’என் சரித்திரம்’ நூலில் உ வே சா தன் குருநாதரான மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நெகிழ்வுடனும், மட்டற்ற மரியாதையோடுமே விவரிப்பதைக் காணலாம். அவரிடம் தமிழ் கற்கச் சேர்ந்த சில நாட்களிலேயே ”உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா” என்று கேட்கிறார். “வீட்டில் என்னை சாமா என்று அழைப்பார்கள். சாமிநாதன் என்ற பெயரின் சுருக்கம் அது” என்கிறார் உவேசா. அப்படியானால் இனி நான் உம்மை சாமிநாதன் என்றே அழைக்கிறேன் என்று சொல்லி விடுகிறார் குரு. தீவிர சைவரான மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு வேங்கடரமணன் என்ற பெயரை அடிக்கடி சொல்வதற்குக் கூட விருப்பமில்லை என்பது அவரின் ஒரு பக்கம். அதனால் அவரது தமிழ்ப் புலமையையோ, கற்றதை மற்றவருக்குச் சொல்லித் தரும் திறனையோ யாரும் குறைத்து மதிப்பிடப் போவதில்லை.
எல்லாத் தரப்பிலும் இது போன்ற ஆட்கள் உண்டு. ஆனால் எனக்குத் தெரிந்தவரை பெரும்பான்மை வைணவர்களிடம் இந்த மறந்தும் புறந்தொழாப் பண்பு சற்றுக் கூடுதலாகவே உண்டு. ’திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு, இரண்டுருவு மொன்றாய் இசைந்து.’ என்ற சிந்தையுடன் இருக்கும் வைணவ சிகாமணிகளை வெகு அரிதாகவே நான் சந்தித்திருக்கிறேன். அதுவும் கூட குற்றமில்லை. தெய்வப் பற்று என்பது அகவயமானதொரு பாதை. அதில் அடுத்தவர் குறுக்கிட எந்த உரிமையும் இல்லைதான்.
ஆனால், ஆன்மீகத்தை அரசியலுக்கான குறுக்குப் பாதையாகக் காட்ட நினைத்து, இல்லாத பக்தியை இருப்பதாகக் காட்டிக் கொண்டு நடிக்கும் போது பார்க்கும் நமக்கு குமட்டிக் கொண்டு வருகிறது
நாத்திகர்கள் புதிதாகவா தெய்வங்களையும் புராணங்களையும் இகழ்ந்து பேசுகிறார்கள்? ஆன்மீகவாதிகளே அடுத்தவர் மதத்தை இகழ்ந்தும், தாழ்த்தியும் பேசுவதெல்லாம் தொன்று தொட்டு நம் மரபில் ஊறிய ஒன்றுதானே? சமணராக இருக்கையில் ’மத்தவிலாச பிரஹசனம்’ எழுதி சைவர்களையும், பௌத்தர்களையும் பழித்த மகேந்திரவர்மனே பிற்காலத்தில் சைவனாகிப் சேத்தகாரி(கோவில்களைக் கட்டுபவன்) என்றுப் பெயர் பெற்றதெல்லாம் நம் வரலாற்றில் உள்ளதுதானே? இத்தகைய விமர்சனங்களுக்குப் பதில் சொல்லலாம், அல்லது புறந்தள்ளலாம் – ஆனால் ஒருபோதும் இவை சட்டவிரோதமானவை என்று சொல்வதும், அதுவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோருவதெல்லாம் உண்மையில் நமக்கு நம் ஆன்மீக நம்பிக்கையின் மீதிருக்கும் தாழ்வுணர்வையே வெளிக்காட்டுவதாக நான் கருதுகிறேன்.
சரி, அதையெல்லாம் கூட விட்டுத் தொலைக்கலாம். நாங்கள் எல்லோரும் முருக பக்தர்கள், அதனால் எங்களுக்கெல்லாம் மனம் புண்பட்டுவிட்டது என்று காட்டவும், இதை ஒரு அடையாள அரசியலாக்கி அதன் மூலமேனும் தமிழகத்தில் இந்து வாக்கு வங்கியைத் திரட்டிவிடலாம் என்பதற்காகவும் பாஜக கையில் எடுத்திருக்கும் வேல் அரசியல், சாயத் தொட்டிக்குள் விழுந்த நரியின் கதையைப் போன்றது. இந்த டிஜிட்டல் யுகத்தில் உடனடியாகவே சாயம் வெளுத்துவிடுகிறது.
குறிப்பாக திருப்பதி நாராயணன், ராகவன், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகிய மூவரும் செய்யும் முருக பூஜைப் புகைப்படங்கள் அவ்வை ஷண்முகியில் கமல் அட்டைப் பிள்ளையார் முன் தாலி கட்டும் காட்சியை நினைவுபடுத்துகின்றன. குறிப்பாக ஒய்.ஜி.மகேந்திராவும் அவர் மனைவியும் ஜன்னல் கட்டையில் வைத்திருக்கும் முருகனின் படத்தை வணங்குவதைப் பார்க்கையில் எழும் எரிச்சல் கொஞ்சநஞ்சமல்ல. இப்படியாவது நீங்கள் முருகனை வணங்கவில்லை என்று யார் அழுதார்கள் மகேந்திரன்?
என் கணிப்பு சரியாக இருக்குமானால் இந்த மூவரையும் இணைக்கும் புள்ளி – இவர்கள் அனைவருமே வைஷ்ணவர்கள் என்பது. இரண்டாவது பத்தியில் நான் வீரவைஷ்ணவர்களைப் பற்றிக் குறிப்பிட்டதன் காரணமும் இதுவே. எந்தக் கடவுளையும் வணங்கவோ வணங்காமலிருக்கவோ எல்லோருக்கும் உரிமையுண்டு. ஆனால் மனதுக்குள் மரியாதையில்லாமல், ஓட்டு வங்கியைக் குறிவைத்து நடிக்காதீர்கள், அதைப் பார்க்கவே மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது.
நான் சொல்வதை ஒருவருக்கு குடும்ப வழியில் பழக்கமில்லாத புதிய வழிபாட்டை செய்யக் கூடாது என்று யாரும் சுருக்கிக் கொள்ள வேண்டாம். அப்படி உள்ளார்ந்த பக்தியோடு ஒரு வழிபாட்டைத் துவங்குபவர்கள் அதை குருமுகமாகவே துவங்க வேண்டும் என்பதுதான் விதி. குரு என்றால் உடனே காவி கட்டிய, ஏதேனும் ஒரு சன்யாசி என்று பொருள் அல்ல. ஏற்கனவே இந்த வழிபாட்டைச் செய்து கொண்டிருக்கும் ஒருவரை (அவர் உங்கள் நண்பராகவோ அக்கம்பக்கத்து வீட்டிலிருப்பவராகவோ கூட இருக்கலாம்) அணுகி, அவரிடமிருந்து வழிபடு முறைகளைத் தெரிந்து கொண்டு அதற்குரிய முறையில் பூஜைகளைச் செய்யுங்கள். வரலெட்சுமி விரதம் போன்றவற்றிற்கு ’எடுத்து வைப்பது’ என்று ஒரு விஷயம் சொல்வார்கள். திருமணத்திற்குப் பின் முதல் முறையாக பூஜை செய்யும் பெண்களுக்கு, ஏற்கனவே அந்த பூஜையைச் செய்து கொண்டிருக்கும் , வயதில் முதிர்ந்த ஒரு பெண்ணே முதல் முறை பூஜை செய்யும் விதத்தைக் கற்றுத் தருவார். அதைப் போல குறைந்த பட்சமான வழிகாட்டுதல்களோடு பூஜைகளைச் செய்வதே சிறப்பு.
செருப்பு வைக்குமிடம், வாசல் காம்பவுண்டு சுவற்றில் காக்காய்க்கு சாதம் வைக்குமிடம் போன்ற மகிமை பொருந்திய ஸ்தலங்களில் வைத்து எந்தக் கடவுளையும் வணங்குவதான நாடகங்களை அரங்கேற்றாதீர்கள். இப்படியான செயல்களில்தான் உண்மையான பக்தர்களின் மனம் புண்ணாகிறது.
அதே நேரம் இங்கே பார்ப்பனர்கள் யாருமே முருகனை வணங்க மாட்டார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதுவும் உண்மையில்லை. ஆதி சங்கரர் வரையரை செய்த அறுவகைச் சமயங்களிலேயே குமரனை வழிபடும் கௌமாரம் உண்டு. ஏற்கனவே இருந்த பஞ்சாயதன பூஜை (சிவனுக்கென நர்மதையில் கிடைக்கும் பாண லிங்கம், ஸ்வர்ணமுகி சிலா எனும் பார்வதிக்கான கல், கண்டகி நதியில் கிடைக்கும் விஷ்ணுவுக்கான சாளக்கிராமம், சூரியனுக்கு உரிய ஸ்படிகம், விநாயகருக்கு உரிய சோணபத்ரக் கல் ஆகிய ஐந்து உருவமில்லாத உருவங்களை பூஜிப்பது) அமைப்பிலேயே ஒரு சிறு வேலையும் சேர்த்து பூஜிக்கும் வழிபாட்டு முறையை சங்கரர் உருவாக்கினார்.
எங்கள் வீட்டில் இந்த பூஜை செய்யும் வழக்கம் கிடையாது எனினும் அப்பாவுக்கு முருக பக்தி அதிகம். அவர் பெயரே முத்துசாமி. எங்கள் வீட்டிலிருந்து(பாபநாசம்) சுவாமிமலை 10 கி.மீ தூரம். இளைஞராக இருந்த போது மாதந்தோறும் கிருத்திகை அன்று வீட்டிலிருந்து கறந்த பாலை எடுத்துக் கொண்டு நடந்து போய் சுவாமிமலை முருகனுக்குக் கொடுத்துவிட்டு வருவாராம். வருடக்கணக்கில் செய்து கொண்டிருந்த இந்த விஷயத்தை 50 வயதுக்கு மேல் உடல்நலக் காரணங்களால் குறைத்துக் கொண்ட போதும் தினமும் காலையில் கந்தசஷ்டி கவசத்தை கேசட்டில் ஒலிக்க விட்டுக் கேட்காமல் இருந்ததில்லை(கூடவே மனதுக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது அவரது மௌனத்தில் இருந்து புரியும்). இதையெல்லாம் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை. அதுதான் சொன்னேனே – ஆன்மீகம் என்பது அகவயப் பயணம். அதில் நாம் போகும் பாதை, அடைந்த உயரம், போக வேண்டிய தொலைவு இவற்றையெல்லாம் யாரும் யாருக்கும் சொல்லிப் புரிய வைக்க முடியாது. ஒரே விதிவிலக்கு குருநாதர் மட்டுமே. அவருக்குத்தான் நமது பலம், பலவீனம் இரண்டும் தெரியும் என்பதால் அவரால் மட்டுமே இதிலெல்லாம் இடையீடு செய்து வழி நடத்த முடியும்.
எனவே படுக்கையறைக்குள் எப்படி கேமிராவோடு நுழைய மாட்டோமோ அப்படியே பூஜையறைக்குள்ளும் கேமிராவோடு நுழையாதிருக்கப் பழகுவோமாக.
புதிய கல்விக் கொள்கை, EIA 2020 இவற்றை மறக்கவே, இந்த நாடகங்கள்… இன்னும் நிறைய வரும்… நாடும் நாசமாகும் – அதில் முக்கியமாக தமிழகம்…
விளக்கமாக அருமையாக சொல்லி உள்ளீர்கள்… நன்றி…