இல்லத்தரசர்கள் ஏன் உருவாவதில்லை?


எழுத்தோ இசையோ சிற்பமோ கலை எதுவாயினும் கலைஞன் என்பவன் ஒரு விசேஷமான பிறவிதான். எந்தக் கலையும் மறையாத நுண்ணுர்வையும், தீராத படைப்பூக்கத்தையும் கோருவது. ஒரு மனிதன் கலையை ரசிக்கவே நுண்ணுர்வோடும், ரசனையோடும் அதற்கென தனிப்பட நேரம் செலவிடத் தயாராகவும் வேண்டுமென்றால் கலைஞன் அக்கலைப் படைப்புகளை படைக்க எவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கும்? அப்படி தன் உணர்வுகளையும், வாழ்நாளையும் ஆகுதியாக்கி கலையை போஷித்துக் கொண்டிருப்பவன் தன் பொருளாதாரத் தேவைகளைத் தானே நிறைவேற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டால் முதலில் அடிவாங்குவது அவனது வித்யா கர்வம் – இன்னொருவனிடம் கைகட்டி நிற்கத் தேவையில்லாது பொருள் வரும் வழி எங்குமில்லை.

சொந்தத் தொழில் செய்வோருக்கு அதில்லையே என்று நினைத்தால் அது நம் அறியாமையே. அங்கும் வாடிக்கையாளர் ஒவ்வொருவரையும் நம் முதலாளியாக நினைத்தே செயல்பட வேண்டியிருக்கும். அதிலும் நிலப்பிரபுத்துவக் காலகட்டம் போலின்றி இன்று இருக்கும் அரசு/தனியார் நிறுவன அமைப்புகளில் இருக்கும் உள்ளரசியலும், சூதுவாதுகளும் ஒரு மனிதனை கசக்கிப் பிழிய போதுமானவை.

இப்படியான சிக்கல்களில் இருந்து கலைஞர்களை காக்கவே அரசனோ பெரும் நிலப் பிரபுக்களோ கலைஞர்களை அரசவையில் வைத்துப் பராமரிக்கும் வழக்கம் இருந்தது. அந்தப் புரவலனை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தாக வேண்டிய கட்டாயம் இருந்தாலுமே கூட வேறு சிக்கல் எதுவும் அக்கால கலைஞர்களுக்கு இல்லை. அரச முறை வழக்கொழிந்தபோது கலைஞர்கள் மாற்றாக என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடியதும் நம் நாட்டில் கலை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் நேர்ந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

எந்த ஜமீந்தாரைத் தன் சின்ன சங்கரன் கதையில் காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சினாரோ அதே ஜமீந்தாருக்கு சீட்டுக் கவியெழுதி இறைஞ்ச நேர்ந்த போது பாரதிக்கு எப்படி வலித்திருக்கும்? மக்கள் கலைஞர்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை தன் பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் குறிப்பிட்டு அந்நூலையும் அப்படி கலைஞர்களை காத்து நிற்கப் போகும் வருங்கால பிரபுக்களுக்கே சமர்ப்பித்தவர் அவர். ஆனால் அந்த மகாகவியின் சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் எண்ணிக்கை பதிமூன்று. எப்பேர்பட்ட கொடுமை இது…. சரி, அரசன் இல்லை. மக்களும் கலைஞனை கவனிப்பதில்லை. வேறு என்னதான் வழி? அடுத்து அந்தப் பொறுப்பு வந்து சேர்வது அக்கலைஞரைச் சூழ்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு – அதிலும் குறிப்பாக அவரோடு தன் வாழ்வை பிணைத்துக் கொண்ட வாழ்கைத் துணைக்கு.

பெண்கள் வேலைக்குச் செல்வது மிக எளிதாகிவிட்ட சூழலில் இப்படி கணவரை போஷித்து, பொருளியல் நெருக்கடிகளையும், குடும்பப் பொறுப்புகளையும் தன் தலை மேல் போட்டுக் கொண்டு ஒரு கோழி தன் சிறகால் மூடி குஞ்சுகளைக் காப்பது போல் இந்த சமூகத்தின் தாக்குதல்கள் எல்லாவற்றிலிருந்தும் அவருக்கு ஒரு சிறு கீறல் கூட விழாது காக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்று மிக அதிகம். காதல் ஒருவனைக் கைபிடித்து, அவன் காரியம் யாவிலும் கைகொடுக்கும் இத்தகையோரே உண்மையில் பாரதியின் புதுமைப் பெண்கள்.

சமீபத்தில் வார இதழொன்றில் ஒரு பிரபல எழுத்தாளரின் நேர்காணலை , அவரது மனைவி பற்றிய மதிப்பீட்டை படிக்க நேர்ந்தது. எப்படியெல்லாம் தன் மனைவி தன்னை போற்றிப் பாதுகாக்கிறார் என்பதை கேட்போர் நெகிழும் வண்ணம் சொல்லியிருந்தார் அந்த எழுத்தாளர். சில பத்து வருடங்களின் பின்னும், எத்தனையோ பிரச்சனைகளுக்குப் பிறகும் கூட ‘அன்றன்ன விருப்புடன்’ வாழும் அவர்களின் பெருங்காதல் பற்றி படித்த போது கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

இன்றுள்ள சூழலில் நிறைய ஆண் எழுத்தாளர்கள் இது போன்ற நெகிழ்வு மிக்க விஷயங்களை யாரும் தன்னை குறைவாக நினைப்பார்களோ என்ற எண்ணமின்றி பதிவு செய்வது நல்ல விஷயம். இது ஒரு பொருட்படுத்த வேண்டிய முன்னேற்றமே.

சரி, எதிர்ப்பக்கத்தில் பெண் எழுத்தாளர்கள் தன் குடும்பம் தன்னை எப்படி நடத்துகிறது என்று பதிவு செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். பெரும்பாலான பெண்களின் பேட்டி இப்படி இருக்கும்.”என் கணவர் ரொம்ப நல்லவர். புகுந்த வீட்டு மனிதர்களும் ரொம்பப் பெருந்தன்மையானவர்கள். நான் எழுதுவதை ரொம்பவே ஊக்குவித்தவர்கள். அதற்காக வீட்டு வேலைகளில் நான் எந்தக் குறையும் வைத்துவிடுவதில்லை. சமையல், குழந்தை வளர்ப்பு எல்லாவற்றையும் நான் சரியாகச் செய்து முடித்துவிட்டுத் தான் எழுதவே உட்காருவேன். அப்படி எழுதுகையில் என் எழுத்தை வீட்டில் உள்ள யாரும் தொந்தரவே செய்ய மாட்டார்கள்” இப்படியாகப் போகும் அவர்களின் பேட்டியில் தெரிக்கும் நன்றியுணர்வு அதீதமானது.

அதாவது வீட்டு வேலைகளை முடித்து விட்டு, பிறகு உட்கார்ந்து தான் எழுதி வீணாக்கும் நேரத்தில் கூட குடும்ப வேலைகளை இன்னும் பொறுப்பாகச் செய்திருக்கலாமோ என்ற குற்றவுணர்வும் அதில் அடிநாதமாக இழையோடும். அப்படியான ஓவர் டைம் பொறுப்புணர்வு தனக்கு இல்லாது போனதைத் தன் குடும்பம், குறிப்பாக கணவரும் அவர் வீட்டாரும் மன்னித்து அருளுவதாகவே பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் நம்புகிறார்கள்.

ஒரு ஆண் எழுத்தாளர் ஆக , குடும்பத்தில் ஆணின் பொறுப்பாகக் கருத்தப்படும் பொருளீட்டலை பெண் எடுத்து நடத்தி, சுதந்திரம் தர வேண்டும் என்றால் அதே போல் ஒரு பெண் எழுத்தாளர் ஆகவும் குடும்பத்தில் அவரது பொறுப்பில் இருக்கும் சமையல் குழந்தை வளர்ப்பு போன்றவை கணவன் எடுத்து நடத்த வேண்டும் இல்லையா? ஆனால் யதார்த்தத்தில் அப்படி இருப்பதில்லை.

இலக்கியம், கலை மட்டும்தான் என்றில்லை. தொழில் தொடங்கி நடத்துவதிலிருந்து விளையாட்டில் ஜெயிப்பது வரை சகல விஷயங்களுக்குமே இந்த புரிந்துணர்வு அவசியம். யாரேனும் ஒருவர் ஜெயிக்க குடும்பம் முழுமையும் ஒத்துழைப்பது என்பது ஆணுக்கு எப்படி முக்கியமோ அப்படியே பெண்ணுக்கும் முக்கியம். சமீபத்தில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தட்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையான கிருஷ்ணா பூனியா பத்திரிக்கையாளர் சந்திப்பில் எதிர்கொண்ட முதல் கேள்வி – ’உங்கள் குழந்தையை பிரிந்து வெளிநாடு சென்று பயிற்சியெல்லாம் பெற்றிருக்கிறீர்களே, இது உங்களுக்கு மன உளைச்சலைத் தரவில்லையா?’ என்பதுதான். இத்தனைக்கும் அப்பெண்ணின் கணவரே அவரது பயிற்சியாளரும்  கூட.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று இன்போசிஸ் நிறுவனர் நாரயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி போன்றோர்களைப் பற்றி பெருமையாகப் பேசும் மீடியாவால் கிருஷ்ணாவின் கணவர் விஜேந்தரை அப்படி புகழ முடியவில்லை என்பது எவ்வளவு மோசமான நிலை?

செய்யும் தொழிலில் வேறுபாடு பாராட்டுவது கூடாது என்பதை இன்று அறிவுத் தளத்தில் அனைவருமே ஒப்புக் கொள்ளுவார்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். –குறள்.972

என வள்ளுவரும் கூட செய்யும் தொழிலில் காட்டும் திறமையால்தான் சிறப்பு வரும் என்கிறாரே தவிர்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தொழிலால் இல்லை. வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யும் தொழிலிலேயே வேறுபாடு கூடாதென்றால், நம் சொந்த வீட்டிற்குள் செய்ய நேரும் வேலைகளில் என்ன ஏற்றத் தாழ்வு இருந்துவிட முடியும்? இதெல்லாம் வாதிட நன்றாகவே இருக்கும்.

ஆனால் இன்னமும் நம் ஆழ்மனதில் அல்லது மரபணுக்களில் உறைந்திருக்கும் சாதீய ஆணாதிக்க சிந்தனைகள் முழுமையாகக் களையப்பட்டுவிடவில்லை என்பது தொழில்களுக்கு இருக்கும் மதிப்பை ஒப்பிட்டாலே புரியும். ஆண் அணியும் பேன்ட் – சட்டையை பெண் அணிந்தால் அது முன்னேற்றம். சரி, ஒரு விளையாட்டுக்கு பெண் அணியும் சேலை அல்லது சுடிதாரை ஆண் அணிந்தால் ஒன்று அது காமெடி அல்லது கேவலம் என்றே பார்க்கப் படும். அது போலவே குடும்பப் பொறுப்பில் ஆணின் தட்டில் இருக்கும் பொருளீட்டலை பெண் கையிலெடுத்துக் கொண்டால் அவள் புரட்சிப் பெண். அதே பெண்ணிற்கு நேர்ந்து விடப்பட்ட சமையலையோ குழந்தை வளர்ப்பையோ ஆண் செய்தால் அது கேவலம் என்றே சமூகம் கருதுவதால் வரும் வினையே இது.

ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில் கூட அப்பா ஈசிச்சேரில் அமர்ந்து பேப்பர் படிப்பார். அம்மா காய் நறுக்குவார். இப்படியான படங்களைப் பார்த்து கதை சொல்லி/கேட்டு வளர்ந்தவர்கள் தானே நாம்? அவ்வளவு எளிதில் இந்த பிரிவினைகள் தகர்ந்து விடுமா என்ன? இதில் ஆண்களை மட்டுமே நான் குற்றம் சொல்வதாக நினைக்க வேண்டாம்.

உன் வேலை அல்லது எழுத்து முக்கியம். நான் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கணவன் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெரும்பாலான பெண்களுக்கே இருப்பதில்லை என்பதுதான் நிஜம். அப்படியே அவர்கள் இருவரும் தன் குடும்ப நிலையை உத்தேசித்து இப்படி ஒரு முடிவை எடுத்தாலும் அக்கம் பக்கத்தவரோ இல்லை உறவினர்களோ இதை சகஜமாக எடுத்துக் கொள்வதில்லை. முதலில் இது அவர்களுக்கு ஒரு கலாச்சார அதிர்ச்சியாக இருக்கும். அடுத்த கட்டத்தில் அந்தக் குடும்பத்தையே இளக்காரமாகப் பார்க்கத் தொடங்குவார்கள். இதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களுமே இப்படித்தான் யோசிப்பார்கள் என்பது மறுக்க முடியாத கசப்பான நிஜம்.

வேலைக்குச் செல்வதோ வீட்டிலிருப்பதோ அது அவரவர் தேர்வு. பொருளீட்டல் யார் செய்ய வேண்டும், சமையல் யார் செய்ய வேண்டும், குழந்தைக்கு யார் கால் அலம்பி விடுவது, வீட்டில் உட்கார்ந்தால் இலக்கியம் வளர்க்கலாமா இல்லை சீரியல் பார்த்தால் போதுமா – இது போன்ற கொள்கை முடிவுகள் எடுக்கப் படவேண்டியது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே. முடிவு செய்யும் முழுமுதல் உரிமை கணவனுக்கும், மனைவிக்கும் மட்டுமே உண்டு என்பதை சமூகம் முழுமையும் உணரும் நாளில்தான் உண்மையான சமத்துவம் பெற்றுவிட்டோம் என்று பொருள்.

நன்றி: பெண்ணியம்.காம்

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in இலக்கியம், எண்ணம், கட்டுரை, சமூகம் and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to இல்லத்தரசர்கள் ஏன் உருவாவதில்லை?

  1. ரொம்ப அழகா விளக்கியிருக்கீங்க..

  2. thangadpa says:

    இல்லத்தரசர்கள் உருவாகுவது என்பது அரசாணையிலிருந்து வருவதல்ல… தனிநபர் மனநிலையிலிருந்து பிறக்க வேண்டும். ஆணாதிக்க சமூக அமைப்பில் அத்திபூத்தாற்போல சில இல்லத்தரசர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கறது. காத்திருப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s