கல்லூரி முடியும் நேரம் நெருங்க நெருங்க, புவனாவின் முகம் இறுக்கமாகிக் கொண்டிருந்தாலே அவள் தோழியருக்கு விஷயம் புரிந்துவிடும்.
“என்னடி! உங்க அணைக்கரை மாமா வந்திருக்காராக்கும்?” என்று கேட்டால், சங்கடமாக ‘ஆம்’ என்று தலையசைப்பாள். மிகவும் நெருங்கிய சொந்தக்காரர். அவள் மீது கொள்ளை அன்பும் அக்கறையும் உள்ளவரும் கூட! ஆனாலும் அவரது வருகை எப்போதும் புவனாவுக்கு எரிச்சலையே அளிக்கக் காரணம், சற்று நுட்பமானது. “என் முன்னாடி ஜட்டியோட திரிஞ்சவதானே நீ..?” – இப்படியாகத் தொடரும் அவரது இங்கிதமற்ற பேச்சு. உன்னை குழந்தையிலிருந்து அறிந்தவன் நான் எனும் உரிமையைக் காட்டும் எண்ணத்தோடும், பாசத்தைக் காட்டும் வழியாகவும்தான் அவருக்குத் தெரிகிறது. பதின்பருவத்தின் எல்லையில் நிற்கும் புவனாவிற்கோ, குழந்தைப் பருவத்திற்குரிய பேதமையோடு தான் செய்த செயல்கள் பகிரங்கப் படுத்தப்படுவது கூனிக் குறுக வைக்கும் விஷயம் என்பதை அந்த மாமா புரிந்து கொள்ளவே இல்லை. மாமா என்றில்லை, புவனாவின் பெற்றோருக்கும் கூட இப்புரிதல் இல்லை.
இப்படி நெருங்கிய சொந்தக்காரர்கள் நம் குழந்தைகளின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தினாலே, அது குழந்தைகளின் மனதைக் காயப்படுத்துவதோடு, உறவினர்களின் உறவிலும் விலக்கத்தை ஏற்படுத்தும். கேலிக்கும் கிண்டலுக்கும் ஓர் எல்லை உண்டு. எது எல்லை என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த மாதம் எல்லா தினசரி நாளிதழ்களிலும் திருப்பதியில் கைது செய்யப்பட்ட யாதவா மணிகண்டா என்பவரைப் பற்றி, புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியானது. அந்தச் செய்தியைப் படித்த பல பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாயினர். ஆம்! கைது செய்யப்பட்ட யாதவா மணிகண்டா, நூற்றுக்கணக்கான சிறுமியரின் புகைப்படங்களைக் கொண்டு முகநூலில் ஒரு ஆபாசதளம் நடத்தி வந்தவன். ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள், ப்ளாக், வாட்ஸ் ஆப் என்று நம் வீட்டுக் குழந்தைகளின் புகைப்படங்களை, நாம் மிகுந்த மகிழ்ச்சியோடு நண்பர்களோடு பகிர்ந்து வருகிறோம். அப்படி பகிரப்பட்ட புகைப்படங்களைத் தொகுத்து, ஃபேஸ்புக்கில் அந்த ஆபாசதளத்தை நடத்தி வந்துள்ளான் இவன். அப்பக்கத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேல். இந்த இணையதளம் குறித்த தகவலை அறிந்த சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், உடனடியாக முகநூல் நிர்வாகத்துக்கும், சென்னை காவல் துறைக்கும் புகார் அளித்தார். புகார் கிடைத்த உடனேயே, அவனை அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்து, அப்பக்கத்தையும் முடக்கியது சென்னை சைபர்க்ரைம் போலீஸ். பரபரப்பாகச் செயல்பட்ட காவல்துறையின் செயல் நிச்சயம் பாராட்டத்தக்கது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், யாதவா மணிகண்டாவுக்கு ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் கிடைக்கக்கூடும். இந்தச் செய்தி சொல்லும் நீதி என்ன?
தன் பிள்ளைகளின் உரிமை என்ன என்பதை, ஒவ்வொரு பெற்றோரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் நம் மூலம் இவ்வுலகிற்கு வந்தவர்களே தவிர, நம்முடைய உடைமைகள் அல்ல! எனவே, அவர்களின் நுண்ணுணர்வைப் புண்படுத்தும் உரிமை நமக்குக் கிடையாது என்ற தெளிவு பெற்றோருக்குத் தேவை.
“குழந்தையைப் பற்றிய எந்தத் தகவல்களையும் சமூகவலைத்தளங்கள் போன்ற பொதுவெளியில் பகிரவேண்டாம்” என்கிறார், உளவியல் மருத்துவரான கீர்த்திபை. “இன்னைக்கு, சமூகஊடகங்களின் தாக்கம் அதிகம். பெற்றோர் பலரும் விபரம் அறியாமல் தங்கள் பிள்ளைகளின் படங்களை அங்கே போட்டுவிடுகிறார்கள். அப்படங்களைத் திருடி ஆபாசதளத்தில் பயன்படுத்திய ஒருவனை, நம்ம காவல்துறை சமீபத்தில் கைது செய்திருக்கிறது. பெற்றோருக்கும் இதில் ஒரு செய்தி இருக்கிறது. பீச், பார்க், மால், திருமணங்கள் என எங்கே போகும்போதும், நம் வீட்டுக் குழந்தையை பிறர் படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம். நேரடியாகத் தெரிந்தவர் என்றால், பொது வெளியில் பகிர வேண்டாம் என்று சொல்லுங்கள். நேரடியாக அறிமுகமில்லாத, நண்பருடைய, நண்பருடைய நண்பர் என்று எவர் வந்தாலும் மறுத்து விடுங்கள்.
அமெரிக்காவில் வசிக்கும் எனக்குத் தெரிந்தவரின் பிள்ளை படத்தை, இப்படியொரு ஆபாசதளத்தில் வலையேற்றி விட்டார்கள். ‘என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்று போன் செய்து கேட்டார். உடனடியாக போலீஸிடம் போகச் சொன்னேன். முதலில் தயங்கியவர், என்னுடைய தொடர் வலியுறுத்தலால் புகார் தெரிவித்தார். அடுத்த சிலமணிநேரத்திலேயே, அத்தளத்தை யார் நடத்துகிறார் என்பதைக் கண்டறிந்து தளத்தையும் முடக்கி, அதை நடத்திய நபரையும் கைது செய்துவிட்டார்கள். எல்லாமே காதும் காதும் வைத்தாற் போல நடந்தது. இங்கேயும் இப்படி யாருக்கேனும் நடந்தால், உடனடியாக காவல்துறையை அணுகவேண்டும். பலவழக்குகளில், காவல்துறை ரகசியம் காப்பாற்றும் நண்பனாகவே இருக்கிறது. அதனால், தயங்காமல் பெற்றோர் செயல்படவேண்டும்” என்கிறார்,மருத்துவர் கீர்த்திபை.
இப்படியெல்லாம் நமக்கு நடந்துவிடாது என்று நம்பும் நல்மனது நமக்கு இருக்கலாம். ஆனால் நடந்துவிட்டால், துளியும் தயங்காது உடனடியாக அக்கயவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க காவல்துறையினரை அணுக வேண்டும்.
இன்று பதின்பருவபிள்ளைகள் பலருக்கும், ஃபேஸ்புக் மாதிரியான இடங்களில் கணக்கு இருக்கிறது. மொபைல் கேமராக்களின் உதவியோடு, இஷ்டம் போல செல்ஃபி எடுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கும் இப்படியான படங்களின் மூலம் எதிர்வரும் ஆபத்துக்களைப் பற்றி சொல்லிக்கொடுங்கள். பெயர், விலாசம், தொடர்புஎண், படிக்கும்பள்ளி, கல்லூரி என தங்களைப் பற்றிய விபரங்களை பொதுவெளியில் வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். இதன் மூலமும் சமூகவிரோதிகள்,குழந்தைகளை எளிமையாக நெருங்கி விட வாய்ப்பு உள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்ற எந்தவொரு சமூகவலைத்தளங்களிலும் குழந்தைகளின் படங்களை கடைவிரிப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக, பெண்குழந்தையின் படங்களைப் பகிர வேண்டாம். வக்கிரம் பிடித்தவர்களின் கைகளில் இப்படங்கள் சிக்கினால், தேவையற்ற மனஉளைச்சல் பெற்றோராகிய நமக்கும் நம் வீட்டுச் செல்லங்களுக்கும்தான். எச்சரிக்கையாகஇருப்போம். குழந்தைகளின் தனி உரிமை நலன் காப்போம்!
வாங்க,பழகலாம்!
- பிள்ளைகளுக்கும் அந்தரங்கம் உண்டு என்பதை உணர்ந்து, பெற்றோர் பழக வேண்டும். எந்த உறவுகளும், எல்லை மீறி குழந்தைகளின் அந்தரங்கத்துக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.
- ஃபேஸ்புக் போன்ற சமூகதளங்களில் உங்கள்பிள்ளைகள் இருந்தால், அவர்களின் நட்புவட்டத்தில் நீங்களும் இருங்கள். அதன் சாதகபாதகங்களைச் சொல்லிக்கொடுங்கள்.
- நல்லவற்றை வழிகாட்டுகிறேன் என்று அட்வைஸ் மழை பொழிந்து, பிள்ளைகளை ஓட வைத்துவிட வேண்டாம். பக்குவமாக எடுத்துச்சொல்லுங்கள்.
- அந்தரங்கமாக செல்ஃபி படங்கள் எடுத்துக்கொள்வதோ, நண்பர்கள், தோழிகளுடன் அரைகுறை ஆடைகளுடன் படம் எடுத்துக்கொள்வதோ கூடாதுஎன்பதை, பிள்ளைகளுக்குப் புரியும் வண்ணம் சொல்லலாம்.
- தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்டால், பயமில்லாமல் நம்மிடம் பிள்ளைகள் பகிர்ந்து கொள்ளும் சூழல் இருக்கவேண்டும். இதைச் சொன்னால், அம்மா, அப்பா திட்டுவார்கள் என்ற பயம் பிள்ளைகளுக்கு இருந்தால், உண்மையைச் சொல்லாமல் மறைத்துவிட வாய்ப்பு உள்ளது.
- பிரச்சனை என்று வந்துவிட்டால், கொஞ்சமும் தாமதிக்காமல் காவல்துறையின் உதவியை நாடுவது நல்லது. சம்பந்தப்பட்ட சமூகவலைத்தளத்தின் நிர்வாகத்தையும் உடனே தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட பக்கத்தை அல்லது தளத்தை முடக்கச் செய்யலாம்.
- குடும்பப்புகைப்படங்கள், குழந்தைகளின் புகைப்படங்களை குடும்ப உறுப்பினர்கள், நம்பகமான நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாக இருந்தால், முகநூலில் ‘யாருடன் இவற்றைப் பகிர விருப்பம்?’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள வசதியைப் பயன்படுத்தி, நெருங்கியவட்டத்தை மட்டும் அனுமதிக்கலாம்.
———————-
நன்றி – செல்லமே மாத இதழ்(ஜூன்).
ரொம்பச் சரி. அதென்னவோ செல்பி மோகம் பலரையும் ஆட்டிவைக்குது 😦
பெற்றோர்கள் உட்பட அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்… நன்றி…
அன்பு லக்ஷ்மி. பயங்கரமாக உள்ளது சைபர் உலகம். பிள்ளைகளுக்குத் தெரியவில்லையே .
முதலில் பெற்றோர் உணரட்டும். மிக நன்றி மா. இங்கு இவர்கள்
ஒருவர் படமும் நான் இதுவரை வெளியிட்டதில்லை.