கனிவமுதனுக்கு இன்று முதல் ஹேர் கட். நேற்றிலிருந்தே பாலா கிலி ஏற்படுத்தியிருந்தார். தான் முடிவெட்டிக் கொள்ள போன சமயங்களில் குழந்தைகளை கூட்டி வந்து திணறிப் போன பெற்றோர்களைப் பற்றிய கதையாகவே நேற்று முதல் அவர் பேச்சில் ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு திகிலுடன் தான் சலூனுக்குள் நுழைந்தோம். பாலா வழக்கமாகப் போகும் கடைதான் என்பதால் முடிதிருத்துபவர் வாங்க என்று வரவேற்று உட்காரச் சொன்னார். நல்ல வேளையாக எங்களுக்கு முன்னால் அங்கே உட்கார்ந்திருந்த வாடிக்கையாளரை கனிவமுதனுக்குப் பிடித்துப் போனது – ஏனெனில் அவருக்கு 4 அல்லது 5 வயதிருக்கும். அந்தக் குழந்தையைப் பார்த்து எங்கள் குழந்தை கொஞ்சம் ஆசுவாசப் பட்டிருக்குமென நினைக்கிறேன். இவன் முறை வரும் போது அந்த சுழல் நாற்காலியின் இரு கைப்பிடிகளையும் இணைக்கும் படி ஒரு மரப்பலகையைப் போட்டு அதன் மீது இவனை அமர்த்தினார். ஒரு பழைய வேட்டியால் இவனை மூடிவிட்டு, டிவி ரிமோட்டை எடுத்து என் கையில் கொடுத்தார். இவனது கவனம் முழுக்க டிவியில் இருக்கும் போது கத்திரியை எடுத்து கிடைத்த வரையில் மேலோட்டமாக வெட்டி வீசீனார். பிறகு கையில் ட்ரிம்மரை எடுத்துக் கொண்டார். எனக்கு உள்ளூர ஒரே கிலி – உள்ளே நுழையும் போதே தலைவர் அழுதால் திருப்பி அழைத்து வந்துவிடலாம். ஆனால் இப்படி பாதி முடியை வெட்டி கந்தரகோலமான பின்பு அடம் பிடிக்கத் துவங்கினால் என்ன செய்ய முடியும் என்று பயந்து கொண்டே ரிமோட்டை தீவிரமாக இயக்கி கனிவமுதனுக்குப் பிடித்த விளம்பரங்களாகத் தொடர்ந்து டிவியில் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்.
ட்ரிம்மரின் அதிர்வைத் தலைவர் உணரத் தொடங்கியது நெளிய ஆரம்பித்தார். மெல்ல மெல்ல திமிற, பாலா அமுக்கிப் பிடிக்க, ஒரு வழியாக அழுகை உச்சத்துக்குப் போகும் முன் ஜோலி முடிந்தது. மொத்தமே 10 நிமிடத்தில் மொட்டையடித்து நான்கு நாட்கள் ஆனது போன்ற ஒரு அருமையான தலையலங்காரத்தோடு கனி என் கையில் 🙂 எனக்கு பரம நிம்மதி. குறைந்தது இன்னும் ஒன்னரை மாதங்களுக்கு கவலையில்லை.
***********
ஒரு வழியாக எந்திரன் பார்த்தோம். படம் நல்ல ஒரு எண்டர்டெய்னர். கிராபிக்ஸ் பிரமிக்க வைத்தது. சிட்டி வெர்சன் 2.0 தான் என் பேவரைட். எப்போதுமே நான் வில்லனாக ரஜினி நடித்த பழைய படங்களில் அவர் நடிப்பை விரும்பும் ஆள். ஒரேயடியாக தீவிர நடிப்பு பக்கம் போக முடியாவிட்டாலும் கூடவேட்டைய்யன், சிட்டி போல பாத்திரங்களையாவது அவ்வப்போது செய்து வந்தால் ரஜினிக்கும் நடிப்பு வரும் என்பது நமக்கெல்லாம் மறந்து போகாமல் இருக்கும். 🙂
படத்தை எல்லோரும் ஏற்கனவே துவைத்து காயப் போட்டாகிவிட்டதால் என் விமர்சனம் என்று பெரிதாய் எதுவும் இல்லை. ஆனாலும் ஒரு விஷயம் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்ததது. பல படங்களில் ராபின் ஹூட் பாணியில் கதையமைத்த ஷங்கர், அஞ்சு பைசாவைத் திருடுவதும் குற்றம் என்று குமுறுபவர், பார்க்கில் தூங்குவது கூட பஞ்சமா பாதகம் என்று அடித்துப் பேசும் ஆள்… அவரது கதாநாயகி லேட்டஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தி பிட் அடிப்பதை காட்டி, அது குற்றம் என்று ஒரு இடத்திலும் உணர்வதாகக் கூட காட்டாதது பெரிய முரண். அதிலும் நாயகி படிப்பது மருத்துவப் படிப்பு – உயிர் காக்கும் பணிக்கு இடஒதுக்கீட்டில் படித்து வருபவர்களையே சாடிய ஷங்கர், குறுக்கு வழியில் படித்து வருவது மட்டும் சரியென்று சொல்கிறாரா என்ன? இத்தனைக்கும் அப்படி படிக்க முடியாமல் போனதற்கு அந்த அம்மணியின் வறுமையோ, இல்லை வேறு எதோ பெரிய காரணங்களோ கூட கிடையாது – கதாநாயகனோடு ஊடலாம், அதனால் இவரால் படிக்க முடியவில்லையாம், எனவே பிட் அடித்து பாஸ் பண்ணுவாராம்… தாங்கலை..
*************
அலுவலகத் தோழி ஒருவர் மடிப்பாக்கத்தில் நடந்த ஈஷா யோகா வகுப்புக்கு என்னை அழைத்துப் போனார். யோகா பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் சில வருடங்களாகவே எனக்கு உண்டு. தோழியும் மாலை ஏழு மணிக்கு வகுப்பு, முதல் நாள் மட்டும் அறிமுக உரை ஆறு மணிக்கு என்றார். நானும் ஒரு மணி நேர வகுப்பாக இருக்கும் என்று நினைத்து, போய்தான் பார்க்கலாமே என்று சென்றேன். ஆறு நாட்களுக்கு, தினமும் மூன்று மணி நேர வகுப்பாம் அது. அதிலும் ஞாயிறு அன்று தீக்ஷை தருவார்களாம். எனவே காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணி வரை அங்கே இருக்க வேண்டுமாம். அவ்வளவெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது என்று ஓடி வந்துவிட்டேன்.
அந்த அறிமுக வகுப்பில் பேசிய ஈஷா தியான மைய ஊழியர் கசகசக்கும் சென்னை வேர்வையிலும் காவி வேட்டி ஒன்றை சால்வை போல போர்த்தியிருந்தார். நன்றாகவே பேசினார். முடிவில்தான் அந்த வேடிக்கை நடந்தது. இப்போது உங்கள் பகுதியில் உள்ள, ஏற்கனவே எங்கள் தியான வகுப்புகளில் பயின்ற சிலர் அவர்கள் பெற்ற நன்மைகளைப் பற்றி உங்களுக்குச் சொல்வார்கள் என்றார். ஒரு நான்கு பேர் அதன் பின் பேசினார்கள். முழுக்க முழுக்க அற்புத சுகமளிக்கும் கூட்டத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. 🙂 பேசாமல் ஊரிலிருக்கும் எல்லா மெடிக்கல் காலேஜுகளையும் பூட்டிவிட்டு, வகைக்கொன்றாக யோகா வகுப்புகளும், சுகமளிக்கும் சபைகளும் ஆரம்பித்து விட்டால் போதும் போல… எல்லோரும் நோயற்ற வாழ்வு வாழ்ந்து குறைவற்ற செல்வம் பெறலாம். :)))
****
ஐஸ்வர்யா பிட் சீன் பற்றிய உங்கள் கேள்வி நியாயமானதே.
//உயிர் காக்கும் பணிக்கு இடஒதுக்கீட்டில் படித்து வருபவர்களையே சாடிய ஷங்கர், குறுக்கு வழியில் படித்து வருவது மட்டும் சரியென்று சொல்கிறாரா என்ன? //
பத்த வச்சிட்டீங்க மேடம்
அதுவும் stages of labourக்கு பிட் என்பது கொஞ்சம் ஓவர் தான்
(ஏதோ purine metabolismத்துக்கு பிட் என்றால் கூட மன்னித்து விடலாம்)
அப்புறம், Williams, Dutta, 10 teachers என்று எத்தனையோ obstetrics புத்தகங்கள் இருக்கும் போது சங்கர் ஏன் முதலியார் புத்தகத்தை காட்டினார் 🙂 🙂 என்று இதுவரை யாரும் நுண்ணரசியல் பண்ணவில்லையா
(வேறு ஒரு பின்னூட்டம் தவறி விழுந்தவிட்டது…மன்னிக்கவும்..:))
உதிரிப்பூக்கள் தலைப்பை பார்த்ததும் அந்த சினிமாபத்தித்தான் இருக்கும் என் வந்தேன்.
அதைவிட சுவாரஸ்யமாக இருந்தது… எந்திரன் பற்றிய கருத்து யோசிக்க வைத்தது…:))
கனி,ஹேர்கட்டுக்கு அப்புறம் எவ்வளவு சம்த்து முகம் காட்டி இருக்கும் என்று யோசிக்கிறேன். ஆண் குழந்தைகள் ஹேர்கட் செய்த பிறகு குறும்பு அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.:)
சுற்றிப் போடுங்கள்.
nice
நல்ல பதிவுகள். சமூக அக்கறையோடு பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளில் தங்களின் பதிவுகளும் இடம் பெறுகிறது. வாழ்த்துகள். தொடருங்கள்