2017 June
வீட்டில் நானும் பாலாவும் தண்ணீர் பாட்டிலில் ஊத்தி வச்சு குடிக்கறவங்க. மத்தபடி காபி, டீயெல்லாம் டம்பளரில் உறிஞ்சு குடிக்கறதுதான். இதுவரை எந்த பிரச்சனையுமில்ல. இந்த முறை ஊருக்குப் போனப்ப அப்பா தண்ணீலேர்ந்து காபி,டீன்னு சகலத்தையும் அண்ணாந்து குடிப்பதை பார்த்து பய பயங்கரமா இம்ப்ரஸ் ஆகிட்டான் போல. மீண்டும் கோகிலாவில் கமல் சீடை சாப்பிடுவது போல் தூக்கிப் போட்டு வாயால் கேட்ச் பிடிப்பது ஒன்னுதான் பாக்கி. டம்பளர அவ்ளோ தூக்கிப் பிடிச்சு குடிக்கறேன்னு அமர்க்களம். ஒரு நாளைக்கு நாலு ட்ரெஸ் மாத்தலாம், தப்பில்ல.. நாப்பது ட்ரெஸ் மாத்தணும்னா ஞான் எந்து செய்யும்…:((:)))
2017 sep
விடுமுறை நாட்களில் கனிக்கு பொழுது விடியும்போதே இன்று நம்மை எங்கேனும் வெளியே கூட்டிப் போவார்களா இல்லை வீட்டிலேயே அடைத்துவிடுவார்களா என்ற கவலையோடுதான் விடியும். கண்ணை முழித்து முதல் ஆள் கண்ணில் பட்டதுமே“எங்க போறோம்?” என்றுதான் ஆரம்பிப்பான். சூரியன் மேலே கிளம்பக் கிளம்ப இந்தக் கேள்வியின் சுருதியும் ஏறிக்கொண்டே போகும். அவனே சில ஆலோசனைகளும் கொடுப்பான். “எங்க போறோம்? பீச் போறோம், ட்ரெயின்ல போறோம்” இப்படியாக சில சமயம் பேரம் பேசுவான். இரவு தூங்கப் போகும் முன் அன்றைய கணக்கு வழக்குகளைப் பார்த்து தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக அவனுக்கு நிச்சயமானால் குமுறிக் குமுறி அழத் தொடங்குவான். அன்றைக்கு எங்களுக்கு சிவராத்திரிதான்.
இன்று காலையில் எழுந்ததுமே “எங்க போறோம்?” என்று ஆரம்பித்தான். சற்று நேரம் பொறுத்து “கலைக்கோவில் போறோம்” என்றான். முதலில் ஒன்றும் புரியவில்லை. யோசித்தபிந்தான் புரிந்தது – கலைஞர் டிவியில் மாலையில் ஒளிபரப்பாகும் இசை/நாட்டிய நிகழ்வின் பெயர் அது என்பது. அடப் பாவி, வெண்ணிற ஆடை மூர்த்தி நடிகன் படத்துல இஸ்லாண்டு எஸ்டேட்ட தேடிட்டுத் திரிவாரே, அது மாதிரி இந்த கலைக்கோவில நான் எங்க போய் தேட? சொக்கா… சொக்கா.. :)))))
கனி கண்ணா. அப்பா அம்மாவை நிறைய காய்கறி பழம் சாப்பிடச் சொல்லு. அப்பதான் உன்னை வெளியில் கூட்டிப் போகத் தெம்பு வரும்.
கலைக்கோவில் போகணுமா. கில்லாடி டா நீ.