தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்று கண்டறிந்து, உறுதிப்படுத்தப்படும் நாளில் எல்லா பெற்றோரும் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாவர். சிலர் வாய்விட்டு அழலாம் இன்னும் சிலர் அழாமல் உறைந்துபோய் இருக்கலாம். ஆனால் எல்லாப் பெற்றோருக்கும் தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு குறைபாடு என்பதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மன அழுத்தம் என்பது தவிர்க்கமுடியாதது.
அதனால்தான், குழந்தையை பரிசோதித்து, குழந்தையின் பெற்றோரிடம் இப்படியான குறைபாடுகள் பற்றிய செய்தியைத் தெரிவிக்கும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்கள், பெற்றோரின் அதிர்ச்சியை குறைக்கவும், அலைபாயும் அவர்களின் மனதிற்கு ஒரு பற்றுக் கோலாகவும் இருக்கட்டும் என்று சில தேய்வழக்கான வசனங்களைச் சொல்வதுண்டு.
”இவர்கள் தெய்வீகமான குழந்தைகள். இவங்கள பாத்துக்க உங்கள மாதிரி சிறப்பான பெற்றோராலதான் முடியும் என்பதால்தான் உங்ககிட்ட கடவுள் கொடுத்திருக்கார்” என்று தொடங்கி இன்னபிற நம்பிக்கையூட்டும் சொற்றடர்களை மருத்துவர்களும், கவுன்சிலிங்க் தருபவர்களும் ஆரம்பக்கட்டத்தில் அவ்வப்போது சொல்வார்கள். இது ஏதோ இங்குமட்டுமல்ல, உலகம் முழுமைக்குமே இதே வசனம் கொஞ்சம் முன்பின்னாக அப்படியே சொல்லப்படுகிறது.
குழந்தை வளரத்துவங்கியதும் அதன் அதீத துறுதுறுப்பு, சமூகத்தின் விதிகளை புரிந்துகொள்ள முடியாமை, அடிக்கடி ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஆகியவற்றால் அக்குழந்தை மற்றவர்களுக்குக் காட்சிப்பொருளாகத் துவங்கும்.
“புள்ள வளக்கத் தெரியாம, வளத்தா இப்படித்தான்” என்பது போன்ற, குழந்தை வளர்ப்பைக் குற்றம் சொல்லும் வார்த்தைகளை பொதுவிடங்களிலும், உறவினர் மத்தியிலும் அடிக்கடி கேட்க நேரிடும்.
பெற்றோர் இருவரும் வேலைக்குப் போவதன் சாத்தியக்கூறுகள் குறையும். அதைவிட முக்கியமாய் பல்வேறு தெரபிகளுக்கும், பள்ளிக் கட்டணங்களுக்குமாக பணம் தண்ணீராய் செலவாகும். இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் ஒரு பக்கம் வளரும். ஆட்டிச நிலையாளர்கள் அனைவருக்குமே பொதுவான பிரச்சனைகளான தூக்கக் குறைவு பெற்றோரையும் சேர்த்தே ஆட்டிப்படைக்கும்.
எல்லாவற்றையும் விட குழந்தை வளர வளர, பெற்றோராகிய நமக்கு உடல்நலம் தளரத் தொடங்கும். இந்த எதிர்விகித வளர்ச்சியால் நமக்குப் பின் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும் என்ற பதிலில்லாத கேள்வி நம்மை மருட்டக்கூடும்.
இக்காரணிகள் அனைத்தும் அந்த பெற்றோரின் உடல் நிலையை பாதிக்கிறது. மன அழுத்தத்தினால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் துவங்கி பல்வேறு தொடர் உடல்நலக் குறைபாடுகள் தலை காட்டக்கூடும். நடுத்தர வயதிலேயே இப்படியான உடல்நலக்குறைபாடுகளில் சிக்கிக் கொள்ளும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.
ஒரு மனிதனுக்கு வரக்கூடிய துன்பங்கள் எல்லாவற்றையும் இப்படி ஒரு தனிப்பாடல் பட்டியலிடுகிறது.
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோவேந்தருழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்,
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்
பாவி மகன் படுந்துயர் பார்க்கொணாதே.
இப்பாடலைப் போல, சிறப்பு நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கு இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் பட்டியலிடுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.
தங்களின் உடல் நலனிலும் அக்கரை கொள்ளுங்கள் என்பதையே இங்கே வழியுறுத்த விழைகிறேன்.
இன்று எல்லோருமே உடல் நலனில் அக்கரை செலுத்தவேண்டிய கால கட்டத்தில்தான் வாழ்கிறோம் என்றாலும், சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர் சற்றே அதிகக் கவனத்துடன் தமது உடல் மன நலங்களைக் காத்துக் கொண்டால் மட்டுமே அக்குழந்தைகளின் வாழ்வைப் பாதுகாத்து பரிமளிக்கச் செய்யமுடியும்.
சராசரிக் குழந்தைகள் எந்த பிரத்யேக முயற்சியுமின்றி அடைந்துவிடக்கூடிய தன்னிச்சையான வாழ்வை அடையவே, சிறப்புக் குழந்தைகள் நிறைய போராட வேண்டியிருக்கும். இந்நிலையில் அக்குழந்தைகளின் பெற்றோருக்கு இன்னமும் கூடுதல் பொறுப்புகள் வாழ்நாள் நெடுகிலும் காத்திருக்கின்றன.
எனவே அதற்கான வழிமுறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். மேலைநாடுகளில் ஆட்டிசக் குழந்தையின் பெற்றோர் ஓய்வெடுக்க, மனநல ஆலோசனைக்கு என பலதரப்பில் அரசு உதவுகிறது. இந்தியா மாதிரியான நாட்டில் அவை வருவதற்கு இன்னும் சில பல காலங்கள் ஆகலாம். அதற்குள்ளாக நாமே திட்டமிட்டுக்கொள்ளவேண்டும். அதற்கென சில அனுபவ வழிமுறைகளை இங்கு சொல்ல விழைகிறேன்.
தன்னலம் பேணுவோம்
குழந்தை பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருக்காமல் பெற்றோருக்கு 30 வயது கடந்த பின்னர் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை (Master Health Check up) செய்து கொள்வது நலம்.
ஒரு சிறப்புக் குழந்தையின் அம்மாவாகவோ அப்பாவாகவோ இருப்பதைத் தாண்டி, தனி மனிதராக தங்களது தேவைகள், ரசனைகள் போன்றவற்றையும் தக்க வைத்துக் கொள்வது முக்கியம்.
குறிப்பாக அன்னையரில் பெரும்பாலானோர் ஆரம்பக்காலத்தில் தங்களது சுயத்தைப் பற்றிய அக்கறையின்றி, குழந்தையின் வளர்ச்சி குறித்து மட்டுமே யோசிப்பவர்களாக மாறிவிடுகின்றனர். இது நீண்ட கால நோக்கில் பலருக்கு கடுமையான மன அழுத்தத்திற்கு வழிவகுப்பதை பார்த்திருக்கிறேன். நமக்கான பிரத்யேகமான ஆளுமையையும் ஒரளவுக்கேனும் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
குழந்தையின் நலன் கருதி குடும்பத்தில் இருக்கும் தாயோ, தந்தையோ வேலையை விட்டிருப்போமேயானால், குழந்தைகள் ஒரளவு வளர்ந்த பின்னர் வீட்டிலிருந்தே செய்யக் கூடிய அல்லது பகுதி நேர வேலை வாய்ப்புகளைத் தேடிக் கண்டடையலாம். அதெப்படிங்க முடியும் என்று மட்டும் கேட்டுவிடவேண்டாம். இந்த கொரோனாவினால் அரசு போட்டுள்ள ஊரடங்கு வீட்டில் இருந்த வேலை செய்வது எப்படி என்பதை நம்மில் பலருக்கும் கற்றுக்கொடுத்திருக்கும்.
அடுத்ததுதான் முக்கியமானது, நமது ரசனை சார்ந்த விருப்பங்களை (வாசிப்பு, இசை, நடனம், ஓவியம்) கைவிடாது தொடர வேண்டும். பள்ளி, கல்லூரிக் காலங்களில் நமக்கென சில ரசனைகள் இருந்திருக்கும். அவற்றை மீட்டெடுத்து, அதில் ஈடுபடுங்கள்.
குடும்ப நேரம்
குடும்ப நேரம் என்பதை திட்டமிட்டுக் கொள்ளவேண்டும். தினந்தோறுமோ அல்லது வார இறுதியிலோ குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து நேரம் செலவழிக்க வேண்டும். ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதுபோல் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் வேடிக்கையும் விளையாட்டுமாக பேசிக்கொண்டிருப்பது நல்லது.
பயணங்கள் அவசியம்:
வாழும் சூழலில் இருந்து விலகிப் பயணித்து விட்டு மீண்டும் வரும் போது கிடைக்கும் புத்துணர்ச்சி மிகவும் அவசியமான ஒன்று. சிறப்புக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு பயணங்களையாவது குடும்பத்தோடு மேற்கொள்வது நமது ஆற்றலைக் கூட்டும்.
இவை எல்லாவற்றையும் விட போராட்ட குணத்தை இழக்காதிருப்பது அவசியம். அதிகம் விழிப்புணர்வு இல்லாத நம் சமூகச் சூழலில், நாமும் நம் குழந்தைகளும் சுரண்டலுக்கும் ஒதுக்கலுக்கும் உள்ளாக வாய்ப்புகள் அதிகம். அவற்றை வாய் மூடி சகித்துக் கொள்வது என்பது பெருந்துன்பம். எனவே அவற்றை எதிர்த்துப் போராடும் மனத்திடத்தையும் உறுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பேசவோ, தான் நினைப்பதையோ பகிர்ந்துகொள்ள முடியாத நம் குழந்தைகளுக்கு நாம் தான் வழக்கறிஞராக இருக்க முடியும் என்பதை ஒவ்வொரு சிறப்புக்குழந்தையின் பெற்றோரும் உணர்ந்து செயல்படுவதே எதிர்காலத்திற்கான நம்பிக்கையாக அமையும்.
அன்பு லக்ஷ்மி,
இது நிறைய பெற்றோர்களுக்கும் பொருந்தும்.
சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு மிகத் தேவை.
இந்த விழிப்புணர்வு சீக்கிரமே வர உங்கள் பதிவுகளும், வீடியோ காட்சிகளும் உதவும்.
உங்கள் ,பாலா இருவரின் உடல்,மன ஆரோக்கியத்துக்கு
என் நல் ஆசிகள். அன்பு கனி,இன்னும் நிறைய
இசையில் முன்னேறுவான்.
ஆரோக்கியமாக இருப்பான்.