படித்ததில் பிடித்தது (8)


புத்தகம் – மூன்று விரல்
ஆசிரியர் – இரா. முருகன்
பதிப்பகம் – கிழக்குப் பதிப்பகம்
முதல் பதிப்பு – ஆகஸ்ட், 2005

பொதுவாகவே எனக்கு இரா.முருகனின் எழுத்தில் விரவி நிற்கும் மெல்லிய அங்கதம் பிடிக்கும். அது அரசூர் வம்சம் நாவலானாலும் சரி, வாரபலன், எடின்பரோ குறிப்புகள் போன்ற பத்திகள் ஆனாலும் சரி அடிநாதமாக இந்த மெல்லிய நகைச்சுவை இழையோடும். அதிலும் குறிப்பாக இந்த நாவல் ரொம்ப பிடித்துப் போனதன் காரணம் நாவல் முழுக்க முழுக்க பொட்டி தட்டுதல்/ஆணி பிடுங்குதல் என்றெல்லாம் தமிழ் வலையுலகால் செல்லமாய் நாமகரணம் செய்யப் பட்டிருக்கும் மென்பொருள் துறையில் இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றியது என்பதுதான். ரமணாவில் விஜயகாந்த் விண்டோஸ் மீடியா ப்ளேயரை திரையில் ஒடவிட்டு ஸ்கீரினைப் பார்த்துக் கொண்டே கீ போர்டில் மாய்ந்து மாய்ந்து டைப் செய்வார் – அதுவும் இதை ட்ராலி வைத்துச் சுற்றிச் சுற்றி வேறு காட்டுவார்கள். இந்தக் காட்சியைப் பார்த்து நாம் சிரிக்கக் கூட முடியாது வீட்டில் உட்கார்ந்து – ஏனென்றால் சுற்றியிருப்பவர்கள் ஒரு சீரியஸ் காட்சியில் திடீரென்று சிரிக்கும் தன் பெண்ணின் சித்த சுவாதீனத்தின் மீதே அவநம்பிக்கை கொண்டு விடக்கூடும்.

வெளியிலிருந்து பார்க்கும் ஆட்களுக்கு மென்பொருள் ஆசாமிகளைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிம்பம் அவ்வளவுக்கு நிஜத்திலிருந்து வேறுபட்டது. அதை இந்த நாவல் கொஞ்சமேனும் மாற்றும் என்று எண்ணுகிறேன். இரா.மு மென்பொருள் துறையிலும் சரி இலக்கியத் துறையிலும் சரி செறிந்த அனுபவமுடையவர். முன்னுரையில் அவர் இந்த நாவல் எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்குகிறார்.

மற்ற எந்தத் தொழிலில் இருப்பவர்களையும்விட, முழுக்க முழுக்க கற்பித்துக் கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப்புகளில் சித்தரிக்கப்படுபவர்கள் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் இருக்கப்பட்டவர்கள்தாம்.

கணினி மென்பொருள் தொழில்நுட்பப் பணியாளர்கள் பெரும்பாலும் இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயது வரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்ச சொச்ச ஈர்ப்பு. அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென்பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் – இந்தியச்சராசரி வருமானத்தை விடப் பல மடங்கு கூடுதலானது என்று பலராலும் கருதப்படும் – வருமானம் போன்றவற்றின் அடிப்படையில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களைப் பற்றி பலூனாக ஊதப்பட்ட வண்ண வண்ண இமேஜ்கள் தமிழ்க் கதைகளில் பிறக்க ஆரம்பித்தபோது இதெல்லாம் சீக்கிரம் தரைக்கு வந்து விடும் என்று நினைத்து நான் என்பாட்டுக்கு கம்ப்யூட்டர் தொழிலிலும் அதோடு சம்பந்தப்படாத என் படைப்புலகத்திலும் மூழ்கியிருந்தேன்.

ஆனால், தமிழில் ஒரு படைப்புக்கூட இதுவரை மென்பொருளாளர்களைப் பற்றிய இப்படிப்பட்ட தட்டையான படிமத்தை உடைத்து அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களை நகமும் சதையுமாகச் சித்தரித்து அவர்களின் தொழில் சார்ந்த சிக்கல்களையோ, தினமும் சந்திக்கவேண்டியிருக்கும் சவால்களைப் பற்றியோ பேசவே இல்லை என்று எனக்குப் பட்டபோது, கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் தமிழ்ப் படைப்பாளன் என்ற முறையில் இவர்களைப் பற்றிய ஒரு முறையான பதிவை, என் படைப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன்வைக்க உத்தேசித்தேன்.

நண்பர் பா.ராகவன் திடீரென்று தொலைபேசியில், தான் சார்ந்திருந்த பத்திரிக்கையின் இணையதளத்தில் நான் உடனே ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, அது கம்ப்யூட்டர் துறை பற்றியதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு யோசனையையும் தெரிவித்தார்.

‘ஐந்து நிமிடத்தில் திரும்ப ஃபோன் செய்கிறேன்… தலைப்பு சொல்லுங்க’

நான் என் கம்ப்யூட்டரில் வழக்கமான வேலையில் மூழ்கி இருந்தேன். புராஜக்ட் மேனேஜ்மென்ட் தொடர்பான சிக்கலான வேலைப் பங்குபிரிப்புக்கு இடையே என்ன காரணத்தினாலோ அந்த இயந்திரப் பிசாசு ஸ்தம்பித்து நின்று போக நான் அதை திரும்ப இயங்க வைக்க ரீபூட் செய்து கொண்டிருந்தபோது உதயமான தலைப்புதான் ‘மூன்று விரல்.’

திடீரென்று இயக்கம் மறைந்து உறைவதும், திரும்பச் செயலபடத் துவங்குவதும் கம்ப்யூட்டரின் குணாதிசயம் மட்டுமல்ல, அதோடு சம்பந்தப் பட்டவர்களின் வாழ்க்கை நியதியும்கூடத்தான் என்று தோன்றிய அந்தக் கணத்தில் உருவான கதையே இது.
இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுக்கள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள்.

‘அவனா… அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு லாஸ் ஏஞ்சல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா இருக்கானாம்..’ என்று பொருமி வியத்தலும், ‘கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அஷ்டமத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சு போய், அவனவன் ராயர் காப்பி ஹோட்டலிலே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டு இருக்கானாம்… நல்லா வேணும்’ என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும் இங்கே இலமே!

இருபது வருடங்களாக இந்தத் துறையில் இருக்கும் அனுபவம், எனக்கு இந்த நாவலை எழுத மிகவும் பயன்பட்டாலும், அது மட்டும் ‘மூன்று விரல்’ இல்லை.

எல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்து விடுகிறது.

இந்த முன்னுரையையும் இதோடு முடித்துக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

கீழாம்பூர் ரங்கநாதன் சுதர்சன் -ஒரு மென்பொருள் வல்லுனன். சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் சார்பாக லண்டனிலிருக்கும் நாய் வளர்ப்போர் சங்கத்துக்கான் மென்பொருளை உருவாக்கும் பணியிலிருந்தவன். மென்பொருள் உருவாகி முடிந்ததும் அதை வாடிக்கையாளருக்கு இயக்கிக் காண்பித்து அவர்கள் சுட்டிக் காட்டும் குறைகளை உடனடியாகக் களைந்து பின் அவர்களின் ஒப்புதல் பெற்று வரும் – யூ.ஏ.டி (யூசர் அக்சப்டன்ஸ் டெஸ்ட்) என்ற அக்னிப் பரிட்சைக்காக லண்டன் செல்கிறான். வெற்றிகரமாக அதை முடித்துக் கொண்டு அங்கேயிருந்து கிளம்புவதற்கு முன்னரே அவன் வேலை பார்க்கும் கம்பெனி கைமாறி விடுகிறது. இதற்கு இடையில் சந்தியா எனும் லண்டன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணைச் சந்தித்து காதல் கொள்கிறான். இந்தியா திரும்பி வருகையில் ரயில் சிநேகம் போல விமானத்தில் அறிமுகமாகும் ஒரு பக்கத்து சீட் சர்தார் தானும் ஒரு மென்பொருள் கம்பெனி ஆரம்பிக்கவே சென்னை போவதாகவும் அதில் சேர விருப்பமா என்று கேட்கிறார். சென்னை வந்தவுடன் புது நிர்வாகமும் சுதர்சனைத் தன் கம்பெனியிலேயே இருக்கச் சொல்லுகிறது. அதை மறுத்து புது கம்பெனியில் சேரும் சுதர்சன் அக்கம்பெனியின் சார்பில் பாங்காங் போய் வேலையில் சேருகிறான். தன்னுடன் ஒரு சிறு குழுவைத் தன் பொறுப்பில் அழைத்துச் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் பிரச்சனைகள், ஊரில் அவன் அப்பா ஒரு நெருக்கடிக்குள்ளாவது, அப்போது தான் அருகிலிருக்க முடியவில்லையே என்று அவன் தவிப்பது, அவனுக்கு ஒரு பெண் பார்த்து நிச்சயம் செய்யத்துடிக்கும் தாயிடம் தன் காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பது, அவனது காதலி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று நாவல் சுவாரசியமாகப் பயணிக்கிறது.

பொதுவாகவே மென்பொருளில் ஆன்சைட் எனப்படும் வாடிக்கையாளரின் இடத்திலேயே போய் வேலை செய்யும் வாய்ப்பு இரு முனைக் கத்தியைப் போன்றது. வெளிநாடென்பதால் கம்பெனி தரும் அலவன்ஸ் அதிகமாக இருக்கும் – அதை சேமித்து ஊருக்கு அனுப்பினால்(இந்த ஆல் பெரிய இக்கன்னா.. இங்க கோட்ட விடறவங்க ரொம்பப் பேரு) அது பெரிய சேமிப்பாகத் தான் இருக்கும். ஆனால் இதற்காக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளும் நிறைய. வெளிப்படையான பிரச்சனைகளான இந்திய சமையல் சாமான்கள்/காய்கறிகள்/கோவில்கள் போன்றவற்றின் தேவையெல்லாம் அநேகமாய் எல்லா நாடுகளிலும் தீர்க்கப் பட்டாகிவிட்டது. ஒரு சின்ன ஊரில் கூட இரண்டு இந்திய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள்(இது பெரும்பாலும் குஜராத்திகளால் நடத்தப்படுகிறது), கோவில்கள்(இதில் பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தவர் பங்கு அதிகம்) போன்றவை இருக்கின்றன. சமீபத்தில் பொன்ஸ் சான் பிரான்ஸிஸ்கோவில் அரசு நூலகங்களிலேயே தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதாகச் சொல்லியிருந்தார். அந்த அளவு புற வசதிகள் நாம் வீட்டை விட்டுத் தொலைவிலிருக்கிறோம் என்பதை மறக்கச் செய்கின்றன என்பது உண்மைதான். ஆனால் மனவியல் ரீதியில் சந்திக்க நேரும் பிரச்சனைகள் ஏராளம். நமக்கு ஒரு பிரச்சனை என்றால் வீட்டிலிருப்போரின் அருகாமை கிடைக்காது போவது, நாம் இங்கேயிருக்க வீட்டில் ஏதேனும் பிரச்சனை என்றால் அடிக்கடி தொலைபேசி அவர்களை நச்சரிப்பதல்லாது உருப்படியாய் எதுவும் செய்து உதவ முடியாத கையறு நிலை என்று பல காரணிகள் மனோரீதியாக நம்மைச் சோர்வுறச் செய்யும். இது மணமாகாத இளையோருக்கு. மணமாகி, பின் துணையை இங்கே விட்டுவிட்டுத் தவிப்பது ஒரு ரகம். கூட அழைத்துப் போனாலும் கூட பிள்ளைப்பேறு, குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களில் பெரியவர்கள் வழிகாட்டுதலுக்கும் ஒத்தாசைக்கும் ஏங்குவது, அப்படியே பெற்றோரை டூரிஸ்ட் விசாவில் அழைத்துப் போவதென முடிவு செய்தாலும் உங்க அப்பா அம்மாவா இல்லை என் அப்பா அம்மாவா என்று முடிவு செய்வதிலிருந்து ஆரம்பித்து ஏகப்பட்ட சிக்கல்கள் – இப்படி வெளிநாடு வாழ் மென்பொருள் ஆசாமிகளின் மனோரீதியிலான பிரச்சனைகளின் பட்டியல் ஆகப் பெரிது.

வேலையிலும் அழுத்தம் அதிகம். குறிப்பாக – யூ.ஏ.டி எனப்படும் வாடிக்கையாளர்கள் மென்பொருளை நேரடியாகச் சோதித்து ஏற்றுக் கொள்ளும் கட்டத்தில் மொத்த குழுவின் தவறுகளுக்கும் நாம் அங்கே நின்று சப்பைக்கட்டு கட்டியாக வேண்டும். உடனுக்குடன் சரி செய்து(தானே செய்துவிடும் ஆட்களும் உண்டு – இல்லை உடனடியாக ஆஃப்ஷோர் மக்களை அழைத்து முடிந்த மட்டும் கத்தித் தீர்த்துவிட்டு அவர்களைச் சரிசெய்யச் சொல்வதும் உண்டு) மீண்டும் அவர்களை விட்டே சரிபார்க்கச் சொல்லியாக வேண்டும். இந்தக் கட்டம் கிட்டத்தட்ட நெருப்பில் நிற்பது போன்ற விஷயம். இதையெல்லாம் நாவல் தெளிவாகவே சொல்கிறது. அதற்காக ஏதோ மென்பொருள் துறை பற்றிய பாடம் போலத்தான் இருக்குமாக்கும் என்று நினைத்துவிட வேண்டாம் – எங்கேயும் வலிந்து எந்த விஷயமும் திணிக்கப் படவில்லை. கதையோட்டத்திலேயே நாயகனது பணிச்சுமை, வீட்டை விட்டுத் தள்ளியிருக்கும் நிலையில் வீட்டுப் பிரச்சனைகளில் தன்னால் எதுவும் செய்ய முடியாத தவிப்பு என்று ஏகப்பட்ட விஷயங்கள் நாவல் முழுவதும் விரவியிருக்கிறது.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் வாழ்வென்பது முடங்கி நின்று விடக்கூடாதென்பதையும் எந்தப் புள்ளியிலிருந்தும் அது மீண்டும் ஆரம்பிக்கப் பட வேண்டியதுதான் என்பதையுமே நாவல் சொல்கிறது. அங்கங்கே முருகனின் வழக்கமான மாஜிக்கல் ரியலிசமும் உண்டு.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in படித்ததில் பிடித்தது and tagged , , , . Bookmark the permalink.

13 Responses to படித்ததில் பிடித்தது (8)

 1. Icarus Prakash says:

  நாலு வருஷத்துக்கு முன்பு படித்தது. நினைவுகளை கிளறிவிட்டது. நன்றி.பி.கு : அதன்ன மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகை? காசு குடுத்து வாங்கிட்டோம்னா, அது நம்முதே நம்முதுதாங்க 🙂

 2. லக்ஷ்மி says:

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரகாஷ். காசு கொடுத்து வாங்கின அந்த ஒரு பிரதி நம்முடையதுதான். ஆனாலும் படைப்பு அவங்களுதுதானே? விமர்சனத்துக்காக எடுத்தாளலாம்னு அவங்களே மரியாதையாக் கொஞ்சம் உரிமைய கூறு போட்டுத் தந்தாலும் அது அவங்களுதுன்றதை மறந்துடக்கூடாதில்லையா? அதுக்குதான் இப்படி ஒரு லேபிள். 🙂

 3. மோகன் says:

  its really a very good novel.i felt like my onsite life was written in that novel.a very good read.

 4. அய்யனார் says:

  லக்ஷ்மிஇவரோட ஒரு கிராமத்து பெண்ணின் தலைப்பிரசவம் கவிதை தொகுப்பு தவிர வேறெதுவும் படிச்சதில்ல அங்கங்க சில சிறுகதைகளோட பரிச்சயம்தான்.. அண்ணாச்சி வீட்ல இந்த அரசூர் வம்சம் பார்த்தேன் படிச்சிட்டு சொல்றேன் ..எனக்காகவே புத்தகம் வாங்குவத ஒரு பழக்கமா வச்சிருக்கார் அவர் ரொம்ப்ப்ப்ப்ப்ப நல்லவர் 🙂/விஜயகாந்த் விண்டோஸ் மீடியா ப்ளேயரை திரையில் ஒடவிட்டு ஸ்கீரினைப் பார்த்துக் கொண்டே கீ போர்டில் மாய்ந்து மாய்ந்து டைப் செய்வார்/சந்தடி சாக்கில தலிவர கலாய்ச்சிட்டிங்க இல்ல ..ஆட்டோ வந்திட்டிருக்கு

 5. லக்ஷ்மி says:

  மோகன், அய்யனார் – நன்றி. //ஆட்டோ வந்திட்டிருக்கு// அய்யோ… ஏன் அய்யனார், எனக்கு இணையத்துல இருக்கற பிரச்சனை போதாதா? இன்னும் நிஜத்துல வேற எல்லாரும் ரவுண்ட் கட்டி என்னைய அடிக்கணுமா? நினைச்சாலே பயமா இருக்கே… என் மூக்குக்கு நேரா கைய நீட்டி இதெல்லாம் உனக்குத் தேவையான்னு கேட்டுக்க வேண்டியதுதான் போல.. 😉

 6. ஜ்யோவ்ராம் சுந்தர் says:

  இந்த நாவலைப் படித்திருகிறேன் ரொம்ப நாட்களுக்கு முன்பு.இரா முருகனின் தாவிச் செல்லும் நடையும், அங்கதமும் எனக்குப் பிடிக்கும். நாவலின் கடைசிப் பகுதிகள் மிக வேகமாக இருக்கும் (முடிக்க வேண்டிய பத்திரிகைக் கட்டாயம்.?). ஆனால் மூன்று விரலை அவரது சிறந்த எழுத்துக்களுக்கு உதாரணமாகச் சொல்ல முடியாதென்றே நினைக்கிறேன்.சில சிறுகதைகள் நன்றாகவே இருக்கும் (கொஞ்சம் சுஜாதா சாயல் தெரியும் என்பது negative)

 7. லக்ஷ்மி says:

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தர்.//நாவலின் கடைசிப் பகுதிகள் மிக வேகமாக இருக்கும் (முடிக்க வேண்டிய பத்திரிகைக் கட்டாயம்.?). // ரொம்பவே கூர்ந்த அவதானிப்பு. ஆமா, அதும் அந்த 9/11 சம்பவத்தின் பாதிப்பு மென்பொருள் துறைய உலுக்கின உலுக்கு ரொம்பவே அதிகம். ஆனா அது நாவலில் அதிகபட்சம் ஒரு பக்கத்துக்குள்ள முடிஞ்சிடும். நானும் நினைச்சதுண்டு – இதை இன்னும் கொஞ்சம் விரிவாச் சொல்லியிருக்கலாமேன்னு. சிறுகதைகள் மட்டுமில்லை, நிறையச் சொல்லலாம் – அவரோட அரசூர் வம்சம் நாவல் ரொம்ப அருமையா இருக்கும். தினமணில வந்த சற்றே நகுக, திண்ணை இணைய இதழில் வந்த வாரபல போன்ற கட்டுரைத் தொடர்கள்னு ஒரு பெரிய பட்டியலே போடலாம் – எனக்குப் பிடிச்சதுன்ற வரிசைல.

 8. ramachandranusha(உஷா) says:

  லஷ்மி, குமுதம் டாட் காமில் வந்த தொடர்கதையில் இதுவும் ஒன்று. என்ன பிரச்சனையோ பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.வெங்கடேஷ் எழுதிய இருவர், பா.ராகவனின் சுண்டெலி, நாகூர்ரூமியின் கப்பலுக்கு போன மச்சான். ராயர் காபி கிளப்பில் இந்நாவலை குறித்து பலரும் பேசியது நினைவிருக்கு.

 9. லக்ஷ்மி says:

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா.

 10. மெளலி (மதுரையம்பதி) says:

  இன்றுதான் உங்கள் பதிவுப்பக்கம் வர வழி தெரிந்தது….முருகனின் படைப்புக்களை இவ்வளவு கூர்ந்து படித்ததில்லை. படிக்க தூண்டியிருக்கிறீர்கள்…..நன்றி

 11. லக்ஷ்மி says:

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரையம்பதி.

 12. வீரமணி says:

  வணக்கம் லஷ்மி..உங்கள் படைப்புகள் அனைத்தையும் சமீபத்தில்தான் வாசிக்க நேர்ந்தது பயனுள்ள படைப்புகள்..தொடர்ந்து படிக்கிறேன். மறுபடியும்பேசலாம் அன்புடன் வீரமணி

 13. cheena (சீனா) says:

  இராமுவின் பல சிறுகதைகளும் நாவல்களும் படித்தவன் நான். தினமணி கதிரில் வரும் அவரது இரு பக்க கதைகள், சம்பவங்கள், மலரும் நினைவுகள், லண்டன் டைரிக் குறிப்புகள், எடின்பரோ குறிப்புகள், அனைத்தும் படித்து நினைத்து ரசித்து மகிழ்ந்தவைகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s