மைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா?


மீண்டும் அதே  வட இந்தியப் பெண். வேறொரு விவாதம்.

“தமிழர்கள்  அடுத்தவங்களோட நல்ல விஷயம்  எல்லாத்தையும் தங்களோடதுன்னு  சொந்தம் கொண்டாடுவாங்க.  அதுனாலயே பலருக்கு அவங்களைப்  பிடிக்கறதில்லை”

“அப்படி எதுனா  ஒரு விஷயம் சொல்லேன்  பாப்போம்”

“கர்நாடக  சங்கீதத்தையே எடுத்துக்குவோம், அது கன்னடர்களோடதில்லையா? உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா? அதுனாலதான் கன்னடர்களுக்கெல்லாம் உங்களைப் பிடிக்கறதில்லை”

அம்மா தாயே, நீ சொல்வதில் இரண்டு இமாலயப்  பிழைகள் உள்ளது. ஒன்று  கன்னடர்களுக்கு தமிழர்களைப்  பிடிக்காததன் காரணம் சங்கீதமில்லை -அதன் ஆணி வேர் தண்ணீர்ப் பங்கீட்டிலும், சில சில்லறை எல்லைத் தகராறுகளிலும் உள்ளது.

அடுத்தது கர்நாடக  என்ற வார்த்தையை இன்றைய பொருளில் புரிந்து  கொள்ளக் கூடாதம்மா. பிரிட்டிஷார் வரும் முன்பு ஒட்டு மொத்த தக்காண பீடபூமியுமே  கர்நாடகம் என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டு வந்தன. எனவே தென்னிந்தியா முழுமைக்குமான செவ்வியல் இசைதான் கர்நாடக சங்கீதம். கன்னடரான புரந்தரதாசரின் பாடல்கள், தெலுங்கிலமைந்த தியாகராஜர் முதல் பக்த ராமதாசர் வரை அனைவரது பாடல்கள், மலையாளியான சுவாதித் திருநாளின் கிருதிகள்,  ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் தமிழ்ப்பாடல்கள் என எல்லாவற்றுக்கும் கர்நாடக இசை என்ற குடையின் கீழ் இடம் உண்டு.

இன்னும் சொல்லப்  போனால் சங்கீத மும்மூர்த்திகள்  என்று போற்றப்படும் தியாகைய்யர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஷ்யாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருமே  பிறந்தது தமிழ்நாடுதான்  என்றாலும் மூவருமே தமிழ்ப்பாடல்களை இயற்றியவர்கள் இல்லை. தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலுமே அவர்களது திறமையை வெளிப்படுத்தினார்கள்.

இன்னமும் கர்நாடக சங்கீதத்தில் தமிழுக்கான இடம் ரொம்ப குறைவு. நாங்களும் தமிழிசை இயக்கமெல்லாம் நடத்திப் பார்த்தும் பெரிய முன்னேற்றமில்லை என்று பொருமிக் கொண்டிருக்கிறோம், நீ என்னடாவென்றால் என்னமோ எல்லாவற்றையும் நாங்கள் அபகரித்துக் கொண்டது போல சொல்கிறாய்.

கர்நாடகம் என்ற பெயரில் ஒட்டுமொத்த தென்னகமும் இருந்த போது மைசூர்தான் கலை உலகின் தலைநகரமாக இருந்தது. அங்கே நடைபெறும் நவராத்திரி/தசரா விழாவின் போது நடக்கும் வித்வத் சதஸ் எனப்படும் சபையில் தங்களின் திறமையை காண்பிப்பது என்பதே பெரும்பாலான கலைஞர்கள் புகழ் பெறக் காரணமாக அமைந்தது. மைசூர் சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப் பட்ட வித்வானாக விளங்குவது என்பது பெரிய விஷயம் என்பதால் பெரும்பாலும் தென்னகக் கலைஞர்களின் மையமாக மைசூரே இருந்து வந்தது.

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தமிழகம், கேரளம்(திருவாங்கூர் சமஸ்தானம் நீங்கலாக), ஆந்திரா (நிஜாமின் ஹைதராபாத் சமஸ்தானம் நீங்கலாக), கர்நாடகா(மைசூர் சமஸ்தான நீங்கலாக) ஆகிய எல்லாப் பகுதிகளையும் ஒன்று சேர்த்து மதராஸ் பிரசிடென்ஸி எனும் மாநிலம் உருவாக்கப் பட்டது. துறைமுக நகராக இருந்ததாலும், ஒரளவு மொத்த நிலப் பகுதிக்கும் மையப்புள்ளியாக இருந்ததாலும் சென்னை அந்த மாநிலத்தின் தலைநகராக்கப் பட்டது.

தலைநகரைத் தேடி அரசாங்க உத்தியோகஸ்தர்களும், அரசியல் செல்வாக்குப் பெற்றவர்களும் நகரத் தொடங்கினர். சமஸ்தானங்கள் பொலிவிழக்கத் தொடங்கிய காலகட்டமென்பதால் இப்போது கலைஞர்களுக்கு இத்தகைய செல்வாக்குள்ள தனி மனிதர்களின் போஷனையையே நம்பியாக வேண்டிய நிலமை. எனவே அவர்களும் சென்னையை நோக்கி நகர, இப்படித்தான் சென்னை தென்னகக் கலைகளின் முக்கிய கேந்திரமாக மாறியது.

இதில் தமிழர்களின் சதி என்ன இருக்கிறது? சென்னையிலேயே தழைத்து வளர்ந்தாலுமே கூட கர்நாடக சங்கீத மேடைகளில் தமிழின் இடம் பெரும்பாலும் துக்கடாக்களுக்கு மட்டுமே என்றிருக்கிறது(விதி விலக்காக மிகச் சில கலைஞர்களே கொஞ்சம் அதிகம் தமிழில் பாடுகின்றனர்). இந்த லட்சணத்தில் நீ சொல்வதைக் கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது.

நீள நெடுகப் பேசிவிட்டு அவளைப் பார்த்தேன். வழக்கம் போல் தோள்களைக் குலுக்கிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டாள். 😦

———

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in இலக்கியம், சமூகம், மூட நம்பிக்கை, மொழி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to மைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா?

  1. PPattian says:

    ஆனா இந்த கருநாடக சங்கீதத்தில இவ்ளோ மேட்டாரா.. கேள்வி கேட்ட அந்த பெண்ணுக்கு நன்றி.. இல்லைன்னா எனக்கும் இவ்ளோ விஷயம் தெரிஞ்சிருக்காதே..

    பகிர்வுக்கு நன்றி..

  2. ravee says:

    I heard same multiple times due to Karnataka people spread harted against TN people so ignorant people always ask questions like this .
    We have to learn about India’s issues instead of international issues . We never care about Water issues like Cauvery /Palar /Mullai Periyar but we care about Palestaine issue .

    Still i m learning about Indian issues ( north east issues ) 🙂

  3. //மீண்டும் அதே வட இந்தியப் பெண். //

    சுத்த கர்நாடகமா இருக்கும்போலருக்குதே அந்தப் பொண்ணு… (கர்நாடகம்ன்னா பழசுன்னு ஒரு அர்த்தம் இருக்குதா!)

    அப்பாலிக்கா அண்ணி நீங்களும் பேர மாத்தியாச்சா?! 🙂

  4. Naresh Kumar says:

    உங்க போராட்ட குணம் புடிச்சிருக்கு!!! ஆனாலும் அந்தப் பொண்ணு உங்களை பேச விட்டு வேடிக்கைப் பாத்துருச்சோ???

    எப்படியோ அதுனாலதான் எனக்கும் கொஞ்சம் விஷயம்லாம் தெரிஞ்சுது!!!

    தமிழ்நாட்டை விட்டுக் கொடுத்துடாதீங்க!!!

  5. ஜீவ்ஸ் says:

    கர்ண ஆடகம் – காதுக்கு இனியது , இசைந்தது.

    இதுக்கும் கர்நாடகாவுக்கும் சம்பந்தமே இல்லை

Leave a reply to PPattian Cancel reply