நண்பர்களே, ஒரு நல்ல புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் நம்மை என்ன செய்துவிட முடியுமெனில் , சரியான புரிதலுடன் அன்பானவர்களாக கனிவானவர்களாக மேலும் பொறுப்பானவர்களாக சிறந்த உயரிய மனமாற்றத்தை விளைவிக்கும் என்பதை இன்று நான் வாசித்த நூலொன்று எனக்கு மீண்டும் உணர்த்தியது. ” எழுதாப் பயணம் ‘என்ற லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய (ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் ) நூலினை தோழர் எழுத்தாளர் எஸ் பாலபாரதி டிபிஐ வளாகத்தில் நேற்று என்னை பார்த்த போது அவரது ” மரப்பாச்சி சொன்ன ரகசியம்”நூலுடன் சேர்த்துப் பரிசளித்தார். நான் முதலில் அவரது இணையர் லக்ஷ்மி எழுதிய நூலையே வாசிக்கத் தொடங்கினேன். அப்போது என்னை மீறி சில இடங்களில் கண்ணீர் பெருகும் போதெல்லாம் சற்று நேரம் வாசிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்து விடுவதும் அந்நேரத்தில் பின் அட்டையில் உள்ள மோனலிசாவின் சோகம் கலந்த புன்னகையாய் தோற்றமளிக்கும் லக்ஷ்மியின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருப்பதுமாய் படித்து முடித்தேன்.
காரணம் நூலில் அவர் பேசி இருக்கும் விஷயங்கள்
ஆட்டிசக் குழந்தையான தன் அருமை மகனின் வளர்ப்பு பற்றி கல்வி பற்றி. . இந்த சமூகமும் பெற்றோர்களும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் ஆசிரியர்களும் இந்த குழந்தைகளை எவ்வாறு புரிந்துகொள்வது அரவணைத்துக் கற்பிப்பது என்பவற்றிற்கு அவசியமான தேவையான புரிதல்களை இந்நூல் உணர்வுப் பூர்வமாகப் பேசுகிறது .
நான் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்த போது தினமும் பேருந்தில் முட்டுக்காட்டில் உள்ள சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு ஓர் அம்மா தன் மகனை அழைத்துச் சென்று அழைத்து வருவதை பலமுறைப் பார்த்திருக்கிறேன். எப்போதும் அந்த அம்மா பின் இருக்கையில்தான் தன் மகனுடன் அமர்ந்திருப்பார் . பதின் பருவத்தில் இருந்த அவரது மகனோ ஜன்னலில் கைகளை நீட்டுவார் தலையை நீட்டிக்கொண்டு திடீரென சப்தமிடுவார். இருப்பினும் தன் மகனை மிகவும் சமாளித்து அந்த அம்மா ஒவ்வொரு நாளும் அழைத்துச் சென்று அழைத்து வருவதை பார்த்திருக்கிறேன். ஒரு நாள் அந்த பையன் தன் தாயை பேருந்தில் பளார் பளார் என்று அறைய ஆரம்பித்துவிட்டார் கன்னத்தில். அத்தனை அறைகளையும் வாங்கிக் கொண்டு அந்த தாய் புன்னகையுடனே இருந்தார். சிறிது நேரம் கழித்து அந்தப் பையன் அந்த அம்மாவின் கன்னத்தை தடவிவிட்டு அவருடைய கையை இறுகி பற்றிக் கொண்டு அழுததைப் பார்த்ததும் என்னால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. வீடு சேர்ந்தும் என் கண்கள் குளமாகி கொண்டே இருந்தன. என்னால் அந்த மகனை அவருடைய அந்த தன்மையை சிறிது நேரம் தாங்கிக்கொள்ள முடியவில்லையே அந்த தாய் எப்படி என நினைத்து நினைத்து கலங்கினேன்.
லக்ஷ்மி அப்படிப்பட்ட தன் அழகு மகனை அவர் எப்படி போற்றி பாதுகாத்து கற்றுத் தந்து வளர்த்து வருகிறார் என்பதை மென்தமிழில் உண்மையாகவும் அதே சமயத்தில் மிகவும் வலிமை மிக்க மனத்தோடும் எல்லாருக்கும் பயன்பட வேண்டும் என்ற பரந்துபட்ட உயரிய நோக்கில் பதிவு செய்திருக்கிறார் இந்நூலில்.
நாள்பட நாள்பட தேன் இறுகி படிகமாக மாறுவதையும் அதை “விளைந்த தேன்’ என சித்த மருத்துவம் குறிப்பிடுவதை தன் செல்ல மகனின் மேலான நடத்தை மாறுதல்களுடன் ஒப்பிட்டு சிலாகித்து மகிழ்கிறார் இந்த தாய். எத்தனை பயிற்சிகள் எத்தனை பள்ளிகள் எத்தனை போராட்டங்கள் பயணங்களில் பட்ட இடர்கள்தான் எத்தனை எத்தனை !
எல்லாவற்றையும் கடந்து பலவகையான கற்பித்தல் முறைகளைப் பின்தொடர்ந்து கொஞ்சமும் சளைக்காது தன் மகனை எழுதவும் படிக்கவும் பாடவும் தொடர்ச்சியாக கற்பித்து வரும் அந்த தாயின் புகைப்படத்தை நான் படித்துக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி பார்த்துக்கொண்டேன். அவர் எழுதாத இன்னும் எத்தனையோ செய்திகளைப் பேசின மர்மப் புன்னகையுடன் பின் அட்டையில் இருக்கும் அவரது படம் என்னிடம்.
அவர் ஏன் இந்த நூலை எழுதினார் என்பதற்கான காரணத்தை ஓர் ஆசிரியராக எளிமையாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நண்பர்களே கல்வியாளர்களே என்னுடைய கோரிக்கை எல்லாம் ஒன்றே ஒன்றுதான் . அனைத்து ஆசிரியர்களும் இந்த நூலை படிக்க வேண்டும் .ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் எல்லாம் இந்த புத்தகத்தை பாடநூல் ஆக்க வேண்டும். ஏனெனில் இவ்வகை சிறப்புக் குழந்தைகளை நாம் ஓரளவேனும் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்கவும் இவ்வாறான குழந்தைகளை எவ்வாறு அணுகுவது என்பதற்கான நெறிமுறைகளையும் அவர் எளிமையாக தொகுத்து தந்திருக்கிறார் நமக்கு. இந்நூலில் உள்ள அனைத்தையும் இங்கே சொல்வதென்பது எனக்கு சாத்தியமில்லை. எனவே நண்பர்களே , நீங்களே வாசிக்கும் போது தான் இந்நூலின் முக்கியத்துவத்தையும் ஆட்டிசக் குழந்தைகளின் உலகை கடுகளவேனும் அறிந்து கொண்டு கனிவுடன் அவர்களின் கரங்களைப் பற்றி எவ்வாறு தோழமை பாராட்ட வேண்டும் என்பதையும் நம்மால் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும் என்பது திண்ணம்.