லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் ‘ஆனந்தவல்லி’ நாவல் குறித்துச் சில – அ. மார்க்ஸ்


தஞ்சை மராட்டிய மன்னர் காலத்து ஆட்சியில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை ஒரு அருமையான வரலாற்று நாவலாகப் படைத்துள்ளார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன். இதைச் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது பாரதி புத்தகாலயம் (ஆனந்தவல்லி, பாரதி புத்தகாலயம், பக் 248, விலை ரூ 230).  போன்ஸ்லே வம்சத்துக் கடைசி அரசன் அமரசிம்மன் மற்றும் சரபோஜி மன்னர் காலத்து உண்மை வரலாரொன்றைச் சொல்லும் நாவல் இது.  ஐந்து வயதில் திருமணம் செய்விக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணை, அச்சிறுமியின் ஊதாரித் தந்தையே அரண்மனைக்கு விற்றுவிடுகிறான். தேடித்திரியும் அந்தப் பெண்ணின் இளம் கணவன் மற்றும் குடும்பத்தாரின் சோக வரலாற்றைச் சொல்லும் படைப்பு இது. தேடித் திரிவதோடு கதை முடிந்து விடுகிறது. ஆனால் அதன் ஊடாக இரண்டாம் சரபோஜி காலத் தஞ்சையின் வரலாற்றைச் சொல்லிவிடுகிறது இந்த முக்கிய படைப்பு.

மிக நுணுக்கமாக போன்ஸ்லே வம்ச ஆட்சிக் காலத்திய இந்த அரச (அ)நீதியைச் சொல்லிச் செல்கிறார் லக்ஷ்மி. இது அவரது முதல் நாவலாக இருந்தபோதும், இலக்கியப் பரிச்சியம் மிக்கவராகவும், குறிப்பான ஒரு காலகட்ட வரலாற்றுப் பின்னணியைச்  சொல்வதற்காகக் கடும் உழைப்பை நல்கத் தயங்காதவராகவும் அவர் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளார்.

மன்னர் ஆட்சியின் இறுதிக்காலம் அது. சரியாகச் சொல்வதானால் அப்போதே பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்தின் கீழ்தான் அன்றைய தஞ்சை  இருந்துள்ளது. மராட்டிய பேஷ்வா அரசர்கள் பிரிட்டிஷ் அரசிடம் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு பொம்மை ஆட்சியாளர்களாக இருந்த காலம் அது. பெண்கள் அரண்மனைக்கு விற்கப்படுவது, மிகப் பெரிய அளவில் மன்னர்கள் ஆசை நாயகிகளை வைத்துக் கொள்வது என்பதெல்லாம் ஒரு சாதாரண வழமையாகவும் பெருமையாகவும் இருந்த காலம். அரச மகளிர் அரசனோடு உடன்கட்டை ஏறுவது பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்படுதல் முதலானவை நிகழ்ந்து கொண்டிருந்த காலமும் கூட அது.

மிகப் பெரிய அளவில் சிறு பெண்கள் இப்படி அடிமைகளாக அரண்மனைக்கு விற்கப்படுதல் மட்டுமல்ல தனி நபர்களிடம் இப்படிச் சிறு பெண்கள் அடகு வைக்கப்படுதல் என்பதெல்லாமும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருந்த காலம் அது. இப்படியான சம்பவங்கள் வழக்குகளாகப் பதிவு செய்யப்படும்போது பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்று நீதி கிடைத்ததில்லை. பிரிட்டிஷ் அரசைப் பொருத்தமட்டில் இப்படியான வழமைகளில் தலையிட்டு நீதிபரிபாலனம் செய்வது அன்று அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை. உடன்கட்டை ஏறுதல் முதலானவற்றை அவர்கள் தடை செய்திருந்தாலும் கூட இங்கு நிலவிய சாதி, மத அநீதிகள் போன்றவற்றில் தலையீடு செய்து பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வது பிரிட்டிஷ் அரசின் நோக்கமாக இருக்கவில்லை.. அவர்களின் ஒரே நோக்கம்  காலனியச் சுரண்டல் மட்டுமே. தோள் சீலைப் பிரச்சினை, பெண்கள் விற்கப்படுதல், குடும்பம் குடும்பமாக ஆண்கள் உட்பட அருகிலுள்ள இலங்கை போன்ற நாடுகளில் தோட்டச் சாகுபடிகளுக்காகப் பிடித்து அனுப்பப்படுவதன் மூலமாகப் பெரிய அளவில் பணம் சம்பாதிப்பது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருந்த காலம் அது. சில கிறிஸ்தவப் பாதிரிமார்களூம் கூட அப்படி இலங்கை முதலான நாடுகளில் தோட்டச் சாகுபடிக் கூலி அடிமைகளாக ஆட்களை ஏற்றுமதி செய்ததற்கும் ஆவணங்கள் உண்டு.

பெண்கள் இவ்வாறு பெரிய அளவில் அரசாணைகள் மற்றும் அதிகாரங்களின் ஊடாகத் தேவதாசிகளாகவும், அடிமைகளாகவும் ஆக்கப்பட்டது தமிழகம் உட்பட இந்தியத் துணைக் கண்டத்தில் வெகு காலமாகவே இங்கு நடந்து கொண்டிருந்ததையும் நாம் மறந்து விடக் கூடாது. தஞ்சைப் பெரிய கோவிலுக்கு ராஜராஜ சோழன் இப்படியாக 400 இளம் பெண்களைக் கொண்டுவந்து அவர்களைத் தேவதாசியர்களாக ஆலயச் சேவைக்கு நியமித்த வரலாறை  நாம் அறிவோம். இவர்கள் எல்லாம் பாலியல் வன்முறைக்குப் பயன்படுத்தப்பட்டனர் என்பதெல்லாம் பொய் எனச் சொல்லும் சில தமிழ்த் தேசியக் கதையாடல்கள் எல்லாம் அபத்தமானவை. தமிழ்ப் பழமையின் பெருமைகளைச் சொல்ல இங்கே சங்க காலம், பெருங் காப்பியங்கள் என நமக்கு வேறு ஏராளமான அடையாளங்கள் உண்டு. அத்தோடு நிறுத்திக் கொள்வது நலம்.

திருக்காளத்தி கோவிலில் இப்படி தேவதாசியாக்கப் பட்டவர்களைக் குலோத்துங்க சோழன் தன் அரண்மனைக்குக் கடத்திச் சென்றதையும், அதற்கு எதிராக மக்கள் போராடியதையும், வேறு வழியின்றி மீண்டும் அந்தப் பெண்கள் கோவிலுக்கே திருப்பி அனுப்பப்பட்டதையும் பற்றி நான் முன்பே எழுதியுள்ளேன்.

இந்த நாவல் குறிப்பிடுக் காலத்திலும் இப்படி ஏராளமாக நடந்தன. மூட்டை மூட்டைகளாகக் குவித்து வைக்கப்பட்டுள்ள தஞ்சை மராட்டிய மன்னர் காலத்து மோடி ஆவணங்களில் மிகச் சிலவே இன்று அச்சிலும், ஆய்விலும் இடம் பெற்றுள்ளன. அவற்றை வாசித்தாலே எந்த அளவிற்கு அக்காலத்தில் இந்தக் கொடுமைகள் அரங்கேறின என்பது விளங்கும். ஒரு சிறுமியை அவளின் வீட்டாரே ஒரு தேவதாசியிடம் கொண்டுவந்து விடுகின்றனர். மூன்றரை ரூபாய்க்கு அந்தச் சிறுமிக்கு ஒரு ஆடையை எடுத்துக் கொடுக்கும் அந்த தேவதாசி அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு மகளை அழைத்துச் செல்லச் சொல்கிறாள். சில காலத்திற்குப் பின் அவளை அவர்கள் மீட்க வந்தபோது அந்தப் பெண்ணை அரசாங்கத்தார் அபகரித்துச் சென்றிருந்த வரலாறு ஒன்றை மோடி ஆவணங்களில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் நான் பதிவு செய்த்து உண்டு, இப்படியான உண்மைக் கதைகள் இன்னும் நிறைய உண்டு. நினைவில் உள்ள ஒரு சிலவற்றை இங்கே பகிர்வது அன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும்.. 

தஞ்சை தெற்கு வீதியில் ‘மங்கள் விலாசம்’ என்றொரு மராட்டிய மன்னர்களின் காலத்திய கட்டிடம் இன்றும் உண்டு. இரண்டாம் சிவாஜி (1832 – 1855) காலத்தில் ஓய்வுபெற்ற அரண்மனைத் தேவதாசிகள் தங்கள் பிள்ளைகளுடன் வாழ்வதற்காக அது ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு குறைந்த பட்ச ’பென்ஷன்’ தொகையை அவர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி கொடுத்து வந்தது. அந்தப் பெண்கள்  விபச்சாரம் செய்வதாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும்  ஒய்வூதியம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் ரெங்கசாமினாயகர் என்பவர் அரண்மனை அதிகாரியிடம் புகார் அளித்து  (1876 ஆகஸ்ட் 16)  விண்ணப்பம் ஒன்றை எழுதியுள்ளார். (மோடி ஆவணம் தொகுதி 2:162). அதேபோல தஞ்சையின் இரண்டாம் சரபோஜியின்  (1798 – 1832) காலத்தில் அவனது வைப்பாட்டிமார்கள் தங்குவதற்காக இருந்த ’கல்யாண மகால்’ திருவையாறு ஆற்றங்கரை ஓரம் இன்னும் உள்ளது.

பேஷ்வா ஆட்சிக்கு முன்னதாக இருந்த நாயக்கர் ஆட்சியிலும் அப்படித்தான் இருந்தது. கடைசி நாயக்க மன்னனான விஜயரங்க நாயக்கன்  வீழ்த்தப்பட்டு அரசதிகாரம் கைமாறும் நிலையில் முன்னூறுக்கும் மேற்பட்ட இப்படியான அரண்மனைத் தேவதாசியர் நெருப்பில் தம்மை மாய்த்துக் கொண்டதாகப் பதிவுகள் உண்டு. அவ்வளவு பேர்களும் விரும்பித் தீக்குளித்தனர் என்று சொல்லிவிடவும் முடியாது.

இப்படி நிறையச் சொல்லலாம். லக்ஷ்மி அவர்களின் நூல் குறித்து எழுத்த் தொடங்கி வேறு கதைகளைப் பேசுவதாக நினைக்க வேண்டாம். அக்கால வரலாற்றை நாம் புரிந்து கொண்டு இந்த நாவலை அணுகுவது நலம் என்பதற்காகத்தான் இவ்வளவும் சொன்னேன். அப்படியாகச் சின்ன வயதில் தனது தந்தையாலேயே அரண்மனைக்கு விற்கப்பட்ட ஒரு இளம் பெண்ணைத் தேடித் திரியும் அவளது இளம் கணவனின் கதியின் ஊடாக போன்சே வம்ச அரசர் காலத்திய நாவல் இது.

இனி இது குறித்துச் சில:

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டுள்ளது போல இந்த நாவலை எழுத லக்ஷ்மி அவர்கள் மிக விரிவான ஆய்வுகளைச் செய்துள்ளார். ஒரு கால கட்ட வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு உண்மை வரலாற்று எனும் வகையில் இதற்கு அவர் நிறைய உழைத்துள்ளது விளங்குகிறது. அந்தக் காலகட்டம், அன்றைய வாழ்க்கைமுறை, அதிகாரம் முற்றிலும் பறிபோகி பிரிட்டிஷ் ஆட்சியின் பென்ஷன் தொகைக்குள் நின்றுத் தம் பழைய ராஜ கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஆடம்பரங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் அரச குடும்பத்தினர் படும் சிரமங்கள் உட்பட வரலாற்றைப் புரிந்து உள்வாங்கிக் கொள்ள நூலாசிரியர் மேற்கொண்டுள்ள கடும் உழைப்பை நாம் புரிந்து கொள்கிறோம்.

அதேபோல வரலாற்றுப் புதினங்களை எழுதும்போது அக்காலகட்ட மொழியை வசப்படுத்திக் கொள்வதும் முக்கியம். அதிலும் வெவ்வேறு நிலையினர், வெவ்வேறு சமூகத்தினர் சந்திக்கும் தருணங்களில் படைப்பாளி கூடுவிட்டுக் கூடுபாயும் யுத்தியில் தேர்ந்தவராக இருப்பது அவசியம். லக்ஷ்மி இதற்கும் உரிய கவனம் செலுத்தியுள்ளதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ‘சபத்தினியர், மொயின் தொகை, மனுஷ்ய கிரயம், போக ஸ்திரீ, சக கமனம், சுரோத்ரியம், தேசஸ்த கிருஹஸ்தர் என அக்காலகட்ட மொழி மற்றும் பயன்பாட்டுச் சொற்கள் முதலான அனைத்து அம்சங்கள் குறித்தும் லக்ஷ்மி கவனம் கொண்டுள்ளதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சி உடன்கட்டை ஏறுதலைத் தடை செய்திருந்த நிலையில் அரசியர் இருவர் பிடிவாதமாக இருந்து, பிரிட்டிஷ் அதிகாரிகளை வெற்றிகரமாக ஏமாற்றி உடன் கட்டை ஏறியதை மிக விரிவாக மட்டுமல்ல ஒரு சாகசமாகவும் சொல்லிச் செல்கிறது நாவல். பூதப்பாண்டியனுடனுடன் சிதை ஏறிய பெருங்கோப் பெண்டு முதல் விரும்பி உடன் கட்டை ஏறிய வரலாறுகள் இந்தியாவில் உண்டு. ஆனாலும் பெரும்பாலான உடன்கட்டை ஏறல்கள் கட்டாயமாகத்தான் நடந்துள்ளன. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் இதே அரச குடும்பத்தில், இதே தஞ்சையில் நடந்த இன்னொரு உடன்கட்டை ஏறலையும் நாம் இங்கே ஒப்பிட்டுப் பார்த்தல் தகும். அதுவும் இதேபோல ஒரு முக்கியமான வரலாற்று நாவலாக உருப்பெற்ற ஒன்றுதான். தமிழின் முதல் நாவலாசிரியர்களில் ஒருவரான மாதவையாவின் ‘க்ளாரிந்தா’ நாவலில் ஒரு சிறுபெண் தன் கிழக் கணவனுடன் சிதை ஏற இயலாது என அழுது அடம்பிடிக்கையில் சொத்தைக் கைகொள்ளத் துடிக்கும் உறவினர்கள் அவளுக்கு மயக்க மருந்து கொடுத்துச் சிதையில் தள்ளிவிட்ட வரலாறும் இதே தஞ்சையில்தான் நடந்துள்ளது. பெரும்பாலான உடன் கட்டை ஏறுதல்கள் அப்படியும் நடந்துள்ளன. க்ளாரிந்தா வரலாற்றில் அவளை அப்போது பிரிட்டிஷ் பிரதிநிதியாக மானம்புச்சாவடியில் இருந்த லிட்டில்டன் காப்பாற்றி விடுகிறார். ஆனால் லக்ஷ்மியின் இந்த நாவலில் பிரிட்டிஷ் அதிகாரிகள் தோற்றுவிடுகின்றனர். அரசியர் வெற்றி பெறுகின்றனர்.

மன்னர்கள் தம் அந்தப்புரங்களில் அதிகாரபூர்வமான மனைவியர் தவிர நூற்றுக் கணக்கான பெண்களையும் வைத்திருந்தனர். ஒரு அரசன் எதிரி நாட்டரசனுடனான போரில் தோல்வியுற்று இறக்க நேரும்போது பல நேரங்களில் அவர்கள் நூற்றுக் கணக்கில் உடன்கட்டை ஏறியதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இறந்தபோது 47 பெண்களும், மதுரையில் திருமலை நாயக்கர் இறந்தபோது 200 பெண்கள் தீக்குளித்ததும் வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே தஞ்சையில் இந்த மராட்டிய மன்னர்களுக்கு முன்பாக இங்கு அரசாண்ட நாயக்க மன்னர்களில் கடைசியாக ஆண்ட விஜயரங்க நாயக்கருடன் 300 அந்தப்புரப் பெண்கள் தீக்குளித்தனர் என்றும் வரலாற்றுப் பதிவுகள் உண்டு. இந்த எண்ணிக்கைகள் ஒருவேளை மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இப்படி அதிகம் பேர்கள் அக்கால மன்னர்களுடன் உடன்கட்டை ஏறியது அல்லது ஏற்றப்பட்டது  நடந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின்தான் அது முடிவுக்கு வந்த்து.

இந்த உடன்கட்டை ஏறல்கள் எல்லாம் விரும்பி நடந்தவை எனச் சொல்ல இயலாது. ஆனால் அதே நேரத்தில் எல்லாமே கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டவை என்றும் சொல்ல இயலாது என்பதற்கு சங்க இலக்கியத்தில் காணப்படும் பெருங்கோப் பெண்டு ஒரு எடுத்துக் காட்டு, ஆனால் பல நேரங்களில் அவை கட்டாயமாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. அதைச் சட்டபூர்வமாக பிரிட்டிஷ் ஆட்சி தடை செய்தது என்பதை நாம் தவறெனச் சொல்லிவிட இயலாது. இந்த நாவலில் பிரிட்டிஷ் ‘ரெசிடன்ட்’ அதிகாரி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அமரசிம்மனுடன் அவனது ராணிகள் உடன்கட்டை ஏறுவதைத் தடை செய்தபோது அவர்களின் கண்காணிப்பை மீறி அவர்கள் உடன்கட்டை ஏறியதை ஒரு வீர சாகசம்போலச் சித்திரித்திருப்பது விவாதத்திற்குரிய ஒன்றுதான். நூல் வெளியீட்டின்போது கவின்மலர் இந்த அம்சத்தைச் சுட்டிக்காட்டினார்.

இதை இங்கே பதிவது என்பதை ஒட்டு மொத்தமாக இந்த நாவல் அப்படியான ஒரு தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது என்கிற பொருளில் அல்ல. பேஷ்வா ஆட்சியின் ஊழல்கள், அநீதிகள். ஆடம்பரங்கள், எளிய மக்களுக்கு எளிதில் நீதி கிடைக்காமை ஆகியவற்றைப் பதிவு செய்வதுதான் இந்த நாவல். லக்ஷ்மி பால கிருஷ்ணன் நூல் முழுக்க இவற்றை அழுத்தமாகவே பதிவு செய்கிறார். கடுமையாகவே விமர்சிக்கவும் செய்கிறார். சரஸ்வதி மகாலை உருவாக்கிய இரண்டாம் சரபோஜி மன்னரைப் பெரிய அளவில் புகழ்வது கொண்டாடுவதே இங்கு வழக்கம். அப்படி எல்லாம் இந்த நாவலில் அவரோ இல்லை மராட்டிய அரசர்களோ புகழாரம் சூட்டப்படவில்லை. இப்படிப் பெண்களைச், சிறுமிகளை அந்தபுறத்திற்கு விலைக்கு வாங்கும் கொடூரத்தை கடுமையாக விமர்சிப்பதே இந்த நாவலின் அடிப்படை நோக்கமாக உள்ளது. இப்படிப் பெண் குழந்தைகளை அரண்மனைக்குக் ’கிரயம்’ பண்ணிக் கொடுப்பது (மனுஷ கிரயம்) எத்தனை அநீதி, இந்த அம்சத்தில் பேஷ்வா ஆட்சி எத்தனை கொடூரமாக இருந்தது என்பதை சுட்டிக் காட்டுவதில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. பதவி போனாலும் அரசப்பரம்பரையினருக்கு ஆடம்பரங்கள் போவதில்லை, வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வது குறையவில்லை. இரண்டாம் சரபோஜி மன்னர் வாய்ப்புக் கிடைத்தபோது உலகிலேயே பெரியது எனச் சொல்லப்படும் கல்வெட்டு ஒன்றை தஞ்சைப் பெரிய கோவிலின் மேற்கு மூலையில் செதுக்கித் தஞ்சை மராட்டிய மன்னர்களின் வம்சாவெளியைப் பதிவதற்குத் தவரவில்லை என்பதை எல்லாம் லக்ஷ்மி இந்த நாவலின் ஊடாகப் பதிவு செய்து விடுகிறார்.

பாத்திர உருவாக்கங்கள் அனைத்துமே மிகச் சிறப்பாகப் படைக்கப் பட்டுள்ளதோடு அக்கால சொல்வழக்குகள் பொருத்தமான இடங்களில் சரியாகப் பயன்படுத்தப்படுவது, பிரிட்டிஷ் அதிகாரிகள் மன்னர்களுக்கு மரியாதை கொடுப்பதுபோலக் காட்டிக் கொண்டாலும் ஆட்சி அதிகாரம் தங்களிடம்தான் உள்ளது என்பதைக் கறாராக வெளிப்படுத்துவது என்பதெல்லாம் இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. வளம் மிக்க உரைநடை ஒன்று நூலாசிரியருக்குக் கைவந்துள்ளது இங்கே குறிப்பிடத் தக்கது. மனைவி கிரயத்திற்கு விற்கப்பட்டு அரச மாளிகைக்குக் கொண்டு போகப்பட்டது உறுதியான பின்னும் அவளைத் தேடி அலையும் சபாபதி பாத்திர உருவாக்கமும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. 

தமிழக வரலாற்றின் ஒரு குறிப்பான காலகட்டத்தின் உண்மை வரலாற்றை மிகச் சிறப்பாக ஒரு நாவலாக்கியுள்ளார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன்.

  • நன்றி ‘புத்தகம் பேசுது’ ஜனவரி 2022 இதழ்

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், இலக்கியம், பெண்ணியம், மராட்டிய மன்னர் வரலாறு, வரலாறு, விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

1 Response to லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் ‘ஆனந்தவல்லி’ நாவல் குறித்துச் சில – அ. மார்க்ஸ்

  1. Pingback: திரும்பிப் பார்க்கிறேன் | மலர்வனம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s