புரட்சிக்கில்லை கட்டுசெட்டு…



தமிழில் கதை சொல்லுதல் என்பது ஒரு வாழ்க்கைமுறை, அதன் வழியே சமூக மேம்பாடு குறித்தும் மனித வாழ்வில் இயற்கையில் ஏற்டுகின்ற, ஏற்படுத்தப்படுகின்ற சிடுக்குகள் உள்ளிட்டவைகள் குறித்த அரசியல் ரீதியான பயன்மிகு விவாதத்தைக் கிளப்ப அது உதவுகின்றது என்ற கருத்தாக்கத்தின் மீதான நம்பிக்கை குறையும்போதெல்லாம் நம்மவர்களின் சில படைப்புகள் மற்றும் முயற்சிகள் அந்த நம்பிக்கையை வலுவடையச் செய்துவிடுவது நமக்கான நல்வாய்ப்புகளில் ஒன்று. அந்த வகையில் சமகாலத்தில் லஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய “ஆனந்தவல்லி” என்ற நாவல் நம்முடைய கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது.

இங்கேதான் நாம் வாழ்ந்துகொண்டிருந்தாலும் முன்பு இங்கேயே நடந்த வரலாற்றுச் செய்திகளை, அந்த பரிச்சயப்படாத வாழ்க்கை முறையின் நுணுக்கங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டியத் தேவை நமக்கிருக்கிறது. இந்த நாவலில் “வருங்காலத்தில் நடக்கப் போவதை நம்மால் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் நம் காலத்துக்கு முன் நடந்ததைப் பார்த்துப் புரிந்துகொண்டு, அதே போல எதிர்காலத்திலும் வரக்கூடும் என்று திட்டமிடவே நாம் முந்தைய வரலாற்றைப் படிக்கிறோம்” என்று லஷ்மி பாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது நிரூபிக்கப்பட்ட வாதம். அவ்வாறான வரலாற்றின் மீது அமர்ந்துகொண்டு கட்டியமைக்கப்படுகின்ற புனைவிற்கு தனித்துவமான மகத்துவம் இருக்கிறது. அந்த வகையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த தஞ:சை மராட்டிய அரச வம்சத்தில் நடப்பதாக எழுதப்பட்ட ஆனந்தவல்லி என்கிற வரலாற்று நாவலை நமக்களித்திருக்கின்ற ஆசிரியரின் தனிச்சிறப்பையும் நாம் உற்று நோக்கவேண்டியிருக்கிறது.

குழந்தை மணமும், பெண்களை அடிமை வேலைகளுக்கென அரச குடும்பத்திடம் விற்பனை செய்வதும், உடன்கட்டை ஏறுகின்ற முறையும் இருந்துவந்த காலக்கட்டத்தில், சபாபதி என்கிற பிள்ளைவாளுக்கும் மீனாட்சி (எ) ஆனந்தவல்லி ன்கிற ஐந்து வயது கள்ளசாதிக் குழந்தைப் பெண்ணுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. குழந்தை வளர்ந்து ருதுவான பின்பாகத்தான் மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பப்படுவாள் என்கின்ற நிலையில் சபாபதி தனது மனைவியான குழந்தை மீனாட்சியை விட்டுவிட்டு தனது ஊருக்குப் போகிறான். சில ஆண்டுகளில் மீனாட்சியை அவளது தந்தை அவளுக்குத் திருமணமாகிவிட்ட செய்தியை மறைத்து பணத்திற்காக அரச குடும்பத்திற்கு விற்றுவிடுகிறான். செய்தி அறிந்த சபாபதி அரசிடமிருந்து தனது மனைவியை மீட்க வேண்டும் என்று முனைகிறான். இது ஒரு சுருக்கமான கதைவிளக்கம்.

இதை மையமாக வைத்து லஷ்மி பாலகிருஷ்ணன் தஞ்சை மராட்டிய வம்சத்தின் வாழ்க்கை முறை, அவர்கள் பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சிக்கு பலியாகி அதிகாரமிழந்து வீழ்ச்சி அடைந்தது, அந்த அரசர்களின் அளவற்ற அந்தப்புறப் பெண்களுடனான சல்லாபங்கள், அதற்காக அவர்கள் மெனக்கெடும் “அகடுதகடுகள்”, அரசர்களளின் திருமண முறைகள், அரசவம்சத்து மனைவிமார்களின் பழக்கவழக்கங்கள், அவர்களின் படோடாபம், ஊற்றெடுக்கும் மேனியழகு, தங்களது வாரிசுகளின் மதிப்பைக் கூட்டுவதன் பொருட்டு உடன்கட்டை ஏறத் துணிதல் என அரசவம்சச் செய்திகள் ஒருபுறமும், ஆனந்தவல்லியின் தந்தையின் கேடான நடைமுறை, நீண்ட பட்டியலான அவர்கள் குடும்பத்தாரின் அக்காலத்தைய வாழ்க்கைப் பயணம், சபாபதியின் தந்தை மற்றும் அவர்களின் குடும்பம் மறுபுறமும் என வைத்துக்கொண்டு பின்னியிருக்கும் தொடர் கன்னிகள் ஏராளம். இந்த பாங்கு நாவல் என்ற தன்மைக்கு சிறப்பான முறையில் வலு சேர்த்திருக்கிறது.

எந்த ஒரு புனைவின் மையச்சரடோடு தான் கற்றறிந்த கல்வி மற்றும் அனுபவ ரீதியாலன விசயங்களைப் பொருத்திச் சொல்வது ஒரு ஆகச்சிறந்த கதை சொல்லல் முறை. வாசகனை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது இந்த இடம்தான். அந்த வகையிலும் நாவலாசிரியர் தனது பங்கினை நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கிறார். இந்நாவலில் அது சார்ந்து பல இருந்தாலும் கீழ்கண்டவைகளை நாம் காணலாம்…

“அன்பு என்பதை உன்னதமானதொரு விஷயமாகவே எப்போதும் நினைப்பது அறியாமை”

“மேலிருந்து இறங்க இருக்கிற வழி ரெண்டுதான், துரோகம், சாபம். எல்லா ராஜ்யத்தோட கதையும் இந்தப் பாதைலதான் பெரும்பாலும் போகுது”

“இதோபார் பாவனி! நல்லதை யாரும் சொல்லலாம். கேட்பதற்கு நம் காதுகள் திறந்திருக்க வேண்டும். கூடவே இருதயமும் கொஞ:சம் விசாலமாக இருக்க வேண்டும். இன்றைக்கு என்ன வேண்டும் என்று மட்டுமே யோசிப்பவன் நல்ல தலைவனல்ல, தலைமுறைகள் தாண்டியும் யோசித்தாக வேண்டும்”

“உறக்கமும் விழிப்பும் இறப்பும் பிறப்பும் போல என்று சொல்லப்படுகிறது. ஆனால் மரணம் தரும் பயத்தை உறக்கம் தருவதில்லை. மீண்டும் மறுநாள் காலையில் எழுந்துவிடுவோம் என்ற பரிபுரண நம்பிக்கையுடன், அன்றைய நாளின் களைப்பனைத்தையும் போக்கும் மருந்தென உறக்கத்தைத் தழுவுகிறோம். மரணத்தின் பின்னான பிறப்பைப் பற்றி யாருக்கும் அத்தனை நிச்சயம் இல்லை”

“அடிபோடி அறிவு கெட்டவளே… நாம வாழறதுக்கான மொத்த அர்ததமும் காலுக்கு நடுவால இருக்குற ஒத்த ஓட்டைக்குள்ளரதான் ஒளிந்திருக்கா என்ன?”

போன்றவை உதாரணங்கள். லஷ்மியின் வார்த்தைப் பொறியியலில் மிகவும் தேர்ந்து தெரிகிறார். அதில் நேர்த்தியைப் புகுத்துவதுமான இவரது எழுத்தாற்றல் மெச்சத்தக்கது. 200 ஆண்டுகளுக்கு முன்பான அரச மற்றும் எளிய மக்களது வாழ்வியலின் காட்சி அமைப்புகள் மற்றும் அவர்களுடைய உரையாடல்கள் குறித்தும் விவரிக்கும் தன்மை, அதிலும் மிகமிக எளிய சொல்லாடல்களை வைத்து அதை வாசிக்கின்ற நம்மை வியப்புறவைக்கிறது. மிகச் சாதாரணமான சம்பவம் எனக் கடந்துபோய்விடுகின்ற ஒரு விசயத்தின் மையத்தை வைத்து மிகப்பெரிய அரசியல் கோட்பாடுகளை உருவாக்கிவிட முடியும். அது எழுத்தாளர்களால் மட்டுமே சாத்தியம். சபாபதி என்கிற ஒருவனின் மனைவி சட்டத்திற்குப் புறம்பாக அரசிடம் விற்கப்படுகிறாள். அதைத் தவறெனச் சுட்டிக்காட்டி தனது மனைவியை விடுவிக்க வேண்டி அரசிற்கு சபாபதி விளக்கக் கடிதம் எழுதுகிறான். அந்தக் காலத்தில் பெண்களை விற்பதும் அரசர்கள் வாங்குவதும் நடைமுறையில் ஏற்றுக்கொண்ட சட்டம் என்பதால் இதை மேலோட்டமாகப் பார்த்தால் நமக்கு சாதாரணமான விசயமாகத் தெரியலாம். ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் குழந்தையை மணம் செய்த ஒருவன் அவளின் மீது காதல்கொண்டு, அவள் வளர்ந்து பெரியவளாகி வருவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பவனின் ஏமாற்றம் ஒருபக்கம். அரசரிடம் சிக்கிய பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் பாலியல் ரீதியாக அவள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டிருப்பாள் என்றும் தெரிந்தும்கூட அவனை அரசையே எதிர்த்துக் கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது புரட்சிவிதை என்பது அவரவர் மனத்திற்குள் இயற்கையாகவே விதைக்கப்பட்டுக் கிடக்கும், அதை வளர்த்தெடுப்பது அவன் பெறுகின்ற கல்வி மற்றும் மேம்பட்ட சமூகத்தின் கடமை என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.

நாவலில் இரண்டு இடம் நெருடுலை ஏற்படுத்துகிறது. அரசனின் மரணத்தின் பின் உடன்கட்டை ஏற நினைக்கும் மனைவி குறித்த விவாதம் வரும்போது “நானும் ஐரோப்பிய கல்வி உடையவன் என்றாலும் அடிப்படையில் ஒரு இந்து. என்னால் சக கமனத்தைத் தடை செய்வதை, அதிலும் என் சொந்தக் குடும்பத்திலேயே செய்வதை முழு மனதோடு ஏற்க இயலாது” என்று ஒரு அரசர் குறிப்பிடுவதில் “இந்து” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டியதில்லை. 200 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வார்த்தை அத்தனை முக்கியத்துவமாக இருந்திருக்குமா என்ற கேள்விக்காகக்கூட இல்லை, சமகாலத்தில் அந்த வார்த்தையை வைத்து எத்தனை அளவு வரலாற்றைத் திரிக்க முயற்சி செய்கிறார்கள்! அவர்களுக்கு இந்த நாவலில் இந்த இடத்தில் வருகின்ற வார்த்தை வலு சேர்த்துவிடும் என்பதால் இந்த முரண்பாட்டை முன்வைக்கிறேன். தனது முன்னுரையில் “வைதீக மதம்” என்றே சொன்னவர் கதைக்களத்தில் இந்து என்று தனித்துச் சொல்லியிருக்கத் தேவையில்லை என்பது எனது கருத்து. இது ஒன்று.

மற்றொன்று, “தன்னை நாவல் எழுத
“அனுமதித்து” என்று தொடங்கும் தனது அதே முன்னுரையின் நிறைவுப் பத்தியில் லஷ்மி பாலகிருஷ்ணன் பயன்படுத்திய அந்த “அனுமதித்து” என்ற வார்த்தையை நான் கண்டிக்கிறேன். எதற்காக அந்தக் கண்டனம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
மற்றபடி தமிழில் எழுத்தாற்றலும், பொருட்புலமையும் பொதிந்து கிடக்கின்ற பெண்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை தனது முதல் நாவலின் மூலமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றார் தோழர் லஷ்மி பாலகிருஷ்ணன். இவரிடம் எதிர்பார்க்க இன்னுமின்னும் நிறைய இருக்கிறது. தமிழிலக்கியம் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது அவரின் படைப்பை வரவேற்க. அவர்களுக்கு எனது வாழ்த்தும் பாராட்டும்.


-விசாகன்.

நன்றி Visagan Theni தோழர்

#ஆனந்தவல்லி_நாவல்
#ஆனந்தவல்லி

Advertisement

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், வரலாறு, விமர்சனம். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s