திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகள் இவ்வரிசையின் உச்சங்கள் என்றே சொல்லலாம். ராஜா கேசவதாஸ், வேலுத்தம்பி தளவாய் ஆகிய திவான்களின் வாழ்வை போழ்வு, இணைவு ஆகிய கதைகள் பேசுகின்றன. ஆயிரம் ஊற்றுக்கள், லட்சுமியும் பார்வதியும், மலையரசி போன்ற கதைகள் பத்மநாப சுவாமியின் கோவில் நிலவறைச் செல்வத்தைப் பற்றிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
மந்திரவாதம் கற்றுக் கொள்பவர் அனைவரும் எதிர்கொள்ளும் இடர் ஒன்று உண்டு. அவர்களால் உபாசனா மந்திரங்கள் மூலம் எத்தனையோ துர்தேவதைகளை, யட்சிகளை, குட்டிச் சாத்தான்களை கட்டிலடக்கி காரியம் சாதிக்க முடியும். ஆனால் மந்திர உச்சாடனங்கள் தெளிவுடன் இருந்தாக வேண்டும். பல் போனால் சொல் போகும் என்பதால் முதுமையில் மந்திர உச்சாடனம் சரியில்லாது போக, அதே துர்தேவதைகளால் கொன்று வீசப்படுவதும் உண்டு. அதே கதைதான் வெள்ளையரை நம்பிய சிற்றரசர்களுக்கும்.
போழ்வு, இணைவு கதைகளில் பேசப்படும் வேலுத்தம்பி தளவாயின் வரலாறு நமக்கு நன்கு அறிமுகமான வார்ப்புருவில் செல்லும் கதை. வெள்ளையரை நம்பிய பாளையக்காரர்கள் அனைவருக்கும் நடந்த அதே கதைதான். நாட்டு நலனுக்காக கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கப்பம் கட்டத் துவங்கி, அவர்களின் ரத்த தாகத்தை தன்னால் தீர்க்க இயலாது என்று உணரும் போது போரிட்டு அழியும் ஒரு வீரனின் கதை. ஆனால் இதற்குள் வேலுத்தம்பியின் ஆணவம் பெருகி வரும் வழியையும், அதைச் சுட்டும் மாவிங்கல் கிருஷ்ணப்பிள்ளையின் கொடூரக் கொலையும் வீரத்தின் இன்னொரு பக்கம். இணைவு கதையில் இறக்கும் போது வேலுத்தம்பி சொல்லும் சொற்கள் அவரது குற்ற உணர்வைக் காட்டுகிறது. அதிலும் அந்த அரச உடை அதிகார வெறியின் குறியீடாகவே காட்டப்படுகிறது. கண் முன்னால் ஒரு அழிவைக் கண்டும் கூட விட்டில் போல அதே அதிகார விழைவைத் தவிர்க்க முடியாமல் வேலுத்தம்பி சரிந்திறங்குவதை சொல்லும் கதைகள் இவ்விரண்டும்.
2011ல் பத்மநாப சுவாமி கோவில் நிலவறைச் செல்வங்கள் வெளிப்பட்ட காலம் தொட்டே ஜெயமோகன், அச்செல்வக் களஞ்சியம் திருவிதாங்கூர் அரச வம்சம், பஞ்ச காலத்தில் மக்கள் நலன் காக்கவென்று சேமித்து வைத்திருக்கும் புதையல் என்றே சொல்லி வந்திருக்கிறார். இது அவரது விருப்புக்குரிய ஊகம் என்பதற்கப்பால் வேறெந்த புறவயமான ஆதாரமும் இல்லாத கருத்தாகும். ஆனால் ஒரு புனைவாசிரியராக இந்த ஊகம் அவருக்குப் பெரிய உத்வேகம் அளித்திருப்பதை இக்கதைகளில் காண முடிகிறது.
ராஜராஜ சோழன் காந்தளூர்ச்சாலை கலமறுத்து அருளிய பின் நெடுநாட்களுக்கு கேரளம் சோழ அரசின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆனால் சோழர்களின் கைப்பிடி தளரத் தொடங்கியதும் சொரூபங்கள் என்றழைக்கப்பட்ட உள்ளூர் அரசுகள் பலம் பெறத் தொடங்கின. அப்படி வளர்ந்த அரசுகளில் ஒன்றுதான் தென் கேரளத்தையும், நாஞ்சில் நாட்டையும் ஆண்ட திருவிதாங்கூர் அரச வம்சமும்.
சேர வம்சத்தைச் சேர்ந்தவரான குலசேகரப் பெருமாள் கொடுங்கல்லூரிலிருந்து கிளம்பி வருகிறார். வந்த இடதில் தலக்குளம் சொரூபம் அல்லது திருப்பாப்பூர் சொரூபம் என்றழைக்கப்பட்ட சிற்றரசில் ஒரு இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது அவ்விளவரசிக்கான கன்யா சுல்கமாகத் தரப்பட்டதே அந்த செல்வக்குவை என்பதே ஜெயமோகன் முன்வைக்கும் ஊகம்.
வேணாடு என்றழைக்கப்பட்ட திருவிதாங்கூர் அரசு முழுமையும் மருமக்கள் தாயம் எனும் வாரிசு முறையைப் பின்பற்றுபவை. அதாவது நாடு மகாராணிக்கு சொந்தம். ஆனால் அரசராக அந்த ராணியின் மூத்த அண்ணன் இருப்பார். பிறகு ராணியின் மூத்த மகளுக்கு அரசு செல்லும். அதே நேரம் ராணியின் மூத்த மகனே அரசனாகப் பொறுப்பு ஏற்பார். அதாவது ஒரு அரசனுக்குப் பிறகு அவரது மகன் அரசனாக முடியாது, அவரது மருமகனே அரசனாவான். ஆனால் அரசியாக இருப்பவரது மகளே அடுத்த அரசி. சொத்துடைமை பெண் வழியாக வாரிசுகளுக்குச் செல்ல, அந்த சொத்துக்களுக்கு காவல் காக்கும் உரிமை மட்டுமே ஆண் வாரிசுகளுக்கு இருக்கும் என்பதுதான் இதன் பொருள்.
அரச குடும்பத்தில் மட்டுமல்லாது கேரளத்தின் பல முக்கிய சாதிகளுக்கும் மருமக்கள் தாயமே சொத்துரிமைக்கான விதியாக இருந்தது. நாயர், மேனன், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களில் ஒரு பிரிவினர் என உயர்சாதிகளுக்கு மட்டுமல்லாது புலையர் போன்ற சாதிகளுக்கும் கூட சொத்துரிமை பெண் வழியாக கைமாற, ஆண்கள் காரணவர் எனும் பொறுப்பில் சொத்துக்களின் பாதுகாவலராக மட்டுமே இருந்தனர். தலை எண்ணி பாகம் பிரித்தல் எனும் வித்தியாசமான பாகப் பிரிவினைகளும், காரணவர்கள் தங்கள் சொந்தக் குடும்பத்துக்காகச் செய்யும் ஊழல்களும் என இந்த சொத்துரிமை பிரிட்டிஷ் காலத்தில் கந்தரகோலமாக மாறிய வரலாற்றைப் புரிந்து கொள்ள கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் மருமக்கள் வழி மான்மியம் போன்ற நூல்கள் உதவலாம்.
எனவே திருவிதாங்கூர் அரச வம்சத்தில் சுவீகாரம் எடுத்தல் என்பது பெண் வாரிசுகளையே சுவீகரிப்பதாக இருக்கும். அவ்வகையில் ஆயிரம் ஊற்றுக்கள் கதையின் உமையம்மை ராணியும் சரி, லட்சுமி பாய்(சுவாதித் திருநாள் அரசரின் அன்னை), பார்வதி பாய் ஆகியோரும் சரி தத்தெடுக்கப்பட்டே அரச வம்சத்திற்கு வாரிசாகின்றனர். இந்திய மரபில் வாரிசுரிமை என்பது நேரடியாகக் குருதித் தொடர்பால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. அதிலும் செல்வம் அதிகமிருக்கும் இடங்களில் எப்போதும் சந்தான பாக்கியம் சற்று தட்டுப்பாடாகத்தான் இருக்கும். எனவே நிறைய அரச வம்சங்களிலும், செல்வந்தர் இல்லங்களிலும் சுவீகாரம் இயல்பான ஒன்று.
இந்த நெறிகளைப் புரிந்து கொள்ளும் போதுதான் ஆதித்ய வர்மா சுவீகாரம் எடுத்த உமையம்மை அவரது மகளாகாமல், மருமகளாக சொல்லப்படுவது ஏன் என்பதில் தொடங்கி ராணி லட்சுமிபாய் இறந்த பின்னர் அவரது கணவர் உயிரோடிருக்கும்போதும் ஏன் அவரது தங்கை பார்வதிபாய் ரீஜண்ட் ராணியாகிறார் என்பது வரையிலான வாரிசுரிமைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியும்.
மலையரசி என்று ஜெயமோகன் உருவகப்படுத்தும் ராணி பார்வதிபாய் சேரர்களின் கருவூலத்தைக் கொண்டு கஞ்சித் தொட்டிகள் திறந்து திருவிதாங்கூர் அரசை வளம் பெறச் செய்ததை லட்சுமியும், பார்வதியும் கதையில் காணமுடிகிறது. கவிஞனும், பாடகனுமான மென்மையான சுவாதித் திருநாள் ராமவர்மா மகராஜா பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நசுங்கும்போதும் மீண்டும் அரசைத் தாங்கிக் கொள்பவராக, தனது அடுத்த தயாரிப்பான மார்த்தாண்ட வர்மாவை முன்னிறுத்தி அரசை வலிமைப்படுத்துபவராக பார்வதிபாயின் கதாபாத்திரம் கதையில் விஸ்வரூபம் எடுக்கிறது.
எல்லா வரலாற்றுப் புனைவுகளையும் போல இதுவும் ”இருந்தா நல்லா இருக்கும்” என்கிற தசாவதார வசனம் போலவே இருக்கிறது. அரசர்களும், அரசிகளும் இத்தனை தொலைநோக்குப் பார்வையும், மானுட நேசமும், அதே நேரம் மன உறுதியும் உள்ளவர்களாக இருந்திருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
*******
தொன்மங்களைப் பற்றிய கதைகளில் மூத்தோள் என்னை மிகவும் வசீகரித்த கதை எனலாம்.
நம் மரபில் தவ்வை, மூத்தோள், பழையோள், முகடி, ஜேஷ்டா தேவி என்றெல்லாம் அழைக்கப்படும் தேவியை வணங்குவது காலகாலமாக உள்ள வழக்கம்தான்.
ஜேஷ்டா தேவி வருணனின் மனைவி என்றும் அவளுக்கு குளிகன்/மாந்திகன் என்ற மகனும், மாந்தி என்ற மகளும் உண்டு என்பது ஐதீகம். பழங்குடிகள் வழிபட்ட ஏழன்னை வழிபாடு எனும் வரிசையில் இருப்பவள் ஜேஷ்டா தேவி. குப்பைகளை சேகரிக்கும் துடைப்பம், அழுக்கினை சுமக்கும் கழுதை, காகக் கொடி என அழுக்கின் வடிவமாக ஜேஷ்டை காணப்பட்டாலும் அவளே வளமை தருபவளாக, துயர் நீக்குபவளாகவும் வழிபடப் படுகிறாள். இன்னொரு விதத்தில் பார்த்தால் ஜேஷ்டையோடு தொடர்பு படுத்தப்படும் எல்லாப் பொருட்களுமே உரமாகக் கூடியவை. சாம்பல், குப்பை, மலம் என எல்லாமே உரமாக மாறக் கூடியவை என்பதாலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் மரபில் ஜேஷ்டை வழிபாடு வேரூன்றியிருக்கக் கூடும்.
மூத்தோள் கதையில் மாமங்கலையான பகவதியின் கோவில் கும்பாபிஷேகத்திற்காக தந்திரி ஒருவரின் ஆலோசனை கேட்கப் படுகிறது. ஆய்வுக்காக வரும் தந்திரி ஜேஷ்டையின் சன்னிதி அங்கிருப்பதைப் பார்த்து எரிச்சலாகிறார். மந்திரப் பிரதிஷ்டையை நீக்கி, அச்சிலையை பின்னப்படுத்தி குளத்தில் எறிகிறார். ஆனால் அச்சன்னிதியில் பரம்பரையாக உபாசனை செய்துவரும் அணைந்த பெருமாள் தன் குலத்தின் உபாசனா மூர்த்தி அப்படி தூக்கியெறியப்படுவதைக் கண்டு பதைக்கிறார். வெளிச்சமும் இருளும் பிரிக்க முடியாதவை, அமங்கலம் இல்லாத மங்கலம் சாத்தியமே இல்லை என்பதையெல்லாம் தன்னால் ஆன அளவு விளக்கிப் பார்க்கும் அணைஞ்சி, முடிவில் தன் தெய்வத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார். ஆனால் யதேச்சையாக ஜேஷ்டையின் விஸ்வரூப தரிசனத்தைப் பெறுகிறார். அக்காவின் காலடியில் சிற்றுருவமாக அமர்ந்து கருவறைக்குள் பூசனைகளைப் பெற்றுக் கொள்ளும் தங்கையாகிய பகவதியைக் காணும் பேறு அவருக்குக் கிடைக்கிறது. பரம்பரையாக அவர் குடும்பம் செய்த தவப்பயனே அதுதானோ என்று தோன்றுகிறது.
ஜேஷ்டா தேவியின் மகனாகிய குளிகனுக்கு ஒரு கால் ஊனம் என்று சொல்லும் ஐதீகமுண்டு. இங்கு ஜேஷ்டையின் ஒரே பக்தனாகிய அணைஞ்சிக்கும் ஒரு கால் ஊனம் என்பது பல தளங்களில் விரியும் பொருள் கொள்கிறது. ஆபகந்தியும் இதே திருமகள் – மூதேவி எனும் இணையைப் பற்றிய கதைதான் என்றாலும் முந்தைய கதை தரும் உணர்வெழுச்சியை இக்கதை தருவதில்லை.
வரலாற்றுக் காலத்து கேரளத்தைப் பொறுத்தவரை அரசர்கள், திவான்/தளவாய் எனும் பெயர்களில் அழைக்கப்படும் அமைச்சர்கள்/தளபதிகள், பேஷ்கார்கள் என்றழைக்கப்படும் சிற்றமைச்சர்கள் அல்லது காரியஸ்தர்கள், மாடம்பி எனும் உள்ளூர் நிலக்கிழார்கள், அம்ம வீடு எனும் பெயரில் அரசர்களுக்குப் பெண் கொடுத்த தரவாடுகள், நம்பூதிரிகள் என உயர் வர்க்கத்தவர்கள் யார் வேண்டுமானாலும் மற்ற ஜாதியினர் மீது குற்றம் சுமத்தி, அவர்களுக்கு கழுவேற்றம் உள்ளிட்ட எந்த சித்திரவதையும் தண்டனையாக விதிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அப்படியாக பத்மநாபபுரம் கோட்டைக்கு வெளியே கழுவேற்றப்பட்ட கரியாத்தன் எனும் புலையனின் கதைதான் கழுமாடன்.
மருமக்க தாயத்தினால் மட்டுமல்லாது பல்வேறு மேலதிக கட்டுப்பாடுகளாலும் கூட வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு கேரளத்தின் ஆண் – பெண் உறவுகள் இடியாப்ப சிக்கலாகவே தென்படும். நம்பூதிரி குடும்பங்களில் மூத்த ஆண் மட்டுமே சக நம்பூதிரிக் குடும்பங்களில் இருந்து முறையாகத் திருமணம் செய்து கொள்ள முடியும். சொத்துக்கள் பிரிவினைக்கு ஆளாகமலிருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. அப்படியானால் மற்ற சகோதரர்கள் பற்றற்ற துறவிகளாகி விட முடியுமா என்ன? அவர்கள் எல்லாம் மருமக்க தாயம் உடைய, தரவாடுகளில் நாயர் பெண்களோடு சம்பந்தம் செய்து கொள்வார்கள். அவர்களுக்கு அத்தரவாட்டில் பிறக்கும் பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர்கள் தாயின் சந்ததியினராக மட்டுமே தொடர்வார்கள். நம்பூதிரிகளின் வீட்டுச் சொத்துக்கு எந்தப் பங்கமும் வராது. ஆக நம்பூதிரி ஜாதியில் திருமணங்களே அபூர்வம் என்பதால் அக்குடும்பங்களில் ஏகப்பட்ட பெண்கள் திருமண வாய்ப்பே இல்லாமல் இருக்க வேண்டியிருக்கும் இல்லையா? இப்படியான சிக்கலான சமூகப் பொருளாதாரக் காரணங்களால் பொருந்தா மணங்களும், கன்னி கழியாமலே காலம் முழுவதும் வாழும் பெண்களும் எல்லா உயர் குடும்பங்களின் அந்தப்புரங்களிலும் நிறைந்திருப்பார்கள்.
தாத்ரிக் குட்டியின் ஸ்மார்த்த விசாரம் போன்ற நூல்கள் இது போன்ற சூழலில் நிகழும் பாலியல் பிறழ்வுகளைப் பற்றியும், அவற்றுக்கான தண்டனைகளைப் பற்றியும் பேசுகின்றன. அத்தகைய பாலியல் பிறழ்வுகளில் பிடிபடுவோர் நாயர், நம்பூதிரி ஜாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஜாதி விலக்கமும், நாடு கடத்தலும் தண்டனையாக வழங்கப்படும். குற்றவாளிகள் ஜாதிப்படிநிலையில் கீழே செல்லச் செல்ல தண்டனை தீவிரமாகும். நாயர்களுக்குக் கீழ்ப் படிநிலையில் இருக்கும் யார் ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டால் பெரிய விசாரணைகள் ஏதுமின்றி கழுவேற்றம் அல்லது சிரச்சேதம் தண்டனையாக வழங்கப்படும். அப்படியாக தரவாட்டுக் குடும்பம் ஒன்றில் கைக்கிளைத் திருமண பந்தத்தில் சிக்கிய பெண்ணோடு தொடர்பு கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கழுவிலேறும் அப்பாவிதான் கரியாத்தன். கழுவேற்றத்திலிருந்து தப்ப வாய்ப்புக் கிடைக்கும் போதும் கூட தன் உயிரையே ஆயுதமாக்கி தன்னை அநியாயமாய் சிக்க வைத்த குடும்பத்தை அவன் பழிவாங்கும் விதம் மனதை உலுக்குகிறது.
இதற்கு முன் ஜெயமோகன் எழுதிய, அறம் வரிசைக் கதைகளில் ஒன்றான வணங்கான் கதையிலும் ஓர் இடதில் “பாவப்பட்டவன் பழிவாங்கணும்னா அவனுக்கு அவனோட சொந்த உடம்பு மட்டும்தானே இருக்கு” என்றொரு வரி வரும். ஆம், கரியாத்தன் தெய்வமாகி அக்குடியைப் பழிவாங்குவதில் முடிகிறது இக்கதை.
கரியாத்தனுக்கான கழு பீடத்தில் அளவு பார்க்க உட்காரும் சுண்டனும் அடுத்த கழுமாடனாகும் ’பீடம்’ கதையில் புலையர் பெண்களை அடிமைகளாக விற்கும் முறையும், அதன் கொடுமையும் பேசப்படுகிறது. ஆனால் அக்கதையின் சொல்லும் முறை ஆராய்ச்சிக் கட்டுரையின் தொனியில் இருப்பதால் உணர்வுகளை சரியாகக் கடத்துவதில்லை. அந்தத் கதையில் புள்ளுவர்களின் பாடல்களுக்கும், பெண்களின் பானைப்பாட்டுகளுக்குமான வித்தியாசத்தை சொல்லுமிடம் மட்டுமே மனதில் நிற்கிறது.
(தொடரும்)
************
ஜெயமோகனின் நூறு கதைகள் – பகுதி 1
ஜெயமோகனின் நூறு கதைகள் – பகுதி 2
ஜெயமோகனின் நூறு கதைகள் – பகுதி 4
ஜெயமோகன் எழுதிய நூறு கதைகளின் தொகுப்புக்கான சுட்டி இங்கே.
Pingback: ஜெயமோகனின் நூறு கதைகள் – 1 | மலர்வனம்
Pingback: ஜெயமோகனின் நூறு கதைகள் – 2 | மலர்வனம்
Pingback: ஜெயமோகனின் 100 கதைகள் – 4 | மலர்வனம்