுமில்லாமல் ருத்ரா டீச்சர் முடியை பிடித்து ஆட்டி கீழே தள்ளி மிதித்ததாகச்சொன்னார்கள். இவ்வளவிற்கும் ருத்ரா டீச்சர்தான் பலசாலியாக இருக்க வேண்டும்.

ருத்ரா டீச்சர் கூச்சலை கேட்டு ஒடி வந்த, பக்கத்தில் இருந்த வகுப்புகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் அவளை சாந்தியிடமிருந்து பிரித்துக்காப்பாற்றிய போது சாந்தி காட்டிய ‘வேகம்’ அவர்களுக்கு மேலும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது. அப்போதே அவர்கள் ‘ஒருவேளை இவளுக்கென்ன பைத்தியமா’ என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

“ஏன் டீச்சர், ஏன் அடிக்கறீங்க?” என்று கேட்டதற்கு சாந்தியிடமிருந்து மூசு மூசுவென்று பெருமூச்சுதான் வந்திருக்கிறது.

ருத்ராவை கேட்டிருக்கிறார்கள்.

“ஒன்னுமில்லைங்க, என்னமோ என் கஷ்டத்தை நான் சொல்லிகிட்டு இருந்தேன். இவ திடீர்னு இப்படி செஞ்சுட்டா.” என்றிருக்கிறாள் அவள்.

அப்போதும் சாந்தி சீறியிருக்கிறாள். “இவ சொல்றா, அந்த மனுஷன் இருந்தா நான் ஏன் இப்படி லோல் படறேன்னு.”

“சொல்லக்கூடாதுங்களா? தாலியறுத்தவளுக்கு ஒரு கஷ்டம் வந்தா அவ, அந்த மனுஷன் இல்லியேன்னு புருஷனை நினைக்க மாட்டாளா?”

சாந்தி மறுபடியும் ருத்ராவின் மயிரை பிடிக்க பாய்ந்திருக்கிறாள். “பாத்தீங்களா? மறுபடியும் சொல்றா?”

“ஏன் டீச்சர், சொல்லக்கூடாதா?” என்று கருப்பையா வாத்தியார் கேட்டதற்கு அவரை ஒரு முறை முறைத்திருக்கிறாள். அவர் தான் உண்மையிலேயே பயந்துவிட்டதாக மறுநாள் சொல்லியிருக்கிறார்.

நிலைமை ஒரு வழியாக பூரணமாக புரிந்து விட்ட பிறகு, சாந்தியை அந்த ஆசிரியர்கள் ஒய்வறையிலேயே விட்டு வெளியே கதவை சாத்திவிட்டார்கள். அவள் வீட்டிற்கு ஆளனுப்பியிருக்கிறார்கள்.

************************

சாந்தியை 13 நீதிபதிகள் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். 13 பேரும் ஆண்கள். ஆளுக்கொரு வகையிலான கோமாளி உடை அணிந்திருந்தார்கள்.

“உன் பேரு என்ன?”
“சாந்தி, ஒம் சாந்தி”
“ஏன் இப்படி இருக்கே?”
“எப்படி?”
“எளச்சு எளச்சு, கொத்தவரங்கா வத்தலாட்டம்”
“தின்னவனப்போயி கேளுங்க”
“எதைத் தின்னவன?”
“என் உடம்பைத்தான்”
“யாரு தின்னா?”
“யாரு திம்பா? புருஷங்காரந்தான்”

நீதிபதிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். நீதிபதி 13 , நீதிபதி 12 இடம் கேட்டார், “நாமெல்லாம் திங்கறோமா என்ன?”

நீதிபதி 12 சொன்னார், “திங்கலாம் அல்லது திங்காமலும் இருக்கலாம்”.

ஆனால் நீதிபதி 8 அழுத்தமாக மறுத்தார். “இல்லை. நாம் அப்பர் க்ளாஸ் ஆகிவிட்டவர்கள். நம்மால் லோயர் க்ளாஸ் அல்லது மிடில் க்ளாஸ் மாதிரி காரியமாற்ற முடியாது.”

சாந்தி சிரித்தாள். பின்பு சொன்னாள், “இருக்கலாம், ஒருவேளை நீங்கள் மென்று தின்னாமல் அப்படியே விழுங்கி விடுகிற க்ளாசாக இருக்கலாம் – விழுங்கியது விழுங்கப்பட்டதற்கு தெரியாமலே.”

“ருத்ரா டீச்சருக்கும் உனக்கும் என்ன விரோதம்?”
“அவள் அதிர்ஷ்டத்தில் விடப்பட்டிருந்தாள்.”
“அப்படியென்றால்?”
“அவள் புருஷன் செத்துபோய்விட்டான்.”
“நீ?”
“நான் சபிக்கப்பட்டிருக்கிறேன்.”
“அப்படியென்றால்?”
“என் புருஷன் உயிரோடிருக்கிறான்.”

நீதிபதிகள் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
நீதிபதி 8 நீதிபதி 11 இடம் கேட்டார், “இது சரியா இருக்குமா?”
நீதிபதி 11 ஆங்கில முறைப்படி தோளை மட்டும் குலுக்கினார்.
“சாந்தி, நீ ஏன் கால் மாற்றி தலை வைக்கிறாய்? புருஷன் உள்ளவள்தான் அதிர்ஷ்டக்காரி என்றும் கம்மனாட்டி துரதிர்ஷ்டக்காரி என்றும் உலகம் சொல்லும்.”

“ஐயா, உலகம் என்பது…?”
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.”
“இல்லை. மாட்டார் மாட்டே. அதாவது எருமை மாட்டார் மாட்டே.” – சாந்தி கபகபவென்று சிரித்தாள்.
“சரி, இலக்கிய சர்ச்சைகளில் புகுந்து கோர்ட்டார் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இதற்கு பதில் சொல். அப்படியே இருந்தாலும் அதிர்ஷ்டத்தில் விடப்பட்டவர்களும் சபிக்கப்பட்டவர்களும் ஏன் விரோதமாக இருக்கவேண்டும்?”
“இதென்ன கேள்வி, அதிர்ஷ்டத்தில் விடப்பட்டவர்களும்க்கும் சபிக்கப்பட்டவக்கும் இடையே விரோதமில்லையென்றால் வேறு எந்த இருவருக்குமிடையே விரோதம் இருக்க முடியும்?”
“விளங்கவில்லையே, அளவுக்கு மீறி படிக்கிறாயா?”
“உண்மைதான். நான் நிறைய படிக்கவும் சபிக்கப்பட்டிருக்கிறேன்.”
நீதிபதி 11, நீதிபதி 10 இடம் கண் சிமிட்டிச்சொன்னார். “நான் சட்டத்தை தவிர வேறு எதுவும் படித்ததில்லை. அதுவும் கூட கல்லூரியோடு சரி.”
நீதிபதி 10 சொன்னார் “கல்லூரியில் கூட நான் பாஸ் மார்க் வரம்போடு சரி.”
சாந்தி சொன்னாள், “மனிதரில் நீரே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.”
“சரி, விரோதமும் விரோதிகளும் எங்கும் உண்டு. ஆனால் எல்லா நாட்களும் போர்க்களமாயிருப்பதில்லை. விரோதம் நிலவுகிற சமாதான காலங்கள்தான் அதிகம். ஏதாவது உடனடிக்காரணம் ஏற்பட்டுவிடுகிறபோதுதான் போர் மூளுகிறது.”
“நீ ருத்ராவை தாக்க ஆரம்பித்ததற்கு உடனடிக்காரணம் என்ன?”
“எல்லைகளில் எதிரி விஷமம் செய்வது போல அவள் என்னை சீண்டிக்கொண்டேயிருந்தாள்.”
“என்ன சொல்லி அல்லது செய்து சீண்டினாள்?”
“அந்த மனுஷன் இருந்தால் நான் ஏன் இப்படி லோல்படுறேன் என்று என்னிடமே இந்த இரண்டு மாதத்திற்குள் ஐந்தாவது முறையாக சொல்லி விட்டாள்.”
“அது அவளது கஷ்டம். அவளது நஷ்டம். அவளது ஆதங்கம். இது எந்த விதத்தில் உன்னைச்சீண்டியதாகும்? இதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”
“இல்லை. அது அவளது கஷ்டமல்ல. அவளது வசதி. அவளது நஷ்டமல்ல, லாபம். அவளது ஆதங்கமல்ல, சந்தோஷம்.”
“என்ன, ஒரு புருஷனின் மரணம் ஒரு மனைவியின் வசதி, லாபம் , சந்தோஷமா?”
“இன்னும் கூட ஒன்று உண்டு, கட்டை விரல் மாதிரி.”
“என்ன அது?”
“ஆகஸ்ட் 15.”
“நான்சென்ஸ்.” என்றார் நீதிபதி 1.
“ஒன்னாம் நம்பர் மடத்தனம்.” என்றார் நீதிபதி 2.
சாந்தி வானத்தை நோக்கி இரு கைகளையும் ஏந்தி கேட்டாள். “கடவுளே, நீ எனக்கு புருஷன் என்ற ரூபத்தில் ஒரு Hang manஐத்தான் கொடுத்தாய். நீதிபதிகளையாவது நீதிபதிகளாக கொடுத்திருக்க கூடாதா? சிந்திப்பவர்களுக்கு பதிலாக திட்டி தீர்ப்பவர்களை கொடுத்திருக்கிறாயே?”
அதுவரை அங்கு இல்லாத சர்க்கார் தரப்பு வக்கீல் எழுந்து சொன்னார்,”கோர்ட்டார் அவர்களே, இது கோர்ட்டை அவமதிக்கும் காரியம்.”
“ஆமாம் சாந்தி. உன்னை எச்சரிக்கிறோம். மறுபடியும் நீ இப்படி பேசினால்…”
“நீதிபதிமாரே”
“ஒ.கே. தொடர்ந்து சொல்.”
“தொடர்ந்து நான் சொல்ல என்ன இருக்கிறது. நீங்களோ அரசுத்தரப்பு வக்கீலோதான் சொல்ல வேண்டும்.”
“உன் புருஷன் சரியில்லாததன் காரணமாக நீ மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்.”
“அதில் முதல் பாதிதான் உண்மை. பிற்பாதி உங்கள் கற்பனை. நான் பக்காவாக சுயபுத்தியோடுதான் இருக்கிறேன்.”
“இது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாருமே சொல்கிற கூற்றுதான்”
தலைமை நீதிபதி சொன்னார், “இவள் மனநிலை பாதிக்கப்பட்டவளா என்றறிய வேண்டுமானால் இவளது புருஷன் அப்படி இவளது மனநிலை பாதிக்கும்படியாக நடந்துகொள்ளக்கூடியவனா என்பதை நாம் அறிய வேண்டும். ஆகவே நீதிபதி 6ன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை நியமிக்கிறேன்.”
நீதிபதி 6 உடனே எழுந்து, “ஏற்கனவே விசாரணை கமிஷன் ரிப்பொர்ட் ரெடி” என்றார்.
“சரி, இப்போது கூட நாம் அதை பார்க்கலாம். இவளது கணவன், என்ன வேலை அல்லது தொழில் செய்கிறான்?”
“தொழில் அல்லது வேலை ஒன்றும் இல்லை. யாராவது கேட்டால் எழுதுவதாக சொல்கிறான்.”
“எழுதுவதென்றால் இந்த கதை, கிதை…”
“ஆமாம்”
“அதில் என்ன வருமானம் வரும்?”
“எந்த வருமானமும் வருவதாக தெரியவில்லை.”
“எந்த வருமானமும் தராதது எப்படி தொழில் அல்லது வேலையாகும்?”
“அது ஒரு தொழில் அல்லது வேலை ஆகாதுதான்.”
“பரவாயில்லை. அது சட்டப்படி குற்றமில்லை. சட்டம் சம்பந்தப்படாத விஷயங்களில் நமக்கு அக்கறையுமில்லை. ஆனால் வருமானம் இல்லாத நிலையில் பூவாவுக்கு என்ன செய்கிறான் என்ற கேள்வி கமிஷனின் வரம்புக்கு உட்பட்டதுதான். அந்த கேள்வியை கமிஷன் கேட்டதா?”
“கமிஷன் விசாரித்தது. பூவாவுக்கும், துணிமணிக்கும், கஞ்சாவுக்கும் அவன் மனைவியை சார்ந்திருக்கிறான்.”
சாந்தி மறித்தாள் “சார்ந்திருக்கவில்லை. சார்ந்திருத்தல் என்பது மனைவிக்கான சொல். மனைவிதான் கணவனை சார்ந்திருப்பாள்.”
நீதிபதிகள் திகைத்தார்கள்.
“சார்ந்திருத்தல் என்பதை கணவனுக்கும் பொருத்துவதில் மொழியியல் சிக்கல் என்ன?”
“இல்லை. மொழியிலேயே கணவன் மொழி மனைவி மொழி என்கிற பேதம் இருக்கிறது. மனைவியை ‘தீர்க்க சுமங்கலி பவ‘ என்று வாழ்த்த வேண்டும். ஆணை வாழ்த்தும் போது –
சதமானம் பவதி சதாய புருஷ
சதேந்திரிய ஆயுஹூ
ப்ரதி திருஷ்டதி

என்று வாழ்த்த வேண்டும்.
“அதாவது, பெண் கடைசிவரையிலயும் தாலியோட இருக்கணும். அதுக்கு மேல பெரிய பேறு ஒன்னுமில்லை. ஆனா ஆண் பல்லாயிரம்.. பல்லாயிரம்.. பல்லாயிரத்தாண்டு வாழணும். மனைவியை பத்தி ரெபரன்ஸ் ஒன்னும் இல்லை. தேவையில்லை. அவந்தான் அறுபதாயிரம் கட்டிக்கலாமே? கடைசி வரயிலயும் ஒரு பத்து பேராச்சும் உயிரோட இல்லாமயா போயிடுவா?”
நீதிபதிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். “சாந்தி டீச்சர், நீ ஏன் சுருக்கமாகவும் புரியும்படியாகவும் பேசக்கூடாது?”
“நல்லது, கோர்ட்டார் அவர்களே, இனிமேல் நான் A for Apple , B for Biscuit என்று பிரித்தே பேசுகிறேன்.”
அரசு வக்கீல் மறுபடியும் எழுந்து “குற்றம் சாட்டப்பட்டவர் மறுபடியும் கோர்ட்டை அவமதிக்கிறார்.” என்றார்.
“இல்லை. கனம் கோர்ட்டார் அவர்களே. நீங்கள் புரியும் படியாக பேச வேண்டுமென்று கேட்டதற்கு இணங்கத்தான், அப்படி நான் ஆகக்கூடிய சிரத்தையுடன் பேசப்போகிறேன் என்று சொன்னேன்.”
“அப்ஜெக்ஷன் ஒவர் ரூல்ட்” என்று சொல்லிவிட்டார் தலைமை நீதிபதி.
சாந்தி பேசினாள் “அதாவது சம்பாதிக்கும்போது கணவன் மனைவிக்கு மனமுவந்து தானம் கொடுக்கிறான். கொடுத்தால் உண்டு. இல்லையென்றால் இல்லை. அதுதானே தானம்? ஆனால் மனைவி சம்பாதிக்கும்போது கணவன், எடுத்துக்கொள்கிறான் அல்லது பறித்துக்கொள்கிறான். அதாவது தானாகவே எடுத்துக்கொள்ளும் அல்லது பறித்துக்கொள்ளும் உரிமையில் இருப்பவனை எப்படி சார்ந்திருப்பதாக சொல்லமுடியும்?”
“நீ மறுக்கவில்லையா?”
“லேசான மறுப்பின்போது பறித்துக்கொண்டான். பலமாக மறுத்தபோது அடித்து பிடுங்கிக்கொண்டான்.”
“ஏன்?”
“அது அவனால் முடிந்தது.”

தலைமை நீதிபதி ஸ்டெனோவிடம், ” அடித்து பிடுங்கிக்கொண்டான். அது அவனால் முடிந்தது.” என்றார்.

நீதிபதி 10 கேட்டார் “அவன் உன்னை அடித்தால் நீயும் அவனை எதிர்த்து அடிக்க சட்டத்திலேயே இடமிருக்கிறதே, வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக்காரனை வீட்டுக்காரன் தாக்குவதற்கு உரிமையிருப்பதை போல, நீ ஏன் எதிர்த்து அடிக்கவில்லை?”

“அடிக்க முடியவில்லையே….”

நீதிபதி 9 ஒரு விஷம புன்னகையோடு கேட்டார் “அதனால்தான் உன்னால் அடிக்க முடிந்த ருத்ரா டீச்சரை அடித்தாயோ?”

“அப்படியானால், அதுதான் இதுவென்றால், இவளை அடித்தது என் புருஷனை அடித்ததே என்றால், இதற்கு சட்ட சம்மதமே இருக்கிறதென்றால், நான் ஒத்துக்கொள்கிறேன். நான் ருத்ரா டீச்சரை via mediaவாக வைத்து என் புருஷனைத்தான் அடித்தேன். உடனே என்னை விடுதலை செய்யுங்கள், கனம் கோர்ட்டார் அவர்களே.”

கோர்ட்டில் இருந்தவர்கள் எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள். நீதிபதி முகத்தில் அசடு வழிந்தது.

தலைமை நீதிபதி கமிஷன் நீதிபதியிடம் கேட்டார் “இந்த மனிதனின் அந்த மாதிரியான நடத்தைக்கு அவனிடம் காரணம் கேட்கப்பட்டதா?”

“கேட்கப்பட்டது கனம் தலைமை நீதிபதி அவர்களே. ஆனால் அவன் சொல்வது என்னவென்றே கமிஷனால் புரிந்து கொள்ளமுடியவில்லை. கமிஷனுக்கு இன்னொரு சந்தேகம் கூட உண்டு. அவன் சொல்வது என்னவென்று அவனுக்கே தெரியுமாவென்று…”

“அப்படி என்னதான் சொல்கிறான்?”

“அவன் மேலை நாடுகளில் சமீபத்தில் உருவாகியுள்ள இரண்டொரு வாழ்வியல் மற்றும் இலக்கிய கோட்பாடுகளின் பெயர்களை சொல்கிறான். அதன்படிதான் அவன் வாழ்கிறானாம், எழுதுகிறானாம்.”

“அப்படியா?”

“அவன் தான் உழைக்க வேண்டியதில்லையென்று சொல்கிறான். தான் எதற்கும் கட்டுப்படவேண்டியதில்லை, எதையும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை என்றும் சொல்கிறான்.”

“எல்லாரும் இப்படி நினைத்துவிட்டால் நிலைமை என்னாகும்?”

“அதைப்பற்றி தான் கவலைப்படவில்லையென்றும் கமிஷனும் கவலைப்பட வேண்டமென்றும் சொல்லிவிட்டான்.”

சாந்தி டீச்சர் குறுக்கிட்டு சொன்னாள் “அவன் அப்படித்தான். எதற்கும், யாருக்கும் தான் பதில் சொல்லக் கடமைப்படவில்லை என்று சொல்லிவிடுகிறான். உதாரணமாக என்னிடமிருந்து பறிக்கும் காசிலும் எட்டணா நாணயத்திற்கு குறைவான நாணயங்கள் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அவற்றை பொறுக்கி திண்னையில் நின்று சாக்கடையில் போட்டு விடுவான். ஒரு தடவை நான் “நீயேன் இப்படி செய்கிறாய்? அது நான் தொண்டை வரள் பிள்ளைகள் முன் நின்று கத்தியதற்காக கிடைத்த கூலியல்லவா? உனக்கு எந்த வகையிலாவது அது பிடிக்காமல் போயிருந்தால் அதை என்னிடம் திருப்பிக்கொடுத்திருக்கலாமே? அதை சாக்கடையில் எறிய உனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று கேட்டதற்கு அவன் “உரிமை, கடமை , கிஸ்தி, வசூல் … யாரை கேட்கிறாய், அடி மானங்கெட்டவளே” என்று சிரித்தபடியே கட்டபொம்மன் வசனம் சொல்லிக்கொண்டே போய்விட்டான்.”

“கல்யாணத்திற்கு முன்பு உனக்கு அவனை பற்றி ஒன்றும் தெரியாதா?”

“கல்யாணத்திற்கு முன் யாருக்கு யாரை பற்றி தெரிகிறது? குறிப்பாக பெண், கல்யாணம் நடந்தால் போதுமென்றிருப்பவள். அவளுக்கு ஆராய்ச்சி செய்யவெல்லாம் திராணி ஏது? நம்பிக்கை! நம்பிக்கை! அதுதான் அப்போது அவளது சரணாலயம்.”

“ஆங். ஞாபகம் வருகிறது. எங்கள் கல்யாணத்தை ழான்பால் சார்த்தர்தான் நடத்தி வைத்தார். அவர் இவனிடம் – என்னா காம்ரேட், நீ எதுக்கும் கட்டுப்படாத ஆளாச்சே. இப்ப திருமண ஒப்பந்தத்துல கையெழுத்து போடுறியே, ஒப்பந்தம் என்றாலே கட்டுபடறதாச்சே? என்ன விஷயம் – என்று கேட்டார். இவன் எந்த பதிலும் சொல்லாம சிரிக்க மட்டும் செஞ்சான். நான் அவங்க ரெண்டு பேரும் எதோ தமாஷ் பண்ணிக்கறாங்கன்னு மட்டும்தான் நினைச்சேன். கை பிடிக்கறபோதே ஒருத்தனை எப்படி நம்பாம போறது?””ஆனா இப்ப தெரியுது. அவர் அப்படி கேட்டப்ப இவன் – அட அசடே, நீ என்ன ஒரு அறிஞன்? ஒப்பந்தத்துல கையெழுத்து போடறதால மட்டும் ஒருத்தன் அதை மீறக்கூடாதுன்னு என்னா இருக்க்னு உள்ளுக்குள்ள சிரிச்சிக்கிட்டு இருந்திருக்கான்.”

கமிஷன் நீதிபதி சொன்னார் “அவன் ஒரு கலகக்காரனாக இருக்க விரும்புபவன் போல தெரிகிறது.”

சாந்தி மீண்டும் குறுக்கிட்டாள் “இல்லை. இவன் கலகக்காரன் போல வேஷம் போடுகிறவன். இது ஒரு சுகமான வாழ்க்கைக்கு சுலபமான வழியென்று நினைக்கிறவன். அவன் தனது கஞ்சா மயக்க வாழ்க்கைக்கு நியாயங்களை தேடுகிறவன். அதற்கு ஏதேதோ தத்துவச்சாயங்க்களை பூசிக்காட்டுகிறவன்.”

கமிஷன் நீதிபதி சொன்னார் “இருக்கலாம். அவன் சொல்கிறான் – கஞ்சா குடிக்காதவன் வாழ்க்கையை பாழடித்து விட்டவனென்று.”

“எழுதுகிறான் என்று சொன்னீர்களே, எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறான்?”

“அப்படியும் அதிகமில்லை. ஒன்றோ இரண்டோதான் போலிருக்கிறது.”

“அதன் தரம் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?”

“சிலர் பாராட்டத்தான் செய்கிறார்கள்.”

“அவனது வாழ்க்கையை…..”

“அதையும் அவர்கள் சிலாகிப்பதாகவே தெரிகிறது.”

“அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? இவனை போலத்தான் அவர்களும் வாழ்க்கை நடத்துகிறார்களா?”

“இல்லை. அவர்கள் தங்கள் குடும்பம், குழந்தை குட்டிகளோடு அழகாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வீடு இருந்தால் வீட்டோடு. பங்களா இருந்தால் பங்களாவோடு. உத்தியோகம் இருந்தால் உத்தியோகத்தோடு நிம்மதியாகவே இருக்கிறார்கள்.”

“பின் ஏன் அவர்கள் இவன் வாழும் வாழ்க்கையை ஆதரிக்கிறார்கள்?”

“அது கமிஷனின் அலுவல் எல்லைக்குள் வரததால் கமிஷன் அதை விசாரிக்கவில்லை.”

“சரி, மேலே சொல்லுங்கள்.”

“அவன் கொலையை கூட ஒரளவு ஆதரிக்கிறான். எப்போதோ போகப்போகிற உயிரை ஒரு காலகட்டத்திற்கு முன்னால் விட்டுவிடுவதோ அல்லது போக்குவதோ அடாத செயல் இல்லையென்று சொல்லுகிறான்.”

“அப்படியா?” என்று வியந்த தலைமை நீதிபதி சாந்தியை பார்த்தார்.

“கமிஷன் சொல்வது உண்மைதான் நீதிபதி அவர்களே. அவன் தனது முதல் மனைவியை கூட கொலை செய்துவிட்டதாகவே என் காதுக்கும் வந்திருந்தது. இப்போதும் அவன் கண்களில் அடிக்கடி அதையே பார்க்கிறேன். அந்த முதல் மனைவியின் மரணத்தை விட என்னுடைய மரணத்தில் அவனுக்கு ஆதாயம் அதிகம். எனது மரணத்தால் உடனடியாக அரசாங்கம் அளிக்கும் அறுபதாயிரம் ரூபாய் கருணைத்தொகையும் மாதாமாதம் குடும்ப பென்ஷனும் அவனுக்கு கிடைக்கும்.”

தலைமை நீதிபதி ரொம்பத்தீவிரமாக சிந்திப்பது தெரிந்தது. “இந்த நினைப்பு உன்னை ரொம்ப வேட்டையாடுகிறதா, சாந்தி?”

“எந்த நினைப்பு?”

“அவன் உன்னை கொன்று விடலாம் என்ற நினைப்பு.”

“ஆம். ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு நிமிஷமும்.”

தலைமை நீதிபதி சொன்னார் “இப்போது நமது கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதென்று நினைக்கிறேன். இவளது மனநிலை பாதிக்கப்படுமளவுக்கு இவள் புருஷனின் நடவடிக்கைகள் நிச்சயமாக இருக்கிறது.”

சாந்தி மீண்டும் கத்தினாள். “இல்லை. இதனால் எல்லாம் என் மனநிலை பாதிக்கப்படவில்லை. நான் அதீத கோபமாய் இருக்கிறேன். அவ்வளவுதான்.”

“வெறும் கோபம் என்றால் இன்னொரு பெண்ணை நீ ஏன் அடிக்க வேண்டும்?”

“நாந்தான் சொன்னேனே, அவள் என்னை சீண்டினாள்.”

“அவள் சீண்டவில்லை. அப்படி அவளுக்கு எந்த நோக்கமும் இல்லை. அவளது கஷ்டத்தை அவள் சொன்னாள். அந்த மனுஷன் இருந்தால் நான் ஏன் இப்படி லோல் படுகிறேன் என்று ஒருத்தி சொல்வது பொதுவான எந்த அகராதி அர்த்தங்கள் படியும் நீ சொல்லும் அர்த்தமாகாது. அது நீ சொல்லும்படியெல்லாம் அர்த்தமாக வேண்டுமானால் அது ஒரு மனநிலை சரியில்லாதவரின் அகராதிப்படியாகத்தான் இருக்க முடியும்.”

“பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஒஷோ ரஜனீஷ், பெரியார் இவர்கள் அகராதிகளையெல்லாம் தூக்கி எறிந்துவிடுகிறீர்களா?”

தலைமை நீதிபதி முணுமுணுத்தார் “ஒஷோ, பெரியார், ரஸ்ஸல்…. நமது முந்தைய அனுமானங்களுக்குத்தான் சாட்சியங்கள் கூடி வருகின்றன.”

நீதிபதி 2 சொன்னார் “தவிர, இவள் ஆரம்பத்தில் சொன்ன காரணங்களும் உங்கள் முடிவுக்கு சாதகமாகவே உள்ளன. ஒரு மனிதனின் சாவு அவன் மனைவிக்கு துன்பமல்ல, அது அவளது வசதி, நஷ்டமல்ல லாபம், அவளது சந்தோஷம் ,சுதந்திரம் என்றெல்லாம் சொல்வதென்றால் அது ஒரு பிறழ்வுண்ட மனத்தின் கற்பனையாகவே இருக்க முடியும். “

“இல்லை. இது கற்பனையில்லை. நான் நிரூபிக்கிறேன். இது முக்காலும் உண்மை. நான் நிரூபிக்கத்தவறினால் என் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு நானும் விழுந்து விடுகிறேன்.”

“எப்படி நிரூபிப்பாய்?”

“நான் சொல்லும் சாட்சியங்களை கூப்பிட்டு விசாரியுங்கள்.”

“சரி, சொல்லு.”

“முதலாவதாக கோடி வீட்டுப்பொன்னம்மா.”

கோர்ட் ஊழியர் மூன்று முறை கோடி வீட்டுப்பொன்னம்மா பெயர் சொல்லிக்கத்தினார்.

கோடி வீட்டுப்பொன்னம்மா, உடம்பு இதற்கு மேல் பருத்தால் விபரீதமாகிவிடும் என்ற அளவில் இருந்தாள். தஸ்புஸ் என்று மூச்சு வாங்க வந்தவள், அந்த லட்சணத்தில் நாணிக்கோணிக்கொண்டு வேறு சாட்சி கூண்டில் ஏறினாள்.

“அய்யோ, யாருங்க அப்படி சொன்னது? அந்த மனுஷன் செத்ததுக்கு அழுதேனே அழுதேனே அப்படி அழுதேனே? சும்மா நெஞ்சுல துக்கம் இல்லாம அப்படி அழுகை வருங்களா?” என்றாள் கேட்ட கேள்விக்கு.

சாந்தி அவளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கேட்டாள். “பொன்னம்மா, உன் புருஷன் சாகறத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தே?”

“அப்படின்னா?”
“கண்ணுக்கு கீழே கருவளையம் விழுந்து என்னப்போலவே கொத்தவரங்கா வத்தலாட்டமாத்தானே இருந்தே?”
“ஆமா”
“இப்போ எப்படி இருக்கே?”

பொன்னம்மா அந்த கோர்ட் நெடுக தன் கண்களை ஒரு முறை நிதானமாக ஓட்டினாள். பிறகு சொன்னாள்”இந்த நீதிபதி 8 மாதிரி இருக்கேன்.”

குண்டு நீதிபதி என்று பெயரெடுத்த ஜஸ்டிஸ் 8 உட்பட எல்லாரும் சிரித்தார்கள்.

“புருஷனை இழந்து கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு, ஆதங்கப்பட்டு சதா புலம்பிகிட்டு இருக்கறவளுக்கு 5 வருஷத்துல எடை இப்படி கூடுமா?”

நீதிபதி 4 “அது சந்தோஷம் போட்ட எடை என்றா சொல்லுகிறாய்?” என்று கேட்டுவிட்டு நிதிபதி 8ஐ ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தார்.

“பின்ன சந்தோஷம்னா சாதாரண சந்தோஷமா?” சொல்லிவிட்டு சாந்தி தொடர்ந்தாள். “புருஷன் செத்துபோனதால் வந்த இன்ஷூரன்ஸ் தொகை வட்டிக்கு போய் போடு போடென்று வளர்கிறது – இவள் உடம்பு மாதிரியே. அவன் குடித்து அழித்த காசு மிச்சம். அடி கிடையாது.. உதை கிடையாது.. வசவு கிடையாது… அதிகாரம் கிடையாது.”

“பின் எதற்காக இவள் இப்படி சொல்கிறாள்?”
“அதை அவளிடமே கேளுங்கள்.”

கேள்வி கேட்ட நீதிபதி இப்போது அதை பொன்னம்மாவிடமே கேட்டார்.”இதென்னாங்க வெக்கக்கேடா இருக்கு. மனசுல இருக்கறதையெல்லாம் வெளியில சொல்லிட முடியுங்களா? ஊரு என்ன சொல்லுங்க? காறி துப்பிடாதுங்களா?”

“இது தோசையை திருப்பி போட பூரி வந்த கதையாக இருக்கிறது.” என்றார் நீதிபதி 5.

இரண்டாவது சாட்சியாக கொடிக்கால் ராமாயி வந்தாள். அவள் யாரையோ அடிக்க வருவது போல் கைகளை வீசி வீசி நடந்து வந்தாள். அவள் தெளிவாக நேரடியாகவே பேசினாள்.

“ஆமாங்க. சந்தோஷந்தாங்க. ரொம்ப சந்தோஷம். சந்தோஷப்படாம என்னங்க செய்யறது? ஒரு குஷ்டரோகி மனுஷனை விஷயத்தை மறைச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ஒரு அஞ்சு வருஷத்துல கைவிரலு கால் விரலெல்லாம் குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஆனா அந்த ஆளுகூடதாங்க எனக்கு எல்லாம். புரியுதுங்களா? மனுஷன் குளிக்கக்கூட மாட்டாரு. ஊத்த வாயி அதுக்கு மேல ஊத்த. என்னாப்பேச்சு! என்னா அசிங்கம்! சொறி நாயி குறுக்கால போகாது. சகிச்சு சகிச்சே என் உசுரு போச்சுங்க. இப்பதாங்க நானும் என் பசங்களும் சந்தோஷமா இருக்கோம். என்னமோ எங்களுக்கே குஷ்டம் வந்து பளிச்சுனு விலகின மாதிரி இருக்குங்க. அப்புறம் சந்தோஷமா இருக்கேன்னு சொல்லாம வேற எப்படி சொல்றது?”

சந்தான லெட்சுமி சொன்னாள் “கொஞ்சம் மன உறுத்தலாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் சங்கடமாகவுந்தான் இருக்கிறது. புருஷன் செத்து போனது குறித்து சந்தோஷப்பட்டேன் என்று சொல்வது நியாயமாக தோன்றவில்லைதான். ஆனாலும் உண்மை இந்த சாந்தி டீச்சருக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது.”

ஒரு நாள் திடுதிப்பென்று ஒருத்தியை கூட்டிக்கொண்டுவந்து நடு வீட்டில் நிறுத்திக்கொண்டு “இன்றிலிருந்து இவளும் என் பொஞ்சாதி. இங்கேதான் இருப்பாள்” என்றார். வந்த ஆத்திரத்தில், கோபதாபமான வாக்குவாதங்களின் சூட்டில் இந்த மாதிரி நான் ஒரு ஆம்பிளைய கொண்ணாந்து நிறுத்தியிருந்தா நீ சும்மாயிருப்பயானு கேட்டதுக்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா? பளார்னு ஒரு அறை.அன்றிலிருந்து என் வீட்டில் அவள்தான் வாழ்ந்து வந்தாள். 5 வருஷம்! நான் கூசிக்குறுகி, வெக்கங்கெட்டு, எப்போதாவது பத்திருவது நாள் அவள் இல்லாது போய்விடுகிறபோது அவருக்கும் ஒரு பெண் உடல் தேவையாயிருந்தால்…என்ன மானங்கெட்ட பிழைப்பு…

அவள் சம்பாதித்தாள். எனவே வீட்டிலும் அதிகார தோரணை. நான் வேலைக்காரி.

இந்த கொடுமை கனம் கோர்ட்டார் அவர்களே, தங்களை என் இடத்தில் வைத்துப்பார்த்தால்தான் புரியும். அவள் காலை 8 மணிக்கு எழுவாள். குளிப்பாள். அலங்காரம் செய்து கொண்டு சாப்பிட்டு விட்டு 9 மணிக்கு அவர் பின்னால் கேரியரில் ஏறி உட்கார்ந்துவிடுவாள். என் வயிறு எறியும். எறியாதா பின்னே?

அப்படி போகும்போதுதான் ஒரு நாள் எவனோ ஒரு லாரிக்காரன் ஒரே இடியில் இரண்டு பேரையும் தூக்கி ஒரு குழியில் போட்டுவிட்டு போய்விட்டான்.

இவள் முடிக்கும் முன்னரே நான்காவது சாட்சியான காண்டாமிருகம் கந்தசாமி சூப்பர் இம்போஸில் வந்து பேசத்தொடங்கினான்.பெரிய முரடனாக கடா மீசை வைத்துக்கொண்டிருந்த அவன் தன்னை ஒரு செத்துப்போன ஹெட் கான்ஸ்டபிள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“என்னையத்தாங்க காண்டாமிருகம் கந்தசாமினு சொல்லுவாங்க. அவ்வளவு பலசாலிங்க. கைதிகளை மட்டுமில்லைங்க பொஞ்சாதியையும் பெல்ட்டாலதாங்க அடிப்பேன். வழிக்கு கொண்டுவரணும்னா ஆம்பள என்ன பொம்பள என்ன, போக்கிரி என்ன பொண்டாட்டி என்ன? ஒரு தடவை தண்ணி வேற போட்டுட்டேனா? வீட்டுக்கு வந்து பொஞ்சாதிக்காரிய விட்டேன் ஒரு ஒதை. அப்படியே அந்தரத்துல ஆறடி தூரம் போய்ட்டு வந்தா.” சொல்லிவிட்டு சிரித்தான்.

“அதுக்காவ தலையில கிருஷ்ணாயில ஊத்திகிட்டு நெருப்பு வச்சுக்குவேன்னு பயமுறுத்தினா. வச்சுக்கடின்னு சொல்லிட்டேன். எங்கிட்டயே பூச்சாண்டி காட்டினா நடக்குமா? பேசாம கொல்லையில போயி ஒரு மணி நேரம் உக்கார்ந்து இருந்துட்டு எவளோ போயி சமாதானம் சொன்னான்னு வீட்டுக்குள்ள வந்துட்டா. வ….லக்கிடி.”

ஆனா பாருங்க, என்ன இருந்தாலும் நான் புருஷன் இல்லியா? ஒரு கலவரத்த அடக்கப்போன இடத்துல நான் கல்லடி பட்டு செத்து போயிட்டேன். அதுக்கு வீரபதக்கமும் பணமும் தராங்க. அதை தந்த அந்த அதிகாரி மூஞ்சில கூட கொஞ்சம் வருத்தம் இருந்துச்சுங்க. ஆனா இவ போயி, அதாங்க என் பொஞ்சாதி, சர்வ சாதாரணமா கெடச்ச வரையிலும் ஆதாயம்னு வாங்கிட்டு சிரிக்காத கொறயா வர்றா. இப்ப பென்ஷன் கணக்குல என்னமோ தப்புனு கோர்ட்டுக்கு பொயிருக்காளாம். எப்படிங்க பொம்பளை நியாயம்?”

சாந்தி அவனை குறுக்கு விசாரணை செய்தாள்.
“காண்டாமிருகம் கந்தசாமி…”
“என்னா?”
“என்னா இந்த பொம்பள நியாயத்துல அநியாயம்?”
“பணம் வாங்க வந்தப்ப பொம்பள முக்காடு போட்டுகிட்டு குமுறி குமுறி அழுதிருக்க வேணாமா?”
“எதுக்கு?”
“எதுக்குன்னா? இதென்ன கேள்வி?”
“நீ பெல்ட்டால அடிச்சயே அதுக்கா?”
காண்டாமிருகம் கந்தசாமி விழித்தான்.
“அவ அந்தரத்துல ஆறடி போய்ட்டு வந்து விழற மாதிரி உதைச்சயே அதுக்கா?”
காண்டாமிருகம் கந்தசாமி பேந்த பேந்த விழித்தான்.
“அவ நெருப்பு வச்சுக்க போனப்ப வச்சுக்கன்னு சொன்னியே அதுக்கா?”
“இல்ல, அவளுக்கு நாந்தானே தாலி கட்டுனேன். அதுக்காக….”
“அதுதான் அந்த தாலிய நீ செத்துட்டேன்னு அறுத்தாச்சே?”
காண்டாமிருகம் கந்தசாமி பேந்த பேந்த விழித்தான்.
ஐந்தாவதும் கடைசியுமான சாட்சி ஜோதி, வரும்போதே சிரித்துக்கொண்டே வந்தாள். “பேருங்களா? ஜோதி.” சிரித்தாள்.
“வயசுங்களா? இருவத்தாறு. ” சிரித்தாள்.
“ஆமாங்க ,செத்துட்டாரு.” சிரித்தாள்.
“ஆமாங்க. வீட்ட விட்டு போறப்ப என்ன வீட்டுக்குள்ள வச்சி பூட்டிட்டுதாங்க போவாரு. ஆனா சாவிய என்கிட்டத்தான் கொடுத்துட்டு போவாரு.” சிரித்தாள்.
நீதிபதி 5 அவள் எதற்காக இப்படி தொட்டதற்கெல்லாம் சிரிக்கிறாள் என்று கேட்டதற்கும் சிரித்தாள்.
“ஆமாங்க, இதென்னமோ ஒரு சீக்கு போலிருக்குஙக. முன்னயெல்லாம் இப்படி இல்லைங்க. அவரு இருக்கறப்ப யாரும் நான் சிரிச்சே பாத்திருக்க மாட்டாங்க.” சிரித்தாள்.
சாந்தி கேட்டாள், “சாட்சியங்கள் போதுமா கோர்ட்டார் அவர்களே?”
“போதும். போதும்.” என்ற தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகளை பார்த்து “இனி நாம் கலந்தாலோசிக்கலாம்.” என்றார்.
அவர்கள் ஒரு மாய நொடியில் கலைந்து வட்டமாய் உட்கார்ந்தார்கள்.காற்று கொஞ்சம் உரத்து வீச ஆரம்பித்தது.
தலைமை நீதிபதி: இங்கே குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சாந்தி டீச்சர், ஒரு தேவையில்லாத முரண்பாட்டிற்குள் தன்னைத் தானே திணித்துக்கொண்டிருப்பது தெரிகிறது. அது நல்ல கோடைக்காலத்தில் குளிர் காலத்துக் கம்பளி ஆடையை தேர்ந்தெடுத்துவிடுபவரை நமக்கு நினைவூட்டுகிறது.
நீதிபதி 12: அல்லது நல்ல குளிர் காலத்தில்….
த.நீ: அதுவும் ஒரு நல்ல உதாரணம்தான். அது இருக்கட்டும். இவர் ஒரளவு நல்ல படிப்பாளியென்றும் தெரிகிறது. ஆனால் அந்த படிப்பே அவரை மேற்படி கம்பளி ஆடைகளை தேர்ந்தெடுக்க வைத்திருப்பது அவரது துரதிர்ஷ்டம். நிதர்ஸனத்தை அவர் உணரவேயில்லை.
சாந்தி: நிதர்ஸனம் என்றால்?
த.நீ: நிதர்ஸனம் என்றால் உண்மை, உண்மை நிலை. மரபு, மரபு சார்ந்தது… மரபு சார்ந்த சட்டம் சார்ந்தது. சட்டம் அனுமதிப்பது.
சாந்தி: மரபு மரபென்றால் எதையுமே புதிதாக சிந்திக்க மாட்டீர்களா?
த.நீ: இல்லை. தேவையில்லை. எல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன.
சாந்தி: சரி, உங்கள் மரபு, அலையாஸ் சட்டம் அலையாஸ் நிதர்சனம் என்னை பற்றி என்ன கூறுகிறது?
த.நீ: ரோமார்களின் நாட்டில் ரோமானிய சட்டங்கள்தான் இருக்க முடியும். அது போல இங்கு ஆணாதிக்கச் சட்டங்கள்தான் இருக்க முடியும். எந்தச்சட்டமாயிருந்தாலும் அமுலிலிருக்கும் சட்டங்களுக்கு பிரஜைகள் கட்டுப்பட வேண்டியவர்கள். அப்படிக் கட்டுப்பட்டு, பணிந்து நடப்பதுதான் ஒரு நல்ல பிரஜையின் ஆரோக்கியமான மனநிலையாக இருக்க முடியும்.
சாந்தி: ஆரோக்கியம் என்றால்?
நீ.8: எது ஆரோக்கியமற்றதோ அதற்கு எதிர் நிலை.
நீ.11: அதாவது நோயற்ற நிலை.
சாந்தி: நீங்கள் திடீரென்று வடதுருவத்தில் எஸ்கிமோக்களோடு விடப்படுகிறீர்கள். குளிரால் நடுங்கி செத்துப்போகிறீர்கள். அப்போது நீங்கள் நோயாளியா?
நீ.11: அந்த சூழலுக்கு தகுதியில்லாத நான் அங்கு போயிருக்கக்கூடாதில்லையா?
சாந்தி: நீங்கள் அங்கு தூக்கியெறியப்பட்டிருந்தால்?
த.நீ: அப்படியானால் நீ இந்த சமுதாயத்துக்குள் தூக்கியெறியப்பட்டிருப்பதாக சொல்கிறாயா?
சாந்தி: அதே, அதே.
த.நீ: இது உண்மையாக இருக்க முடியாது. கோடானு கோடி பெண்கள் இதை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதன் நிழலில் மிகப்பிரியமான- பவித்திரமான வாழக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சாந்தி: இங்கு சாட்சி சொன்ன பெண்கள் முன்பு மாங்கல்யம் தரித்துக்கொண்டு வாழ்ந்ததை போல, இல்லையா?
நீ.7: இல்லை. இவர்கள் வழிதவறிய ஆடுகள். இந்த ஆணாதிக்க சமுதாயம் உண்மையில் ஆண்களுக்காக அமைக்கப்படவில்லை. பரிபூரணமாக பெண்களின் நலனுக்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் போய்விட்டவர்கள்.

சாந்தி கபகபவென்று சிரித்தாள்.”ரொம்ப அருமையான கண்டுபிடிப்பு. எங்கே கண்டுபிடித்தீர்கள்?”

“கண்டுபிடிப்பல்ல. ஏற்கனவே சொல்லப்பட்டவைகள். மதித்து படித்தால் தானாகவே தெரியும்.”

“ஏற்கனவே சொல்லப்பட்ட இவைகளை மதித்துவிட்டு படிக்க தொடங்குவதா இல்லை படித்துவிட்டு மதிக்கத்தொடங்குவதா?”

நீதிபதி 8 ரொம்ப ரோஷமாக சொன்னார், “கும்பிட்டு விட்டுத்தான் படிக்க வேண்டும்.”

“ஒன்றை அது என்னவென்றே அறியாமல் எப்படி கும்பிட முடியும்?”
“முடியும். நம்பு….முடியும்.”
“அதாவது ஏற்கனவே சொல்லப்பட்டவைகள் அவைகளை பற்றியே அப்படித்தான் சொல்கின்றன போலும்.”
“ஆமாம்.”

“ஆனால் அவை ஆளுமை மிக்கவை என்றால் இப்படியல்லவா சொல்லியிருக்க வேண்டும்? அதாவது – நீ என்னை மதிக்க வேண்டாம். நம்ப வேண்டாம். வெறுப்பை வேண்டுமானாலும் வளர்த்துக்கொள். ஆனால் படி. படித்த பிறகும், நம்பாத, மதிக்காத, வெறுப்புக்கொண்ட உன்னாலும் எங்களை தவிர்க்க முடிகிறதா என்று பார்த்துவிடுவோமென்று…”

நீதிபதி 8 மேலும் உக்கிரமானார். “இது ஒன்றும் உன் புருஷன் மாதிரி ஆட்கள் எழுதுகிற புத்தகங்கள் அல்ல. படித்துவிட்டு பிடித்தால் சந்தோஷப்படவும் பிடிக்காவிட்டால் தூக்கியெறிந்துவிட்டு போகவும்.”

“அதாவது சாந்தி டீச்சர் வகையறாக்களும் வாலையறுத்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறீர்கள்?”

வெளியே எங்கிருந்தோ யாரோ முன்பு சாந்தி சிரித்ததைப்போலவே சிரித்தார்கள்.

தலைமை நீதிபதி, நீதிபதி 8ஐ அதட்டினார். “இதென்ன, இந்த பெண்ணோடு போய் சரிக்கு சரி வாதம் ஜஸ்டிஸ் 8. யாரோடு யார் வாதாடுவது என்ற கணக்கு இருக்கிறது. குறைந்தது இந்தப்பொன்மொழியாவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் – முட்டாளோடு வாதிடாதே. வாதாடினால் பார்ப்பவர்களுக்கு அவன் முட்டாளா, நீ முட்டாளா என்று தெரியாது என்று சொல்லும் அது.”

சாந்தி சட்டென்று “தேங்யு, மை லார்ட். இனி நான் உங்கள் யாரோடும் வாதாட மாட்டேன்.” என்று சொல்ல, நீதிமன்றத்தில் நீதிபதிகள் அல்லாத எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

தலைமை நீதிபதி, நீதிபதி 8ஐ பார்த்து “பார்த்தீர்களா? பொன்மொழி சொன்னது சரியாக போய்விட்டதல்லவா?” என்று கோபத்துடன் கூற, பின்னவர் மயக்கம் போட்டு சரிந்தார்.

காற்று மிக பலமாக வீசியது. நீதிபதிகளின் ஆடைகள் படபடத்தன. ஒரிருவரின் விக்குகள் பறந்தன.

தலைமை நீதிபதி எழுந்து அவசரத்தோடும், படபடப்போடும் தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார்.”வாதங்கள் ஆலோசனைகள் எல்லாவற்றிற்கும் பிறகு இந்த கோர்ட்டின் தீர்ப்பை அளிக்கிறேன்.

குற்றம் சாட்டப்பட்டவர் பற்றி ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கோடைக்காலத்து கம்பளி ஆடை உதாரணத்திற்கு மேல் மாற்றமோ முன்னேற்றமோ எதுவும் இல்லை. தவறான தேர்வுக்காக நாம் அவர் மேல் அனுதாபப்படலாம். ஆனால் சட்டத்திற்கும் அனுதாபத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? வேண்டுமானால் அனுதாபத்தோடு தீர்ப்பளிக்கலாம். அவ்வளவுதான்.
ஆகவே குற்றவாளி சாந்தி டீச்சர், ருத்ரா டீச்சர் தலைமுடியை பிடித்து ஆட்டி கீழே தள்ளி மிதித்த குற்றத்திற்காக 12 மாத கடுங்காவல் தண்டனையும் 13 கசையடிகளும் கொடுக்க தீர்ப்பளிக்கிறேன்.”

தீர்ப்பை கேட்ட சாந்தி சண்டாளமானாள்.சாட்சி கூண்டின் முன் கட்டையை பிய்த்து தலைமை நீதிபதி மேல் எறிந்தாள். கோர்ட் அங்குமிங்கும் கலைந்தோடியது. ஒரே கலவரம். அவள் வலது பக்கக் கட்டைகள், இடது பக்கக் கட்டைகள் எல்லாவற்றையும் பிய்த்து எறிய ஆரம்பித்தாள்.

ஓய்வறைக்கு வெளியே இருந்தவர்கள் கலவரமானார்கள்.

“அய்யய்யோ முத்திப்போச்சு போலிருக்கே. கையில கெடச்சத எடுத்து வீசுது.” என்று கத்தினார் ஒருவர்.

“அட, என்னய்யா இது? லேடீஸ் டீச்சர்ஸை கூப்பிட்டு கைய கால கட்டுங்கப்பா” என்றார் கருப்பையா ஆசிரியர்.

“லேடீஸ் டீச்சர்ஸ் ரெண்டு பேர் வாங்க” யாரோ ஒருவர் குரல் கொடுத்தார்.

கதவை திறந்து அந்த முயற்சியிலீடுபட்ட அந்த பெண் ஆசிரியர்களால் அது முடியாமல் போகவே ஆண்களும் உதவி செய்ய வேண்டியதாயிருந்தது.

“வீட்டுக்கு சொல்லிவிட்டமே, என்னப்பா ஆச்சு?”

“தெரியலையே, போனவனக்கூட இன்னும் காணமே..”

“இந்தா இருக்கானே. ஏய், போய்ட்டு வந்துட்டு ஏன் சும்மா நிக்கறே? என்னா ஆச்சு? வீட்டுல யாராச்சும் ஆள் இருக்காங்களா இல்லையா?”

“இல்ல சார், வந்து…”

“என்னா, சொல்லுய்யா?”

“இன்னொரு மோசமான செய்தி சார், இவங்க வீட்டுக்காரர் பத்து மணிவாக்குல லாரியில அடிபட்டு செத்து போயிட்டாராம். பிள்ளைங்க எல்லாம் அங்கதான் ஓடியிருக்காங்க.”

சாந்தி செய்தி சொன்னவனை திரும்பி பார்த்தாள். அவளுக்கு கணவன் இறந்த செய்தி உரைக்கும் முன்பாக, தெளிவாக, தான் இந்த ருத்ராவை அடித்திருக்க வேண்டாமே என்று தோன்றியது.

அதற்கு பிறகு அவளை பலவந்தமாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் தேவையெல்லாம் இருக்கவில்லை.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in படித்ததில் பிடித்தது and tagged , , , . Bookmark the permalink.

18 Responses to படித்ததில் பிடித்தது (1)

 1. அபி அப்பா says:

  நெறய படிக்கறீங்க! ந’மக்கு’ தான் ஆணி அதிகமா போயிடுச்சு.ஹம்.. என்ன செய்ய:-))

 2. லக்ஷ்மி says:

  வாங்க, அபி அப்பா.. முத போணி நீங்கதான். ரொம்ப டேங்ஸ்….

 3. நொந்தகுமாரன் says:

  நெறய படிக்கறீங்க! – சொல்றீங்க அபி அப்பா!நெறய அடிக்கிறீங்கா சொல்லுங்க!குட்டிக்கதைகள் வருகிற காலம். இப்ப போய், அதுவும் வலைப்பூவில் சிறுகதை எல்லாம் போட்டுகிட்டு!எப்படி அபி அப்பா! படிக்காமலே, எப்பவும் கருத்து சொல்லிட்டுகிட்டே இருக்கீங்க!

 4. காளி says:

  கதை பிரமாதம்…உங்கள் சிரத்தைக்கு பாராட்டுக்கள்….கதை டைட்டில் என்ன ஆகஸட்டா?//“என்ன, ஒரு புருஷனின் மரணம் ஒரு மனைவியின் வசதி, லாபம் , சந்தோஷமா?”“இன்னும் கூட ஒன்று உண்டு, கட்டை விரல் மாதிரி.”//இநத “கட்டை விரல்” உவமை பற்றி யோசித்தீர்களா? எனக்கு என்னமோ அது இந்த கதையில் தப்பா இருக்குன்னு தோணுது..உங்க கருத்து என்ன?

 5. கதிரவன் says:

  ஜெயந்தனின் கதை அறிமுகத்திற்கு நன்றி லக்ஷ்மி. நானும் முதலில் பார்த்தவுடன் ‘ஜெயகாந்தன்’ பற்றித்தான் எழுதியிருக்கீங்கன்னு நினைச்சிட்டேன்இவ்ளோ பெரிய கதையை சிரம மேற்கொண்டு பதித்ததற்கு நன்றி

 6. நந்தா says:

  கொஞ்சம் பெரிய்ய்ய கதைதான். ஆனால் படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது. இந்த புத்தகத்தை முழுதாக படித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது.இவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், இவரது புத்தகங்களை இது வரை படித்ததில்லை. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.இவ்ளோவ் பெரிய்ய கதையை சலிக்காம உக்காந்து டைப் பண்ணதுக்கே தனியா பாராட்டணும்.சரி அடுத்த தொல்லையை எப்போ தரப் போறீங்க. அதாங்க அடுத்த பார்ட்? ரொம்ப வெய்ட் பண்ண வெக்காதீங்க.

 7. லக்ஷ்மி says:

  நொந்த குமாரன் ஸார், குட்டி கதைகள் போடற விகடனே கூட நார்மல் சிறுகதைகள் போடறதை நிறுத்திடல. ஹைக்கூ வந்ததால சாதாரண கவிதைகள் தேவையில்லாம போயிட்டதா அர்த்தமில்லை. அதே போல இது ஒரு வகை. அது ஒரு வகை. அவ்ளோதான். அப்புறம் அபி அப்பாவை இப்படியெல்லாம் இன்ஸல்ட் பண்ணாதீங்க, அப்புறம் பாப்பாக்கு கோபம் வந்துட போகுது. ஜாக்கிரதை.காளி, வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. ஆமாங்க, டைட்டில் ‘ஆகஸ்ட்’தான். கட்டை விரல் – அது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் இல்லையா? கைய பயன்படுத்தும்போது கட்டை விரலை நீக்கிட்டு எதுவுமே செய்ய முடியாது, கவனிச்சிருக்கீங்களா? அதுபோல இது தவிர்க்க முடியாத உண்மைங்கறதை சொல்ல வரார் ஆசிரியர் அப்படின்றது என்னோட புரிதல். தவறெனில் நண்பர்கள் யாரேனும் திருத்தவும்.கதிரவன், நந்தா – வருகைக்கும் கருத்துக்கும்.//இந்த புத்தகத்தை முழுதாக படித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது.// – இரண்டு நாட்கள் தொடர்ந்து after office hoursla உட்கார்ந்து டைப் பண்ணின அலுப்பெல்லாம் பறந்து போச்சு நந்தா.

 8. பாலராஜன்கீதா says:

  சிறப்பான சிறுகதை ஒன்றினைப் பொறுமையாகத் தட்டச்சியது பொறாமையாக இருக்கிறது. பாராட்டுகள்.

 9. லக்ஷ்மி says:

  நன்றி பாலராஜன் கீதா.

 10. பொன்ஸ்~~Poorna says:

  கதை படித்து முடிக்கும் வரை கூட இது ஜெயகாந்தன் கதை தான் என்று நினைத்தேன். மீண்டும் ஆரம்பப் பகுதியைப் படித்துத் தெளிந்தேன்..நல்ல கதை..

 11. லக்ஷ்மி says:

  நன்றி பொன்ஸ்.

 12. ஜெயஸ்ரீ says:

  பொறுமையாக தட்டச்சி, நல்லதொரு கதையைப் படிக்கத் தந்ததற்கு நன்றி லக்ஷ்மி.

 13. நொந்தகுமாரன் says:

  //அப்புறம் அபி அப்பாவை இப்படியெல்லாம் இன்ஸல்ட் பண்ணாதீங்க, அப்புறம் பாப்பாக்கு கோபம் வந்துட போகுது. ஜாக்கிரதை//நான் என்ன சொல்லிட்டேன். இன்சல்ட் வார்த்தையெல்லாம் பெரிய வார்த்தை.ஒரு நாள் ஆயிருச்சு. படிச்சுட்டு, இன்னும் கூட கருத்து சொல்லல!கனிமொழி விசயத்திலும், என்ன ஆச்சு! முத்துகுமரனிடம் கதைப்பதாக சொன்னார். பேசிய விசயத்தை, எங்களுக்கும் சொல்லுங்கன்னு அன்பா சொன்னீங்க! அப்பவும் சொல்லல! இப்பவும் சொல்லல!அபிக்கு செல்லம் கொடுக்கலாம். அது சின்னப்பிள்ளை. அபி அப்பாவுக்கு செல்லம் கொடுக்காதீங்க மேடம். பிறகு, கடைசி வரைக்கும், ஆணி புடுங்கிகிட்டே வீணா போயிருவாரு!

 14. லக்ஷ்மி says:

  நன்றி ஜெயஸ்ரீ. அபி அப்பா, நொந்த குமாரன் இங்க உங்களை ரொம்பவே வம்பிழுக்கறார். சீக்கிரமா வந்து பதில் சொல்லுங்க. நீங்க கொடுக்கற கேப்பை பாத்தா, ஆனாலும் கொடுக்கற காசுக்கு கொஞ்சம் அதிகமாவே ஆணி புடுங்கறா மாதிரி தெரியுதே…..

 15. குருத்து says:

  இரண்டு நாளா முயற்சிக்கிறேன். முடியவில்லை. எப்படித்தான் அடித்தீர்களோ? அலுவலக வேலையோடு, படித்தால் தான் உண்டு. அலுவல்கள் முடிந்துவிட்டால், எல்லோருடனும் நாமும் வெளியேறி விட வேண்டியது தான்.நெல்லை ஜெயந்தன் என்று ஒருவர் இருக்கிறாரே! அவரா இவர்?

 16. Deepak Vasudevan says:

  சற்றே பெரிய கதைதான். ஆனால் நன்றாக உள்ளது. லக்ஷ்மி: உங்கள் பொறுமையான தட்டச்சு மற்றும் தமிழ் வலைப்பூ திறமை அனைவரையும் நிச்சயம் வியப்பில் ஆழ்த்த தவறாது.

 17. லக்ஷ்மி says:

  நன்றி சாக்ரடீஸ், தீபக். தீபக், உங்கள் லேபில் குறித்தான சந்தேகத்துக்கான விடையை தனி மடலில் உங்கள் Rediff idக்கு அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.

 18. லக்ஷ்மி says:

  சாக்ரடீஸ், இவர் மதுரைக்காரர் என நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை. எழுத்தாளர்களுக்கான பயிற்சி பட்டறைகள் சிலவும் நடத்தியவர். மேலதிக தகவல்கள் தெரியவில்லை. வேறு யாரேனும் தெரிந்தவர்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ளலாமே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s