படித்ததில் பிடித்தது (3)


புத்தகம் – அ’னா ஆவன்னா
வகை – கவிதை தொகுப்பு
ஆசிரியர் – நா. முத்துக்குமார்
பதிப்பகம் – உயிர்மை
முதல் பதிப்பு – டிசம்பர், 2005

94 கவிதைகளை கொண்ட இந்த தொகுப்பு நூல் அளவில் சிறியது. அதன் பின்னட்டையிலிருக்கும் பதிப்புரை.

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும் சம்பவமும் ஒரு படம் போல நம்முடன் தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ என்று திகைக்க வைக்கும் அளவுக்கு நா. முத்துக்குமார் இக்கவிதைகளில் அன்றாட வாழ்வின் உயிர்த்துடிப்புள்ள சித்திரங்களை உருவாக்குகிறார். குமுதத்தில் தொடராக வெளிவந்து இப்போது நூல் வடிவம் பெறுகிறது.

கொடுமையடா சாமி. நான் மட்டும் முதலில் புத்தகத்தின் பின்னட்டையை படித்துப் பாத்திருந்தால் நிச்சயம் உள்ளே கூட படித்திருப்பேனா என்பது சந்தேகம்தான். நல்ல வேளை, நான் புத்தகத்தை புரட்டி நடுவில் கைக்கு அகப்பட்ட கவிதைகளை படித்தேனோ, பிழைத்தேனோ.

அவரது கவிதைகள் புரியாத வார்த்தை அடுக்குகளில் தெரியாத இசங்களை நுழைத்து நம்மை பயமுறுத்தாமல் சகஜமாய் ‘அட நாம கூட இப்படி யோசிச்சிருக்கோம் இல்ல’ என்று நினைக்க வைக்கிறது. நண்பர்களின் தங்கைகளை பற்றியோ இல்லை நம் தெருக்கோடியிலிருந்த தட்டச்சு பயிலகத்தை பற்றியோ இல்லை பெரிய உணவகங்களில் கை நீட்டினால் தண்ணீர் வரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் குழாய்களை பற்றியோ அவர் சொல்லும் போது நம்மால் அதை அப்படியே உள்வாங்கிக்கொள்ள முடிகிறது – வெகு நாட்களுக்கு பின் சந்திக்கும் நண்பனிடம் பேசுவது போல அந்நியோன்னியமாக இருப்பதுதான் இந்த கவிதைகளின் தனிச்சிறப்பு. இதற்கு பெரிய பதவுரை பொழிப்புரையெல்லாம் தேவையேயில்லை. சில கவிதைகளை இங்கே தருகிறேன். ஏற்கனவே நன்கறியப்பட்ட பத்திரிக்கை ஒன்றில் வெளியானவை என்பதால் உங்களுக்கு பரிச்சயமானதாகவே இருக்கக்கூடும்.

மதுரை ஸ்ரீமுனியான்டி விலாஸ்(ஒரிஜினல்)

எட்டாம் வகுப்பில்
அறிவியல் எடுத்த
கே.எஸ்.கே வாத்தியார்
எங்களை முன்வைத்து
தமிழ்ப் பேரகராதிக்கு
இரண்டு பெயர்ச் சொற்களை
தானமாக கொடுத்திருந்தார்.
சாதுவான பையன்களென்றால்
‘ஆரிய பவன்.’
சட்டாம்பிள்ளைகளுக்கு
‘முனியான்டி விலாஸ்.’

காலத்தின் சதுரங்க பலகையில்
முனியான்டி விலாஸும் நானும்
ஆடும் ஆட்டத்தில்
இரண்டே இரண்டு
நேர் எதிர்ப் புள்ளிகளில்
எப்போதும் சந்தித்துக் கொள்வோம்.

திசையைத் தொலைத்த
திசையிலிருந்து
சதுரமான தட்டுடன்
எதிர்ப்படும் சர்வர்கள்.
அந்தப் பெருந்தட்டில்
வட்ட வட்டக் குறுந்தட்டுக்கள்
என் இருப்புக்குச் சவால் விடும்.
நண்டு, காடை, கோழி, ஆடு,
மீன், எறா, சுறா,
மூளை, குடல், ஈரல்
எல்லாவற்றையும் விலை கேட்டுவிட்டு
தட்டுக்கு தகுதியற்ற’
சிங்கிள் ஆம்லெட்’ என்பேன்.
புறக்கணிப்பின் பெரும் வலியை
எனக்களித்து
உள்ளே செல்வார்கள்.

இரண்டு:
கைநிறைய காசுடன்
வேண்டியதை வரவழைத்து
சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
என் எதிரில் யாரோ ஒருத்தர்
கசங்கிய சட்டையுடன்
‘மீன் குழம்பாவது கிடைக்குமா?’
எனக் கேட்டு
நிறம் மங்கியபீட்ரூட் பொறியலையும்,
நீர்த்துப் போன கீரையையும்,
என் குற்றவுணர்ச்சியையும்
கலந்து பிசைந்து கொண்டிருப்பார்.

பெருந்தட்டுக்கள் மறைந்து
விலைப்பட்டியல் அட்டையை
நீட்டும்துரித உணவகங்கள்
பெருகிவிட்ட இன்றும்
முனியான்டி விலாஸ்களுக்கே
மனம் விரும்பிச் செல்கிறது.
உணவின் ருசிஉணவில் இருப்பதில்லை.
புறக்கணிப்பின் கசப்பிலும்
குற்றவுணர்ச்சியின் காரத்திலும்
அது ஒளிந்திருக்கிறது.

கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய் என்கிற கவிதையில் ஒரு பெரிய உணவகத்திலிருக்கும் அந்த குழாய் முன் வந்து போகும் பலரை விவரிக்கிறார் – அம்மாவோடு வந்திருக்கும் ஒரு சிறுவன், கணவனோடு வந்திருக்கும் ஒரு புதுப்பெண், மாநாட்டிற்கு லாரியில் வந்து நகரை சுற்றிப் பார்க்கும் விவசாயி என்று பலர் வந்து அந்த குழாய் முன் நின்று விட்டுப் போகிறார்கள். அந்த சிறுவனும் புதுப்பெண்ணும் அந்த நகரின் ஒரு புதுமையை அறிந்த பெருமிதத்தோடு செல்கையில் அந்த விவசாயியை பற்றி மட்டும் இப்படி சொல்கிறார்.

அந்த விவசாயி
மதிய வெயிலில் மிதந்து செல்லும்
மேகங்களை நோக்கி
கையை நீட்டி நீட்டி
“தண்ணீர் வருமா? ” என்று
சோதித்துப் பார்க்கிறார்.

அடர்ந்த புகையைப் போல்
அந்த மேகங்கள்
கலைந்து காணாமல் போகின்றன.

எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் நகர வாழ்வின் போலிப் பெருமிதங்கள் ஒரு கிராமவாசியின் ஆதார ஏக்கங்களை தூண்டி விடுவதை படிக்கும் போது மனதின் ஒரு ஓரத்தில் எழும் வலிதான் கவிஞனின் வெற்றி. அதற்கு அதிரடிக்கும் வார்த்தைகள் தேவையில்லை. மனித மனங்களின் மென் உணர்வுகள் புரிய வேண்டும். முத்துக்குமார் அதை புரிந்து தன் கவிதைகளில் பதித்தும் வைக்கிறார்.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in படித்ததில் பிடித்தது and tagged , , , . Bookmark the permalink.

7 Responses to படித்ததில் பிடித்தது (3)

  1. நந்தா says:

    மறக்க முடியாத புத்தகம். நானும் இதே போன்று முதல் கவிதையான “நண்பர்களின் தங்கைகள்” கவிதையைப் படித்தேன். கண்ணை மூடிக்கொண்டு வாங்கி வந்து விட்டேன்.இந்த ஒரு கவிதையே எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் பல. தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும் இதன் வரிகளைச் சொல்லுவேன்.“பின்பொரு நாள்பார்த்துக் கொண்டிருக்கையில்சட்டென்று வளர்ந்து சாப்பாட்டு இலைகள் நோக்கிஉடைந்து எண்ணெய் வழியும் அப்பளங்கள்கூடைகளில் பயணிக்கும்ஒரு கல்யாண மண்டபத்தில்தாலி கட்டிக்கொண்டுகண்கலங்கி விடைபெறுகிறார்கள்.நண்பர்களின் தங்கைகள் இல்லாத நண்பர்களின் வீடுமுற்றத்தில் பறிக்காமல்உதிர்ந்து கிடக்கும் பவழ மல்லியுடனும்,பயணிகள் இறங்கிவிட்டரயில்பெட்டியின் வெறுமையுடனும்,நூற்றாண்டுகள் கடந்த மலைக்குகையின் மௌனத்துடனும்,நம் முன் நிற்கிறது”அன்பான தங்கை இருக்கிற எவருக்குமே இதைப் படித்தவுடன் மனதில் ஒரு வெறுமை படரும். இனம் தெரியா ஒரு சோகம் வந்து கவ்வும்.ஃபீல் பண்ண வெச்சுடீங்களே லக்ஷ்மி……..

  2. Boston Bala says:

    அறிமுகத்திற்கு நன்றி

  3. லக்ஷ்மி says:

    நன்றி பாலா. வாங்க நந்தா, feel பண்ண வச்சது நானில்லைங்க – முத்துகுமார். 🙂 நீங்க சொன்ன கவிதை உட்பட நிறைய நெகிழ்வான கவிதைகளை உள்ளடக்கின தொகுப்புதான் இது. எல்லாத்தையும் போட நேரமும் தட்டச்சறதுக்கு பொறுமையும் மிஸ்ஸிங். அதான் ரெண்டோட நிப்பாட்டிக்கிட்டேன்.

  4. செல்வமுத்துகுமரன் says:

    இந்த சினிமா பாட்டெல்லாம் எழுதுவாரே, அவரா இவரு? ஏனுங்க, உங்களுக்கு வேற கவுஜரே கிடைக்கலயா?

  5. லக்ஷ்மி says:

    ஏங்க, சினிமா கவிஞர்கள் என்ன தீண்டத்தகாதவர்களா? அவரோட கவிதைய படிச்சுட்டு குற்றம் குறை சொன்னால் பிரயோசனம் உண்டு. அதைவிட்டு அவர் தொழில் காரணமாவே அவரை மட்டந்தட்டுதல் சரியாக படவில்லை.

  6. stalin says:

    vanakkam lakshmi and nandha.ana aavanna book enga kidaikkum? please send me d address at varna1977@gmail.com.thanks.

  7. stalin says:

    vanakkam. from stalin.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s